Total Pageviews

Wednesday, November 15, 2023

இறப்புச் சடங்கு !

இறப்புச் சடங்கு

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

இறப்புச் சடங்கு

வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச் சடங்காகும். ஆதி மனிதர்களிடம் முதன் முதலில் தோன்றிய சடங்கு இறப்புச் சடங்காகும். இதை ஈமச்சடங்கு என்று கூறுவார்கள். ஒருவர் மரணம், அவரின் குடும்பம், பங்காளி, உறவுக்காரர்களைப் பாதிக்கின்றது. இந்த இறப்புச் சடங்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

1. இறப்பதற்கு முன் நடைபெறும் சடங்கு

2. இறந்த அன்று நடைபெறும் சடங்கு

3. இறந்த பிறகு நடைபெறும் சடங்கு

இறப்புக்கு முன் நடைபெறும் சடங்கு

வயதானவர் நடக்க முடியாமல் கண்ணுத்தெரியாமல் படுத்த படுக்கையிலே நீண்ட நாள் கிடப்பாரெனில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்து, இளநீர் வெட்டிக் குடிக்க சொல்வார். அவ்வாறு செய்தால் அவர் உயிர்போகும். இதைக் கருணைக் கொலை என்று கூறுவார்கள்.

இறப்பிற்குப் பின் நடைபெறும் சடங்கு

ஒருவர் இறந்த உடனே மனிதர் என்ற நிலையைக் கடந்து பொணம் அல்லது சடலம் என்ற பெயரைச் சமுதாயம் அவருக்குச் சூட்டுகிறது. இறந்தவுடன் அவர் வாயில் மண்ணெண்ணெய் உப்பு இரண்டையும் கலந்து ஊற்றுவார்கள்.

எட்டுக்கட்டு

மனிதன் இறந்தவுடன் எட்டு இடங்களில் கட்டுப் போடுவார்கள். இது ‘எட்டுக்கட்டு” என்று கூறப்படும்.

1. இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கைக்கட்டு”.

2. காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கால்கட்டு”.

3. வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடிய வண்ணம் கட்டுவது “வாய்க்கட்டு”.

4. தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களையும் வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவார் “நாடிக்கட்டு”.

5. தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்துவிடாமல் கட்டுவது “தொப்புள் கட்டு”.

6. நாடிக்கட்டையும் வாய்க்கட்டையும் இணைத்து, அவை வெளியில் தெரியாமல் மூடி தலை முடியையும் மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவார்கள். இது “தலைக்கட்டு”.

7. முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி கட்டுவது “முழங்கால் கட்டு”.

8. ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கட்டு “கோவனக் கட்டு”.

இம்முறை பெண்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்த பின் இறந்தவரின் முகம் தெற்குப் பக்கம் பார்க்கும்படி வைக்கப்படுகிறது.

இறந்தவரின் நெற்றியில் காசு வைக்கப்படுகிறது. ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் ஒரு ரூபாய் காசு மட்டும் வைக்கப்படும்.

வழிக்கூட்டி விடுதல்

இறந்தவரின் அருகில் ஒருபடியில் நெல்லை நிரப்பி அதன் மேல் நல்ல விளக்கு வைப்பார்கள். சொம்பில் நீர் வைப்பார்கள். பின் மாலை, தேங்காய், சூடம், பத்தி, வெற்றிலை, சீவல் போன்றவற்றை அவரின் அருகில் வைப்பார்கள். இரண்டு இராட்டியை வாசலில் வைத்து அதன் மேல் சூடத்தை ஏற்றி வைத்து, சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைப்பார்கள். இதனை “வழிக்கூட்டி விடுதல்” என்பார்கள்.

துக்கம் சொல்லி விடுதல்

ஒருவர் இறந்தவுடன் அவ்வூரில் உள்ளவர்களின் மூலம் உறவுக்காரர்களுக்கு துக்கம் சொல்லிவிடுவார்கள். துக்கம் சொல்லுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், இந்த வழக்கம் இப்போது இல்லை. சிலர் தொலைபேசி மூலம் தெரிவித்து விடுகின்றனர்.

ஒப்பாரி

தமிழர்களின் இறுதிச் சடங்கில் இடம்பெறும் பாடல் ஒப்பாரி எனப்படும். ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறு நிலை, புலம்பல், இறங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப் பாட்டு, அழுகைப்பாட், மாரகப்பாட்டு, கைலாசப்பாட்டு எனப் பலவாறாகக் கூறுவர். இறப்பு நிகழ்ந்த வீட்டில் இறந்தவரைப் பார்க்கவும், துக்கம் விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவரை கட்டியணைத்து அழுகின்ற வழக்கமும் உண்டு. ஒப்பாரி பாடுவதால் இறந்தவரின் ஆவி சாந்தி அடைவதாகவும், பாடாவிட்டால் அந்த ஆவி துன்பப்படுவதாகவும் நம்பப்படுகிறது. மனித வாழ்வில் முன்னுரை தாலாட்டாகவும், முடிவுரை ஒப்பாரியாகவும் அமைகிறது. ஒப்பு + ஆரி எனப் பிரித்து ஒப்புச் சொல்லி அழுதல் எனப் பொருள் கொள்கின்றனர்.

கோடி எடுத்து வருதல்

கணவன் இறந்தாலும் மனைவி இறந்தாலும் பெண்ணின் தாய் வீட்டிலிருந்து இறுதிச் சடங்கு செய்யும் வழக்கம் உள்ளது. இதை, பொறந்த இடத்துக் கோடி என்று கூறுவார்கள். அதில் நெல், அரிசி, மஞ்சள், குங்குமம், வளையல், தலைக்குப் பூ, எண்ணெய், சீயக்காய், பச்சை மட்டை (கீத்து) போன்றவற்றை எடுத்து வருவார்கள். கோடிக்குப் பெரும்பாலும் மல்லுத்துணியைத் தான் எடுத்து வருகின்றனர்.

நீர் மாலை

கோடி எடுத்த வந்த பிறகு இறந்தவரின் மகன், மகள், பங்காளிகள் போன்ற ஏழு பேர் அல்லது ஒன்பது பேர் நீராடி உடல் முழுவதும் திருநீரால் பட்டை, நெற்றிகளில் போட்டு நீர் நிறைந்த குடத்தை தூக்கி வருவார்கள். அவர்களுக்கு மேல் வேட்டி பிடித்து வருவார்கள். அந்த நீரால் பிணத்தைக் குளிப்பாட்டுவார்கள்.

குளிப்பாட்டுதல்

தண்ணீர் எடுத்து வந்த குடங்களை வரிசையாக வைத்து, இறந்தவரை வெளியில் எடுத்து வந்து பலகையில் படுக்க வைத்து, ஆண்கள் இறந்தால் ஆண்களும், பெண்கள் இறந்தால் பெண்களும் குளிப்பாட்டுவார்கள், பெண்ணைக் குளிப்பாட்டும்போது சேலையால் மறைத்தும், ஆண்கள் இறந்தால் வேட்டியால் மறைத்தும் குளிப்பாட்டுவார்கள். கோடியில் எடுத்து வரும் பொருட்களையே குளிப்பாட்ட பயன்படுத்துவார்கள்.

வாய்க்கரிசி போடுதல்

இறந்தவர் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக வாய்க்கரிசி போடப்படுகிறது. இதற்குப் பச்சை நெல்லைக் குத்தி, அந்த அரிசியே பயன்படுத்தப்படுகிறது. இறந்தவர் பட்டினியுடன் போனால் அக்குடும்பத்திற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது.

தப்படித்தல்

தெருவில் உள்ளவர்களுக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தப்படித்தலின் மூலம் இறப்புச் செய்தி தெரிவிக்கப்படும். தப்பு அடிக்கும் சத்தத்தை வைத்தே யாரோ இறந்து விட்டார்கள் என்று அறிந்து கொள்வார்கள். இறந்தவரின் உடல் அடக்கம் செய்யும் வரை தப்பு அடிக்கப்படுகிறது. வயதானவர்களோ நல்ல முறையில் வாழ்ந்து முடித்தவர்களோ இறந்து விட்டால் குறவன் குறத்தி ஆட்டமும் வைக்கிறார்கள்.

பிணம் எடுத்தல்

அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின் பிணத்தைத் தூக்கிப் பாடையில் வைப்பார்கள். வைக்கும் போது முகம் வீட்டைப் பார்த்தும் கால்கள் காட்டைப் பார்த்தபடியும் வைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் பாடையில் அவர் கூடவே வைத்து விடுவார்கள். உறவுக்காரர்கள் பாடையைச் சுற்றி மூன்று முறை அழுதுக் கொண்டே வருவார்கள் பிணத்தைத் தூக்கிய பின் அழுதுக் கொண்டே கொஞ்சம் தூரம் வரை செல்வார்கள். பிறகு பெண்கள் அனைவரும் முச்சந்தையில் அமர்ந்து அழுது விட்டு வீடு திரும்புவார்கள்.

சாணம் தெளித்தல்

பிணத்தைத் தூக்கிச் சென்ற பின் அத்தெருவிலுள்ள அனைத்துப் பெண்களும் சாணம் தெளிப்பார்கள். சாணம் தீரும் வரை தெளித்துக் கொண்டே செல்வார்கள். சிலர் தண்ணீர் தெளிப்பார்கள். இறப்பின் காரணமாக ஏற்பட்ட கிருமிகள் நீங்கியும் இடம் தூய்மை அடையும் பொருட்டு பிணம் எடுத்த வீட்டைச் சாணத்தால் மொழுகித் தூய்மை செய்வார்கள்.

முச்சந்தி / சந்திரமரக் கொட்டல்

வீட்டிலிருந்து பிணத்தைத் தூக்கிச் சென்றதும் குறிப்பிட்ட தூரத்தில் மூன்று முறை பிணத்தைச் சுற்றி தோளிலுள்ள வலிகள் போக வேண்டுமென மறுதோளில் வைத்துக் கொள்வார்கள். வழி நெடுகப் பொரி, காசு, மலர்கள் தூவிச் செல்வார்கள்.

இடுகாட்டுச் சடங்கு்

இறந்தவரின் உடல் நற்கதியை அடைய இடுகாட்டில் சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இறப்பு என்து ஒரு குறிப்பிட்ட உலகிலிருந்து அல்லது நிலையிலிருந்து வேறொன்றிற்குச் செல்லுதல் ஆகும். பிரிநிலை, மாறுநிலை, இணை நிலை என்ற மூன்று நிலைகள் மரணத்திற்குப் பின் இருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்படி அடக்கம் செய்யப்படாத பிணங்கள் குழியிலிருந்து வெளியேறி வாழ்பவர்களைத் தாக்கிவிடும். அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்று நம்பப்படுகிறது. இக்கருத்து உலகில் எல்லாப் பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது.

கொள்ளி வைத்தல்

பிணத்தை வைத்து ராட்டியை அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்து விடுவார்கள். கொள்ளி வைப்பவர் தாய்க்குத் தலைமகன், தந்தைக்குக் கடைசி மகன் மொட்டையடித்து மீசை வழித்து குளித்து விட்டு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டு வருவார். வண்ணான் துண்டைப் பிணத்தின் அருகில் விரித்துப் போட்டு வைத்திருப்பார். கொஞ்சம் அரிசியும் வைத்திருப்பார். உறவுக்காரர்கள் கையில் ஒரு ரூபாய், அரிசியுடன் அள்ளுவார். மூன்று முறை சுற்றி, அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டு, காசை துண்டில் போடுவார்கள். கொள்ளி வைப்பவர் நீர்கலையத்துடன் இறந்தவரை (பிணத்தை) மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் போடப்படும். பிறகு பிணத்தின் கால் பகுதியில் நின்று பின்பக்கம் திரும்பி கொள்ளி வைத்து விட்டு மாயானத்தை விட்டு வெளியேறுவார்.

கட்டந்தலை பணம்

பிணத்திற்குத் தீ வைத்து ஆறு அல்லது குளம் போன்றவற்றின் கரையில் வேட்டியை விரித்துப் போட்டு அதில் மாமன், மைத்துனன், பங்காளி முறையோர் இழவுப் பணம் எழுதுவார்கள். அன்று உறவுக்காரர்கள் கலந்துப் பேசி, எட்டுக் கும்பிடுதல், பால் தெளித்தல், கருமாதி போன்ற நிகழ்ச்சிக்கு நாட்களைத் தெரிவிப்பார்கள். பிறகு குளித்து விட்டு வீடு வருவார்கள். அப்போது எதிரில் யாரும் வரக்கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் இறந்தவரின் இடத்தில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். வாசலில் இருக்கும் தண்ணீரில் கால்களைக் கழுவி விட்டு விளக்கு முகத்தில் முழிப்பார்.

சம்பந்தி சடங்கு்

“காடு புகையும் போது வீடு புகையக்கூடாது” என்பதால் இறப்பு நடந்த வீட்டில் சோறு ஆக்கும் பழக்கம் கிடையாது. இறப்பு வீட்டாரின் சம்பந்தி உறவு முறையினர் சமைத்துக் கொண்டு வரும் வழக்கம் உள்ளது. அதை அனைவரும் உண்ணுகின்றனர்.

பால் தெளித்தல்

இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்கும் பழக்கம் உள்ளது. இதனை காடமர்த்துதல் என்று கூறுவர். பால் அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று புதைத்த அல்லது எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளிப்பார்கள். ஆண்கள் மட்டும் சுடுகாட்டுக்குச் செல்கின்றனர். பெண்கள் இறந்தவரின் இடத்தில் பாலை வைத்து வணங்கி விட்டு அழுது விட்டும் அப்பாலை இறந்தவரின் இடத்திலோ குளத்திலோ ஊற்றி விடுகின்றனர்.

எட்டாம் நாள்

இறந்தவருக்கு எட்டாம் நாள் “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இறந்த அன்றே இச்சடங்கு தெரிவிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வருவார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் வைப்பார்கள். ஒப்பாரி வைத்து அழுவார்கள், அவர் மீது தண்ணீர் தெளித்து ஒப்பாரி நிறுத்தப்படும். கொள்ளி வைத்தவர் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்குவார். இறப்புச் சடங்குகளை வண்ணாரும் பரியாரியும் செய்வர்.

கல் நிறுத்துதல்

கருமாதி செய்யும் முதல் நாள் கல் நிறுத்தப்படும். இதற்குப் பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தெரிவிப்பார்கள். பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் வள்ளுவர் கல் நிறுத்துதல் என்னும் சடங்கினைச் செய்ய தொடங்குவர். இதற்கு இறந்தவரின் நினைவாக ஒரு முழு செங்கல்லை நீராட்டி அக்கல்லில் பூச்சரத்தைச் சுற்றி உயிர் விட்ட இடத்திலோ அல்லது திண்ணையிலோ இந்தக் கல் நிறுத்துதல் என்னும் சடங்கு முறை நிகழ்த்தப்படும். அதில் இறந்தவருக்குப் பிடித்தமான உணவு வகைகள் முழு வாழை இலையில் வைத்துப் படையல் போடப்படும். வள்ளுவர் சடங்கு முடிந்த பின் உறவுக்காரப் பெண்கள் சிறு வட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுவார்கள். அதிகாலையில் கொள்ளி வைத்தவர் இக்கல்லை எடுத்துக் கொண்டு ஆறு அல்லது கம்மாயி, ஏதோ நீர்நிலை வசதியுள்ள இடத்தில் அமர்ந்து சடங்குகள் செய்வர்.

கருமாதி

பதினாறாம் நாள் காலையில், புரோகிதர் (வள்ளுவர்) மற்றும் உறவுக்காரர்கள் கொள்ளி வைத்தவரைச் சந்திப்பார்கள். அது கருமாதித் துறை என்று அழைக்கப்படுகிறது. வள்ளுவருக்கு முன்னே கூலியில் ஒரு பங்கு வழங்கப்பட்டு விடும். கருமாதி செய்வதற்கான அரிசி, பச்சைக் காய்கறிகள், ஒன்பது வகை தானியங்கள், வெற்றிலை, சீவல், சூடம், சாம்பிராணி, தேங்காய், கருமாதி செய்வதற்கான சிறு சிறு கலையங்கள், நூல்கண்டு, இறந்தவரின் வீட்டில் செய்யப்பட்ட உப்பு இல்லாத சோறு போன்றவற்றை வைத்து கருமாதிச் சடங்கினைச் செய்து முடிப்பார். சிறு வீடு மாதிரி மண்ணால் கட்டி அதில் நான்கு புறமும் வாசல்படி அமைத்துச் சடங்கு தொடங்கும்.

புதிய வேட்டி சட்டை

கருமாதி சடங்கு முடித்ததும் தாய்மாமன், பெண் எடுத்த வகை உறவினர்கள், மாமன் மச்சான் உறவினர்கள், வேட்டி, சட்டை, கொள்ளி வைத்தவருக்கு உடுத்தியும், அவரின் சகோதர்களுக்கு உடுத்தியும், வீட்டுக்கு வருவார்கள், உணவு சமைத்து இருக்கும். மொய் வைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மொய் வைத்தும், உணவு சாப்பிட்டு உறவினர்கள் வீடு அல்லது ஊர் சென்று விடுவார்கள்.

முப்பதாம் நாள் படையல்

முப்பதாம் நாள் (இறந்ததிலிருந்து முப்படாவது நாள்) அவரின் நினைவாகப் படையல் போடப்படும் வழக்கம் உள்ளது. அன்று பெட்டைக்கோழி அடித்துப் படையலைத் தொடங்குவர்.

ஆண்டுப்படையல்

ஒரு வருடம் கழித்து இறந்த நாளில் மீண்டும் இறந்தவரை நினைத்து அவருக்குப் பிடித்தமான உனவு வகைகளை வைத்துப் படையலிடுவார்கள். இதில் உறவுக்காரர், பங்காளி உறவுமுறையோர் கலந்துக் கொள்வார்கள், ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்தச் சடங்கு முறைகளை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். நாம் முன்னோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுப்பது நாள்தோறும் கொடுப்பது போன்றது. நமக்கு ஓர் ஆண்டு என்பது அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும் என்பது மக்கள் நம்பிக்கை.

 

No comments:

Post a Comment