Total Pageviews

Monday, November 21, 2011

மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண் ஷர்மிளா ஷானு



மணிப்பூர் மாநிலம் சுதந்திரத்திற்கு முன்னும் சரி,சுதந்திரத்தற்கு பின்னும் சரி ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாத மலை மாவட்டமாகும். இதன் காரணமாக அங்கு நீண்ட காலமாக பிரிவினைகேட்டு பல தீவிரவாத குழுக்கள் போராடிவருகின்றனர். நெருப்பை நெருப்பால் அணைப்பது போன்ற முயற்சியில் இறங்கிய மத்திய அரசு ஆயுதம் எடுத்தவர்களை ஆயுதத்தாலேயே அடக்க முடிவு செய்தது. நாட்டில் எங்கும் இல்லாத சிறப்பு சட்டத்தை இங்கு கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் கைது செய்தாலும்,எவரை வேண்டுமானாலும் சுட்டுக்கொள்ளலாம் என்று அங்குள்ள ராணுவத்திற்கு சிறப்பு சட்டம் வழங்கப்பட்டது,இந்த சட்டத்தில் நீதித்துறை உள்ளீட்ட யாராலும் தலையிட முடியாது.
இந்த சட்டத்திற்கு பல அப்பாவிகள்தான் பலியானார்கள். மணிப்பூர் மக்கள் மனம் கசந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 2/11/2000 மாவது ஆண்டில் மாலோம் என்ற இடத்தில் அமைதிப்பேரணி செல்வதற்காக நின்று இருந்தவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். பலியானவர்களில் மத்திய அரசால் வீரவிருது பெற்ற ஷந்தர்மணிசிங் என்ற பள்ளி மாணவனும் உண்டு. இந்த பேரணிக்கு சென்று கொண்டு இருந்த ஷர்மிளா சானு என்ற பெண்ணிற்கு, இந்த சம்பவம் இடியாக வந்துதாக்க நிலைகுலைந்து போனார். ஆயுதத்தால் தாக்கியவர்களையும்,ஆயுதம் தாங்கியவர்களையும் எதிர்த்து எதுவும் செய்யமுடியாத நிலை. ஒவியராகவும், கவிஞராகவும், யோகா ஆசிரியராகவும் அமைதியாக சென்று கொண்டு இருந்தவரின் மனதில் உறுதி பிறந்தது,ஆக்ரோஷம் கிளர்ந்தது,பூவுக்குள் பூகம்பம் ஏற்பட்டது,காந்திய ஆயுதத்தை கையிலெடுத்தார். அந்த ஆயுதத்தின் பெயர் உண்ணாவிரதம்.

மணிப்பூர் மாநிலத்திற்கென போடப்பட்ட சிறப்பு சட்டத்தை கைவிடும்படி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துவக்கினார், அவர் உண்ணாவிரதத்தை துவக்கிய நாள் 5/11/2000. கடந்த 5 ந்தேதியுடன் இவரது சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு வயது 11 ஆகிவிட்டது. எப்படி இத்தனை வருடங்கள் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கமுடியும் என்ற கேள்விக்கு பதில்தான் ஷர்மிளா

சாகும்வரையிலான உண்ணாவிரதம் இருப்பது குற்றம் என கைது செய்த போலீஸ் அவரை கட்டாயமாக உணவு எடுத்துக்கொள்ளச் செய்யும் முயற்சியில் தோல்வி அடைய, டாக்டர்களின் உதவியுடன் மூக்கில் திரவ உணவை உட்புகுத்தினர். பிறகு நீதிமன்றம் கொண்டு சென்றனர், நீதிபதியும் உண்ணாவிரதத்தை விட்டுவிடுவதாக சொன்னால் விடுதலை செய்வதாக சொன்னார், ஆனால் முடியாது என்று இவர் சொன்ன பதிலால் ,தற்கொலை முயற்சிக்கான குற்றத்திற்காக ஒரு வருட சிறைத்தண்டனை பெற்று சிறைசென்றார். அங்கும் திரவ உணவுதான்
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவர் நேராக சென்ற இடம் வீடு அல்ல , பத்து பேர் கொல்லப்பட்ட அதே இடத்திற்கு சென்று மீண்டும் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். மீண்டும் போலீஸ் வந்தது,கைது செய்யப்பட்டார், நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார், உண்ணாவிரதத்தை கைவிடுகிறீர்களா என்று கேட்கப்பட்டார், ஒருக்காலும் முடியாது என்று பதில் தந்தார், மீண்டும் ஒரு ஆண்டு தண்டனை பெற்றார், மீண்டும் சிறை சென்றார், தண்டனை முடிந்ததும் மீண்டும் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இப்படியே பதினொரு வருடங்கள் முடிந்து போய்விட்டது. இடைப்பட்ட 11 வருடங்களில் மூக்கில் பொருத்தப்பட்ட உணவு குழாய் இவரது நிரந்தர அடையாளமாகிவிட்டது. திட உணவு இல்லாததால் எலும்புகளும்,உடல் தசைகளும் பலமிழந்து எலும்புக்கூடாய் போனார்,எழுந்து நடக்கமுடியாதவரானார். தற்போது 39 வயதாகும் ஷர்மிளாவின் உடல் நிலை மிக மோசமானதை அடுத்து கடந்த சில நாளாக தனி வார்டில் வைத்து சிகிச்சை தரப்படுகிறது. மாநில அரசு சிறப்பு சட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை,ஷர்மிளாவும் உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் இல்லை
தனது போராட்டம் காரணமாக பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பவர், தாயின் கண்ணீரும், வேண்டுகோளும் எங்கே தனது போராட்டத்தின் தன்மையை குறைத்துவிடுமோ என்று கருதி கடந்த ஆறு ஆண்டுகளாக தன் தாயை சந்திக்கமாலே இருப்பவர். சாகும் வரையிலான உண்ணாவிரதம் எத்தனையோ பேர் இருந்திருப்பார்கள் ஆனால் இவரைப்போல யாரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே?

உயிரை மட்டும் கண்களில் தேக்கிவைத்துக்கொண்டு., நம்பிக்கையையும்,கொஞ்சமாய் காற்றையும் சுவாசித்துக்கொண்டு இருக்கும் ஷர்மிளாவின் லட்சியம் நிறைவேறுமா, கொள்கை ஈடேறுமா தெரியவில்லை? உயிர் விலை மதிப்பற்றது என்பார்கள். அதை இரண்டு அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம். எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது என்பது முதல் அர்த்தம். பத்து பைசா கூட பெறாது என்பது இரண்டாவது அர்த்தும்.

மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண் ஷர்மிளா ஷானுவின் உயிருக்கு இரண்டாவது அர்த்தம்தான் போலும்

Posted by Dinamalar

No comments:

Post a Comment