Total Pageviews

Friday, October 2, 2026

'ஆயிரம் ஜென்மங்கள் !

 

  • இயக்குனர் துரை இயக்கத்தில் 1978 - ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரம் ஜென்மங்கள்'
  • விஜயகுமார், லதா, மனோரமா, வி.கே.ராமசாமி, பத்மப்ரியா, ரஜினிகாந்த் என பலர் நடித்துள்ளனர்.
  • இது 1976-ல் வெளியான 'யக்ஷகானம்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்.

திரைக்கதை

  • காதலியின் ஆவி மனைவியின் உடலுக்குள் புகுந்து பழி வாங்குவதும், காதலனை அடையத் துடிப்பதுமே கதைக்களம்.

வெற்றி

  • இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பகால வண்ணப் படங்களில் ஒன்று. இதில் அவரது ஸ்டைலான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது
  • 'ஆயிரம் ஜென்மங்கள்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம்.
  • திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி இத்திரைப்படம் சாதனை படைத்தது.
  • எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் எஸ். ஜானகி பாடிய "வெண்மேகமே..."மற்றும் ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் பாடிய "கண்ணன் முகம் காண போன்ற பாடல்கள் வானொலிகளில் நேயர் விருப்பப் பாடல்களாக ஒலித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தன
  • இப்படத்தின் கதையைத் தழுவி, சில மாற்றங்களுடன் நகைச்சுவையைக் கலந்து 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. இயக்கிய 'அரண்மனை' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்...

 

கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....

1) மனைவியை சந்திக்கும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.

02) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.

03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.

04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும் பொழுது செவி தாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லை யெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள்.

08) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்னைகளை மறக்கடியுங்கள்.

10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11) பிள்ளைகளைப் பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12) அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவள் முன்னிலையில் செய்ய வேண்டாம்.

13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14) குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்து விடுங்கள்.

17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18) திருமணம் முடித்தபின் தன் மனைவியை அடிமை என நினைத்துக் கொண்டு அவளை துன்புறுத்தக் கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தன் கணவன் தனக்கு கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20) விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21)மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.

இப்படி இருந்தால்

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்..

மதுரை சிம்மக்கல் கோனார் கடை கறி தோசை !

  • மதுரையில் 80 வருடத்துக்கு மேல் பாரம்பரியத்துடன் இயங்கி வரும் சிம்மக்கல் கோனார் கடையில் கிடைக்கும் கறி தோசை பிரசித்தி பெற்று விளங்குகிறது.
  • மதுரை என்று சொன்னாலே கோயில்களின் நகரம். கோவில்களுக்கு அடுத்தபடியாக மதுரைக்கு புகழ் தேடித்தருபவை இங்கு கிடைக்ககூடிய வகை வகையான உணவுகள் மற்றும் இங்குள்ள உணவகங்கள்.
  • மதுரையில் பல்வேறு உணவகங்கள் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன
  • அந்த வகையில் 1943ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 82 ஆண்டுகளாக மதுரையில் இயங்கி வரும் பிரபல உணவகம் தான் சிம்மக்கல் கோனார் கடை.
  • மதுரையில் அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் கறி தோசையும் ஒன்று.. முட்டை மற்றும் சால்னா கலக்கபட்ட தோசை மாவின் மேல் மட்டன் அல்லது சிக்கன் கொண்டு நிரப்பப்பட்டு சுடப்படும் இந்த தோசையின் சுவைக்கு பலரும் அடிமை என்றே கூறலாம்.
  • மதுரை ஹோட்டல்களில் தோசைகளில் விதவிதமான வகைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து உணவுப் பிரியர்களை அசத்துகிறார்கள்.
  • அப்படி ஒரு காலகட்டத்தில் மதுரை ‘கறி’ தோசை உணவுப் பிரியர்களிடையே பிரபலமானது
  • அந்த வகையில் இன்று மதுரையின் மூலை முடுக்குகள் எங்கும் விற்கப்படும் இந்த கறி தோசை முதன் முதலில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது இந்த சிம்மக்கல் கோனார் கடை உணவகத்தில் தான்.
  • இன்றும் மதுரையில் இவர்களது கறி தோசைக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
  • ஆரம்பத்தில் ஆட்டுக்கால் சூப் கடையாக மட்டும் தொடங்கி இன்று மட்டன் உணவுகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
  • அழகான சைஸில், அதிகப்படியான சுவையில் இங்கு கிடைக்கும் கறிதோசை அசத்தலானது.
  • கோனார் கடை என்று மக்கள் தான் இந்த கடைக்கு பெயர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
  • மதுரையில் ருசித்து பார்க்கவேண்டிய உணவுகளில் மதுரை சிம்மக்கல் கோனார் கடை கறி தோசையும் ஒன்று!

Wednesday, September 23, 2026

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் !

 

எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அவரது அறைக்கு வெளியே ஏகப்பட்ட பரபரப்பு.

எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.

1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.

உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.

ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,

இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...

அன்னை தெரசா !

எம்ஜிஆரைச் சுற்றியிருந்த

அதிகாரிகள் அனைவரும்

எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.,

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,

சிலுவை அணியாத கிறிஸ்துவன்,

திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா,

அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை தவிர்ப்போம்.

மனித நேயம் காப்போம்.

26 ஆகஸ்ட் 1910

அன்னை தெரசாவின்

பிறந்த தினம்.

John Durai Asir 

டி.ஆர். இயக்கிய படத்தின் பெயர் உயிருள்ளவரை உஷா !

 

1980 இல் டி.ஆரின் முதல் படம் ஒரு தலை ராகம்

வெளியாகி தமிழ்நாடே அதில் கட்டுண்டு கிடந்துச்சு.

அதில் நாயகியின் தோழியாக நடிச்சவர் உஷா. அவரே தனது வாழ்க்கைத் துணைவி என அவரை 1982 இதே செப் 16 இல் டி.ராஜேந்தர் திருமணம் செய்து கொண்டார்.

1983 இல் டி.ஆர். இயக்கிய படத்தின் பெயர் உயிருள்ளவரை உஷா.

தனது மனைவியின் பெயரில், அவர்மீதான காதலை வெளிப்படுத்தும் டைட்டில்.

இன்றுவரை அந்தத் தலைப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் இல்லறம் நடத்தி வருகிறார் டி.ஆர்.

உயிருள்ளவரை உஷா பெயரில் ஒன்பது எழுத்துக்கள் வரும்.

அதன் பிறகு தான் எடுத்த அனைத்துப் படங்களின் பெயரும் ஒன்பது எழுத்தில் வருவது போல் பார்த்துக் கொண்டார் டி.ஆர்.

தங்கைக்கோர் கீதம்,

உறவைக்காத்த கிளி,

மைதிலி என்னை காதலி,

ஒரு தாயின் சபதம்

, என் தங்கை கல்யாணி,

சம்சார சங்கீதம்,

சாந்தி எனது சாந்தி,

எங்க வீட்டு வேலன்,

ஒரு வசந்த கீதம்,

தாய் தங்கைப் பாசம்,

மோனிசா என் மோனலிசா,

காதல் அழிவதில்லை...!என எல்லாமே ஒன்பது எழுத்து டைட்டில்.

கடைசியாக வெளிவந்த வீராச்சாமி மட்டும் விதிவிலக்கு.

டி.ஆர் திருமணத்தை ஒரு சுமையாக இதுவரை சொன்னதில்லை.

ஆனால் அவரது மகன் சிலம்பரசனுக்கு திருமணம் என்பதே பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது.

ஒரு தலைமுறை இடைவெளியில்தான் எத்தனை மாற்றங்கள்.

உயர்ந்த மனிதர், சிறந்த கலைஞர் டி.ஆருக்கு

🙏நெய்வேலி சார்லஸ்!

தியாகராஜ பாகவதர் போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை !

 

சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே!” தியாகராஜ பாகவதர்

தங்க நிறம், கோதுமை நிறம், நிலவொளி வீசும் முகம், மயக்கும்பார்வை, என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோலவே எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார் எம்.கே.டி. அந்த அளவிற்கு வசீகரம் கொண்டிருந்தார்.

எல்லோரையும் வசீகரிப்பதற்கு என்றே அழகுக்கே அழகூட்டும் விதமாக பல மணிநேரம் மெனக்கெட்டிருக்கிறார். தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் ஊற்றிக்கலந்து, குளித்திருக்கிறார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டு, பட்டுவேட்டி- சட்டை, அங்கவஸ்திரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

தினமும் புத்தாடைதான் அணிவது என்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.

’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார் என்போருமுண்டு.

இப்பேர்பட்டவர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர், விடுவிக்கப்பட்டார்.

பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் பிரபல வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் பார்-அட்-லா ஆஜரானார். ஆணித்தரமாக வாதாடி, பாகவதரும், கிருஷ்ணனும் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இருவரும் விடுதலை அடைந்தனர்.

பாகவதர் தன் அன்பின் அறிகுறியாக 100 பவுனில் ஒரு தங்கத்தட்டு செய்து, அதை எத்திராஜுக்கு வழங்கினார். “நீங்கள் எப்போதும் இதில்தான் சாப்பிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே, எத்திராஜும் வாழ்நாள் முழுவதும் அந்த தட்டில்தான் சாப்பிட்டு வந்தார்

அதன்பின்னர் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி இருந்த அவருக்கு, ஈரல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

அவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.

கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.

எம் கே டி போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை

கடைசி காலத்தில் வாடகை வீட்டில்

வாடகை கூட தர இயலாத நிலைக்கு

தள்ளப்பட்டார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட ஒரே புகழ் பெற்ற நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

சினிமாக்காரர்கள் அவரிடம் காட்டிய மோசமான அணுகுமுறையால் ரொம்பவே மன வருத்தத்தில் இருந்திருக்கிறார். தனது கடைசி காலம் வரைக்கும் அந்த மன வலியைச் சுமந்தவர், மரணப்படுக்கையில் இருக்கும் போது தனது தம்பியை அழைத்து, ‘நான் இறந்தப்பிறகு என்னுடைய உடலை சினிமாக்காரர்களிடம் மட்டும் கொடுத்து விடாதே’ என்று கூறியிருக்கிறார். தியாகராஜ பாகவதர் இறந்தப்பிறகு தங்கவேலு, பாலையா, எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் என பல நடிகர்கள் கேட்டும் பாகவதரின் தம்பி உடலைக் கொடுக்காமல், தங்களது சொந்த ஊரான திருச்சியில் நல்லடக்கம் செய்தார்.

ஏழ்மை காரணமாகப் பாகவதரின் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. அவரது இரண்டாம் மனைவியான ராஜம்மாளின் குடும்பத்திற்கு 2010ல் பாகவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் அவருக்கு ஒரு சிறிய தொகை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதுவரை அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது நடிகர் சிவகுமார் அவ்வப்போது செய்து வந்த உதவிகளால் தானாம்.

Saturday, September 12, 2026

சாலமன் பாப்பையா !

 சாலமன் பாப்பையாவை உருவாக்கிய ரூ2.50 ! வாழ்க்கையை மாற்றிய கதை! இது பலருக்கு பாடம் !

 Solomon Pappaiyaசென்னை: சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவினால் 90 வயதில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி காலமான செய்தி அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த சமயத்தில் அவர் பேசிய பழைய பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாலமன் பாப்பையா வாழ்க்கையில் 2 ரூபாய் 50 பைசா எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் பேசியது கேட்பவர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கிறது. இப்போ சாலமன் பாப்பையா என்ற பெயரை கேட்டாலே பட்டிமன்ற பேச்சாளர், மதுரை தமிழ், நகைச்சுவை, இலக்கியம் என்று நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால் இத்தனை பெரிய பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தது ஒரு பெரிய வசதியான குடும்பம் கிடையாது. வெறும் ரூ 2.50 தானாம். படிப்புக்காக அந்த சின்ன தொகையை சமாளிப்பது அப்போது அவருடைய குடும்பத்திற்கு பெரிய சவாலாக இருந்திருக்கிறது. 

சாலமன் பாப்பையா குடும்பம் சாலமன் பாப்பையா 12 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் 9வது பிறந்தவர். குடும்பத்தில் பொருளாதார வசதி அதிகம் இல்லாமல் வாழ்க்கையே கஷ்டமாக இருந்த காலம். இப்போது இருக்கிற காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தையை படிக்க வைக்கவே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு. இதே கஷ்டம்தான் அந்தக் காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் இப்போ நாம லட்சக்கணக்கில் ஸ்கூல் பீஸ் கட்டினால் அப்போது 2. 50 ரூபாய் தான் ஸ்கூல் பீஸ் ஆக இருந்திருக்கிறது. அது அந்த நேரத்தில் பெரிய தொகை. ஆரம்பகால கஷ்டம் அதிலும் 12 பேர் ஒரு வீட்டில் இருந்தால் அந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகள் கூட எவ்வளவு கஷ்டம் என்று நமக்கே புரியும். அப்படி அவர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் அவருடைய படிப்புக்கு உதவி செய்தது நண்பர்களும், சுற்றி இருந்தவர்களும் தான் என்று சாலமன் பாப்பையா அந்த வீடியோவில் நன்றி சொல்லி இருந்தார். அதுபோல அவர் இவ்வளவு படித்து அறிவார்ந்தவராக இருந்ததற்கு காரணம் அவரை நண்பர்கள் ஒதுக்கி வைத்ததும் என்று சொல்லி இருக்கிறார்.Solomon Pappaiah 

 நண்பர்கள் ஒதுக்கி வைப்பு அதாவது அவர் ரொம்பவும் ஒல்லியாக இருப்பாராம். அதனாலயே அவருடைய நண்பர்கள் நீ எங்க கூட விளையாட வரவேண்டாம் கீழே விழுந்துடுவ என்று இவரை விளையாட்டு சேர்க்க மாட்டார்களாம். அதனால் ஒதுங்கி போய் உட்கார்ந்து இருப்பாராம். ஒரு கட்டத்தில் சும்மாதான உட்கார்ந்திருக்கிறோம் படித்துக்கொணடே இருப்போம் என்று புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கி இருக்கிறார். இப்ப இருக்கிற மாதிரி அப்போது சோசியல் மீடியா பயன்பாடு அல்லது வேற பொழுது போக்குகளோ எதுவும் இல்லாமல் இருந்ததால் அவர் படித்துக் கொண்டே இருந்திருக்கிறார். படிப்பால் கிடைத்த வெற்றி ஸ்கூல், காலேஜ் படிப்பை முடித்த பிறகு மதுரை அமெரிக்க கல்லூரியில் தமிழ் துறையில் பேராசிரியராக வேலை பார்த்திருக்கிறார். அங்கே ஒரு மாணவராக இருந்த வாழ்க்கை பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராக உயரும் அளவுக்கு சென்று இருக்கிறது.

 

 அதற்கு பிறகு பட்டிமன்ற மேடை அவருக்கு இன்னொரு உலகமாக மாறியது. தமிழை பெரிய பெரிய வார்த்தைகளில் பேசாமல் நம்ம வீட்டில் உட்கார்ந்து ஒரு பெரியவர் கதை சொல்வது மாதிரியே பேசினார்.  50 ஆண்டு பயணம்.. Solomon Pappaiah

சாலமன் பாப்பையாவின் திறமை அதனால் தான் திருக்குறள், சங்க இலக்கியம், குடும்ப உறவு என்று அவர் எடுத்துச் சொன்ன விஷயங்கள் எல்லாம் சாதாரண மக்களுக்கும் நெருக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் பட்டிமன்றம் என்றாலே பாப்பையா இருக்கிறாரா? என்று கேட்கும் அளவுக்கு அவருடைய பெயர் அந்த மேடையோடு இணைந்து விட்டது. படிப்பதற்கு ரூ2.50 கூட சவாலாக இருந்த அந்த மனிதருக்கு பல வருஷங்களுக்கு பிறகு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. வாழ்க்கையில் ஆரம்பத்தில் நமக்கு கிடைக்காத வாய்ப்புகள் சில நேரங்களில் நம்மை உடைத்துவிடும். ஆனால் சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை இன்னொரு விஷயத்தை சொல்கிறது. வாய்ப்பு கிடைத்த போது அதை பிடித்துக் கொண்டு ஓட தெரிந்தால் ஒருநாள் நம்முடைய பெயரை அந்த வாய்ப்புக்கு அடையாளம் ஆகிவிடும் என்று அவர் நிரூபித்திருக்கிறார். இன்று 90 வயதில் இந்த உலகத்தை விட்டு அவர் பிரிந்து இருந்தாலும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவருடைய பேச்சும் அவர் எடுத்துச் சொன்ன தகவல்களும் பலருக்கும் பயன்பட்டு கொண்டே இருக்கும்.