Total Pageviews

Monday, June 25, 2012

"குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்' ஜூன் 12


ஓவ்வொருவருக்கும் ஒரு காலமும் இருக்கிறது; ஒரு கடமையும் இருக்கிறது; அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் கடமையைச் செய்து வர வேண்டும்; இதுவே சரியான ஒழுங்குமுறையாகும். இந்த ஒழுங்குமுறை மீறப்படுமானால் அதுவே சமூகச் சீரழிவாக மாறிவிடும்.

அரும்பு, மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சிப் பருவம்தான் தாவரங்களின் இயற்கை நியதி; இதில் மாறுபாடுகள் ஏற்படுமானால் அது அரும்பிலேயே அழுகி, மொட்டிலேயே கருகி, பூவிலேயே சருகாகி, பிஞ்சிலேயே வெம்பிப் போய்விடும் அல்லவா! இந்த இயற்கை நியதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போகுமா?

மனித குலம் குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள், முதியவர்கள் என வளர்ச்சி பெறுகிறது. இந்தப் படிநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இது மாறுபடுமானால், சமுதாயம் சீரழிவுக்கு உள்ளாகும்.

இளமைப் பருவம் கல்விக்கானது. "இளமையில் கல்' என்றும், "இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்றும் கூறப்படுவது அதனால்தான். படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்; பணியாற்ற வேண்டிய வயதில் பணியாற்ற வேண்டும், இதற்கு ஏறுமாறாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது சமுதாய சீர்கேட்டின் அடையாளமாகும்.

இதனை எதிர்த்துதான் ஜூன் மாதம் 12-ஆம் நாள் உலகம் முழுவதும் "குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின'மாகக் கொண்டாடப்பட்டது. நமது நாட்டிலும் விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்கங்களும், கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டன.

""குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்'' என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி பூண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை நேய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நம் கடமையை ஆற்றிடுவோம்''

நாடெங்கும் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், கூலி வேலை, எடுபிடி வேலை என எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாததுபோல அரசு அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.

குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986 - குழந்தைகள் தொழில் செய்வதை முற்றிலும் ஒழிக்கத் தவறிவிட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனைகளும் பெயரளவுக்குச் சிலருக்கு வழங்கப்பட்டன.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றே மனித உரிமை அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் ஆபத்தான அல்லது ஆபத்து இல்லாத என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துவிதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில், குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் முதன்மையாக இருப்பவர்கள் குழந்தைகளே! எந்தக் கொள்கையானாலும், திட்டமானாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்க முடியாது.

குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 முதல் நடைமுறையில் இருந்தாலும் அது குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசின் கடமைகளை ஓரளவு அங்கீகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

""மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுப் போவான்...'' என்றார் கல்வியியலைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ.

படிக்க வேண்டிய வயதில் தொழில் செய்ய அனுப்பப்படும் குழந்தைகளின் நிலையும் அப்படித்தான்.

Thanks to Dinamani

No comments:

Post a Comment