Total Pageviews

Monday, December 31, 2012

சத்ய சாய் பாபாவின் சிந்தனைகள்

ஆசைகளை அடக்கிக் கொள்வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது
.
1) விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம்.
 ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.

2)இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம்.
 அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.

3)புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால்,தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.

4)வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது.
 நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.

5)மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.

6) மனித மனம், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போன்றது. அதன் ஒவ்வொரு இதழும் உலக மாயைகளுக்கு ஆசைப்பட்டு செல்ல விரும்பும். ஆனால், நீங்கள்தான் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல மனம் கூட வீணாகப் போய் விடும். மனதை கட்டுப்படுத்தி இருப்பவர்களை, வெளியில் ஏற்படும் எத்தகைய துன்பங்களும் பாதிக்காது.

7) கடவுளை அடையவேண்டும் என விரும்புபவர்கள் அதற்காக சிரத்தையான செயல்களை செய்ய வேண்டும் என்பதில்லை. எளிதாக மூன்று வழிகளை மட்டும் பின் பற்றினால்போதும்.

1) இதயத்தை அன்பிலும்,
2) செயல்களை நேர்மையிலும்,
3) உணர்ச்சிகளை கருணையிலும் நனைத்துவிடுங்கள்
. இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே, கடவுளை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடலாம்.

8) இரும்புத்துண்டை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால், அதே இரும்பினை இலகுவாக்கி சிறிய பாத்திரமாக செய்து நீரில் விட்டால் மிதக்கும். இதைப் போலவே மனதையும் இலகுவாக மாற்றிக்கொண்டால் உலக ஆசை என்ற மாயையில் மூழ்காமல், அதன் மீது பற்றில்லாமல் மிதந்து கொண்டிருக்கும்.

9) மனதில் எப்போதும் இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருங்கள். அவரது நாமத்தையே உச்சரியுங்கள். இறை செயல் அல்லாத வேறு செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள் . இப்படிப்பட்டவர்களின் மனம், பூக்களில் இருந்து தேனை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தேனீக்கு சமமானதாக இருக்கும்.

10) நீருக்கு மீன் அவசியமில்லை. ஆனால், மீனுக்கு நீர் அவசியம். அதுபோல குருவுக்கு சீடன் அவசியமில்லை. ஆனால், சீடனுக்கோ குரு மிகவும் முக்கியம். குருவின் துணையில்லாவிட்டால் சீடனால் எதுவும் செய்ய முடியாது.

11) முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டை திருத்த வேண்டும். அதன் பிறகே, நமது ஊரை திருத்த வேண்டும். அடுத்து மாவட்டத்தையும், பின்னர் மாநிலத்தையும், அதற்கடுத்தபடியாக நாட்டையும் திருத்த முயல வேண்டும். இவ்வாறு படிப்படியாகத்தான் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, எடுத்த எடுப்பிலேயே சமுதாயத்தையும் நாட்டையும் திருத்த முயல்வது அர்த்தமற்றது.

12) நீரும் நீரும் எளிதில் ஒன்றாக கலந்து விடும். ஆனால், நீரில் எண்ணையை விட்டால் அது கலக்காமல் பிரிந்தே நிற்கும். அதே போல் நல்லவர்கள் நல்லவர்களுடன் எளிதில் சேர்ந்து விடுவார்கள். ஆனால், கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, அவர்களுடன் சேர முயற்சித்தாலும் அது முடியாமல் போய்விடும்.

13) குளத்தில் நீர் இருந்தால் தவளைகள் அங்கே குவிந்திருக்கும். நீர் வற்றி விட்டால் அங்கிருந்து வெளியேறிவிடும். அதே போல் ஒருவனிடம் பதவி, பணம் இருக்கும் போது மக்கள் அவனை சூழ்ந்து இருக்கின்றனர். ஆனால், அவனுக்கு வறுமை ஏற்படும் போது, உறவினர்களும், உயிர் நண்பர்களும் விலகி விடுகின்றனர்.

14) வளர்த்த பெற்றவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல், படைத்த இறைவனுக்கும் தினமும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

15) காட்டில் இருக்கும் சிறிய விறகிற்கு தீ வைத்தால், விறகு மட்டும் எரிவதோடு நின்று விடாது. காட்டையே அழித்துவிட்டுத்தான் அணையும். அது போலவே, மனிதர்களின் மனதில் உண்டாகும் தீய எண்ணம் என்னும் தீயானது அவர்களை மட்டுமின்றி, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும். ஆகவே, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

16) எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அவை உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை என்றாலும், உங்களை நம்பி கொடுக்கப்பட்டிருப்பதால் அதனை எத்தகைய சிரத்தை எடுத்தாவது சிறப்பாக முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பெயருக்கு இயந்திரம் போல செய்யக்கூடாது. இது, எண்ணெய் இல்லாத விளக்கில், பிரகாசிக்காமல் எரியும் திரிக்கு ஒப்பானதாகும். மனதில் 'ஈடுபாடு' என்ற எண்ணெய்யை விட்டு பணி செய்தால்தான், முடிவும் சுடர்போல பிரகாசமாக இருக்கும்.

17) உலோகங்களில் எல்லாம் உயர்ந்த தங்கத்தை, தீயில் போட்டு உருக்குகின்றனர். இதனை, தங்கத்தை வெறுப்பதற்காக தீயில் போடப்பட்டதாக சொல்லமுடியாது. அதை தீயில் இட்டால், அழுக்குகள் தானாக நீங்கிவிடும். அதைப்போலவே, மனிதர்கள் தங்களிடமுள்ள மன அழுக்குகளை நீக்கி, பரிசுத்தமானவர்களாக திகழவே கடவுள் துன்பங்களைக் கொடுக்கிறார். இதனைப் புரிந்து கொண்டு துன்பத்தை இன்பமாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இத்தகையவர்கள், கடவுளுக்கு ஒப்பானவர்கள் ஆவர்.

18) தண்ணீரில் கல்லைப்போடும்போது, அலைகள் தோன்றி நீர்நிலையின் கரை வரையிலும் பரவும். இதுபோல, நம் மனதில் ஓர் எண்ணம் விழுந்தால் அந்த எண்ணம் நல்லதோ, தீயதோ உடல் எங்கும் பரவி விடுகிறது. மனம் என்னும் குளத்தில் உருவாகும் சிந்தனை அலைகள் கைகளை அடைந்து தீய செயல்களைச் செய்கிறது. விழிகளை அடைந்து தீய காட்சிகளைக் காண்கிறது. கால்களை அடைந்து தீய இடங்களுக்குச் செல்கிறது. ஆக, எண்ணங்களுக்கேற்பவே நாம் நல்ல செயல்களையோ கெட்ட செயல்களையோ மேற்கொள்கிறோம். எனவே மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும்.

19) ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்லவராக வாழவேண்டுமென்ற உறுதியான, அசையாத நம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக பொறாமை, வெறுப்பு, கர்வம் ஆகிய குணங்களிலிருந்து விடுபடவேண்டும். மூன்றாவதாக நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்போ அல்லது தனி நபரோ தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும்.

20) சர்க்கரையை விஷம் என நினைத்து, அதை நீரில் கரைத்து சாப்பிட்டால் தீமை எதுவும் உண்டாகிவிடாது. அதேசமயம் விஷத்தை நீரில் கலந்து, அதை கரும்புச்சாறு என்று நினைத்து குடித்தால் நிச்சயம் ஆபத்துதான் விளையும். எனவே தீய செயலை நல்லதென்று நினைத்து செய்தாலும், விளைவு தீயதாகவே இருக்கும்.

21) பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தூய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம். சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம். சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை. ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே. இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

22) ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது. ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால், நல்ல விளைவுகள் ஏற்படும். அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும். இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

23) மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும். வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு கவலை என்பதே கிடையாது. துயரமும் இல்லை. எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன். எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரும்போது கொண்டுவரவில்லை. போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை. பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

24) வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன், தளராத நம்பிக்கையுடன், வேறுபாட்டு உணர்வை நீக்கி, எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள். உங்கள் வாழ்க்கை புனிதமாகும். நாடும் உலகமும் நன்மை பெறும்.

25) உன் குற்றம் குறைகளை கண்டுபிடி. அடுத்தவரிடம் குணங்களைத் தேடு. அடுத்தவரிடமுள்ள குறைகளைத் தேடுவது பாவம். மிருக உணர்ச்சிகளை களைந்து விட்டால், தெய்வீக உணர்வுகள் பெருக்கெடுக்கும்.

26) நீ வெளிச்சத்தில் இருக்கிறாய். ஒளி உன்னிடம் இருக்கிறது. நீயே ஒளியாகிறாய். உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி. நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள். அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்துநிற்க இயலும்.

27) ஞானக்கதவுகள் திறக்கட்டும். அறியாமைத்திரை கிழிபடட்டும். தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும். நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்
.
28) முன்னதாக புறப்படு. மெதுவாக ஓட்டு. பாதுகாப்பாய் போய்ச்சேர். உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள். அது 'நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்
.
29) தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது. அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

30) மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே. கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான். இதில் சந்தேகம் வேண்டாம். நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


31) வெப்பம், குளிர்ச்சி இவ்விரண்டும் இயற்கையின் மாறுதல்களுக்கேற்ப சுழற்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கோடை காலத்தில் வெப்பத்தை வெறுத்து, குளிர்ச்சியை விரும்புகிறோம். குளிர்காலத்தில் குளிர்ச்சியை ஒதுக்கி, வெப்பத்தை தேடிச்செல்கிறோம். ஒரு சமயத்தில் நாம் விரும்பும் சூழலை, மற்றொரு நேரத்தில் வெறுக்கவும், விரும்பவும் செய்கிறோம். வெறுப்பதாலோ, விரும்புவதாலோ இவ்விரண்டிலிருந்தும் நாம் ஒதுங்கிவிட முடியாது. அதைப்போலவே இன்பமும், துன்பமும் வாழ்க்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இவை இரண்டையும் வேறுவேறாக பார்க்காமல் சமமாக பாவித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

32)அகங்காரமும் ஆடம்பரமுமே மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள் என்பதை ஒவ்வொருவரும் நன்றாக உணர வேண்டும்.

33)மனிதன் எவ்விதமான பணியில் ஈடுபட்டிருப்பினும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆதி காரணமான மெய்ப்பொருள் மீது நாட்டத்தை விட்டுவிடக்கூடாது.

34)உலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று கோருவதுடன், பிறர் நலனுக்காகப் பாடுபடுவதிலும் ஊக்கம் கொள்ள வேண்டும்.

35)கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கேற்ப, பிறருக்குத் தீங்கு விளைவிக்க எண்ணம் கொண்டால் நமக்கே தீங்கு விளையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

36) நல்லதையே நினைத்து, நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவர்களாகத் திகழுங்கள். இதுவே பிரும்மத்துவத்தின் ரகசியம். பக்தியின் லட்சணமும் இதுவே. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருத்தல் மனிதத் தன்மையின் சிறப்பாகும்
.
37) எவ்வித வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல் அடிப்படை ஒற்றுமையான ஒவ்வொருவரிடமும் உள்ள தெய்வத்துவத்தையே போற்ற வேண்டும். இதுவே உண்மையான மனிதத் தன்மையாகும்.

38)மனிதன் தனது உடலுறுப்புக்களின் உதவியுடன் நற்பணிகள் செய்து சீரான முறையில் கழிப்பதுதான் அவனது தலையாய கடமையாகும். இப்பூத உலகில் செய்யும் பணிகளாலேயே மனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான்.

39) அடுத்தவரை மகிழ்விப்பது அறம். அதற்காக நாம் பணம் தேடி ஓடவேண்டாம். நல்ல சொற்களே போதுமானது.

40) கண்டவற்றுள், கேட்டவற்றுள் பாதியையே பகர வேண்டும் என்பதற்காகவே கண் இரண்டும், வாய் ஒன்றுமாக வார்த்தளித்தான்.

41) தன்னைக் கல்லால் அடித்தவனுக்கும் இனிய கனியைத் தருகிறது மரம். நம்மைச் சொல்லால் அடிப்பவருக்கு கனிவான சொற்களைத் தரவேண்டும்
.
42) உள்ளத்தில் அன்பு இருந்தால் வார்த்தைகளில் இனிமை, பாலில் ஊறிய பழம்போல இருக்கும்.

43) வாசிக்கத் தெரிந்தவன் வாசித்தால் புல்லாங்குழலில் கீதம் ஒலிக்கும். தெரியாதவன் ஊதினால் காற்றுதான் வரும். அறிஞர்களின் பேச்சில்தான் பொருள் இருக்கும்.

44) எந்த ஒரு வார்த்தை இறை சிந்தனையில் ஒருவனை ஈடுபடுத்துமோ அதுதான் அவனுக்கு மந்திரம். மற்றவனுக்கு அந்த வார்த்தை பொருளற்றதாக இருந்தாலும் சரி, மனதை ஒருமுகப்படுத்துவதே மந்திரம்.

45) ஆன்மிகத்தின் ஆரம்பப் பாடமே பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பதுதான். பேச்சு மனிதனுக்கு இறைவன் அளித்த படைக்கலன்கள். மற்ற மிருகங்களுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள விரைந்தோட வசதியான பாதங்களும், கூரான நகங்களும் மற்றும் கொம்புகளும், தந்தங்களும், அலகுகளும் அளித்த கடவுள் மனிதனுக்கு அளித்திருப்பது இனிமையான பேச்சு ஒன்றுதான். இதன்மூலம் எதிரியைப் பலமிழக்கச் செய்து எதிர்ப்புகளைக் களைந்து வெறுப்பின் பல்வகைத் தாக்குதல்களிலிருந்து தப்பி அவற்றை முறியடித்து மனிதனால் செயல்பட முடியும்.

46) கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் மாறாமல் இருக்கும் சக்தி ஒன்று உள்ளது. இந்த ஆதாரமான தெய்வசக்தியை உணர்ந்தால் தான் ஆனந்தம் பெற இயலும். எந்தப் பாதையில் சென்றாலும் இந்தத் தெய்வீக அடிப்படையை மறக்காமல் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாளைய மனிதர்கள் தனம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் நாட்டம் கொண்டு செயல்படுகின்றனரேயன்றி குணத்தில் நாட்டம் கொள்வதில்லை.

47) குணமில்லாமல் அதிகாரம் செலுத்தியோ, உயர்பதவி வகித்தோ, பணம் சம்பாதித்தோ பயனில்லை. மனிதருக்கு முக்கியமான தகுதி குணமே. இதற்கு தெய்வத்துவத்தை உணர முயல வேண்டும். இயல்பை விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடும்.

48) நல்லதற்கும், கெட்டதற்கும் எண்ணமே காரணம். எல்லாமே சத்தியத்திலிருந்து வந்தவை. சத்தியமே தெய்வஸ்வரூபம். சத்தியமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். சத்தியத்தைவிட மேலான தர்மம் வேறு இல்லை. படைப்பனைத்தும் சத்தியத்தில் பிறந்து சத்தியத்திலேயே இணைகின்றன. சுத்தசத்துவமே அதன் துணை. இதில் குணத்திற்கே முக்கியத்துவம் உள்ளது.

49) எவ்வளவு தனவந்தராயினும் குணமே பிரதானமானது. தெய்வத்துடன் கூடிய நற்குணமே மனிதத் தன்மையை வெளிப்படுத்தக்கூடியது.இந்தத் தெய்வீக உணர்வினைப் பற்றிப் பாரத மக்கள்தான் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள். இன்று இப்படிப்பட்ட உயர்ந்த கலாசாரத்தை மறந்துவிட்டனர். இந்த தெய்வீக உயர்வினை மறந்துவிட்டது மிகுந்த துர்பாக்கியமே.

50) எல்லா தனங்களையும்விட மிகவும் உயர்ந்த தனம் பொறுமையே. எல்லா விரதங்களையும்விடச் சிறந்த விரதம் சத்தியமே. தாய்மையை விடச் சிறந்த பாக்கியம் ஏதுமில்லை

No comments:

Post a Comment