Total Pageviews

Tuesday, March 13, 2012

மாமியாரின் மனம் கவர மருமகளுக்கு டிப்ஸ்


தனிப்பட்ட முறையில் பிள்ளையைப் பெற்றவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். பார்த்து பார்த்து ஜாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல வரனாகத் தேர்ந்தெடுத்து நல்ல பெண்ணை மருமகளாக்கிக் கொண்டு அதன் பிறகு எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் அந்த மருமகள் தன் இஷ்டத்திற்கு வாழ அவர்கள் இருவருக்குள்ளும் நிறைய சண்டைகள் முட்டிக் கொள்ளும்.



மாமியாருக்கு என்று சில உரிமைகளும் கடமைகளும் இருப்பது போல மருமகளுக்கும் சில கடமைகளும் உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. நீங்கள் எப்படி உங்கள் மாமனார், மாமியாரை மதிக்கிறீர்களோ அதே போல் தான் நாளை உங்களுக்கு வரப் போகும் மகனும் மருமகளும் உங்களை மதிப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.அவரவர் உரிமைகளை வைத்துக் கொண்டு ஆட்டம் போட வேண்டாம். அவரவர் எல்லைக் கோடுகளை மீறாமல் அன்பாய் அனுசரணையாய் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவர் தவறுகளை மற்றவர்கள் பொறுத்து ஒருவருடைய குண நலன்களுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் அந்தக் குடும்பம் ஒரு அன்புக்கழகம் தானே.

மருமகளுக்கு ஆலோசனைகள்:

1. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்ணிற்கு பெண்ணின் தாய் பிள்ளையைப் பெற்ற அவர்களும் உன் பெற்றோர், அனுசரித்து நடக்க வேண்டும் என்று அன்புடன் போதிக்க வேண்டும். துர்போதனை கூடாது. புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதே அந்தப் பெண்ணிற்கு மாமியாரை இன்னொரு தாயாக பாவிக்கத் தோன்ற வேண்டும்.

2. மாமியார் என்றாலே ராட்சஸி, குற்றம் குறைகள் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி விட்டே அவரிடம் பழக ஆரம்பிக்க வேண்டும்.

3. வயதாக ஆக பெரியவர்களுக்குக் குழந்தை மனமும் பிடிவாத குணமும் அதிகமாகும். அதற்கேற்ப அனுசரித்து மருமகள் பழக வேண்டும்.

4. மாமியார் குடும்ப வழக்கம், பழக்கங்கள், சமையல் போன்ற அனைத்தையும் அவரிடம், 'அத்தை, எனக்குச் சொல்லித் தாங்க' 'அம்மா நீங்க உங்க பக்குவப்பிரகாரம் இந்தாத்துக்கு ஏத்த மாதிரி கத்துக் கொடுங்கோ' என்று ஆத்மார்த்தமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் என்ன பெரிய ஆளா? என்று அகந்தையுடன் தான்தோன்றித்தனமாக நடக்கக் கூடாது.

5. நிறைய மாமியார்களுக்கு மருமகளைக் கண்டால் பிடிக்காததன் காரணம் நேற்று வந்தவள் நம் மகனைப் பிரித்துக் கொண்டு சென்று விடுவாளோ என்ற அச்சமும் இவள் நம்மை வெளியில் தள்ளி விட்டால் நம் நிலையென்ன என்ற பாதுகாப்பில்லாத உணர்வும் தான். அதற்கு மருமகள் தான் நம்பிக்கையும் தெளிவும் பிறப்பிக்க வேண்டும்.

6. மாமியாரை வயதான தோழியாக நினைத்துப் பார்க்க வேண்டும். திருமணமாகி வேலைக்குச் செல்பவரானாலும் படிப்பவரானாலும் தன் அலுவலகத்திலோ கல்லூரியிலோ நேரிட்ட சுவையான அல்லது கசப்பான நிகழ்ச்சிகளைப் பங்கு போட்டு கொண்டால் மாமியாருக்கு மன ரீதியாக மருமகள் மேல் நம்பிக்கை வரும்.

7 .வயதான அவர்கள் அனுபவங்களையும் வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த மேடு பள்ளங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் வாழ்க்கையைத் தடையின்றி நடத்தலாம்.

8. மாமியாரின் அனுபவமும் திருமண வாழ்க்கையின் வயதும் தான் மருமகளின் வயது என்பதை உணர்ந்து பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

9. பண்டிகை காலங்களில் கணவரும் மனைவியும் குழந்தைகளுமாகக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

10. மாமியாரின் நல்ல குணங்களையும் அவர் உங்கள் கணவரை வளர்க்க பட்ட கஷ்டங்களையும் கேட்டு அவரை உயர்த்திப் பேசுங்கள், அது உங்களைப் பற்றிய மதிப்பீட்டை உணர்த்தும்.

11. மாமியாரின் சமையலையும் வீட்டை நிர்வகிக்கும் திறனையும் மாமனாரை அனுசரித்து அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் பாராட்டுங்கள். பாராட்டிற்கு உருகாத உள்ளங்களே கிடையாது. மருமகளின் பாராட்டிற்கு இன்னும் அந்தத் தாயுள்ளம் ஏங்கும்.

12. பிறந்த வீட்டுப் பெருமைகளை மாமியாரிடம் அடுக்காமல் புகுந்த வீட்டுப் பெருமைகளைத் தொலைபேசியிலோ நேரிலோ மருமகள் தன் பிறந்தகத்தில் உரையாடுவது நல்ல பலன் தரும். அதற்காக உங்கள் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டை உயர்த்துவது உங்கள் பிறந்தகத்தின் பெருமைகளைத் தானாகவே எடுத்துக் காட்டும்.

13. தன் தாயிடம் தர்ம அடி வாங்கின பெண்கள் கூட மாமியார் ஒரு சுடுசொல் கூறினால் பொறுத்துக் கொள்வதில்லை. கோபத்தில் மாமியார் சொன்ன வார்த்தைகளுக்குப் பெரிய மதிப்பளிக்கத் தேவையில்லை. அதை மறத்தல் மாமியார்- மருமகள் உறவிற்கு நல்லது.

14. கணவரைப் பற்றி ஒரு போதும் பிறந்தகத்திலோ தோழிகளிடமோ குறை கூறாதீர்கள். இப்படி கூறும் மருமகளை எந்த மாமியாருக்குப் பிடிக்கும்?

15. உங்கம்மா அதைப் பண்ணினாங்க, உங்க தங்கச்சி இதைப் பண்ணினா என்று வேலைக்குப் போய் விட்டு வந்த மனிதரைப் பாடாபாடு படுத்தாதீர்கள். இப்படி நீங்கள் சொல்வதை அன்புக் கணவர் மறு நாளே தன் தாயிடம் வெளிக்காட்டினால் மருமகளுக்குத் தான் கெட்ட பெயர்.

16. எக்காரணம் கொண்டும் மாமனார், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்துவதோ நீங்கள் அழகான கூடு போன்ற இல்லத்தைக் கலைத்துத் தனிக்குடித்தனம் போகவோ செய்யாதீர்கள்(இந்தக் கருத்து எல்லார் வீடுகளுக்கும் பொருந்தாது, பிரச்சினைகள் அதிகாயிருந்து பொறுக்க முடியவில்லை என்றால் அவரவர் பாதையைப் பார்த்து பிரிந்து செல்வது நல்லது)

17. நார்த்தனார்களாக இருப்பவர்கள் தங்கள் அம்மாவான பெண்ணின் மாமியாரிடம் கூறும் சில விஷயங்கள் மாமியார்- மருமகள் உறவைப் பாதிக்கலாம். அதற்கு இடம் கொடுக்காமல் முடிந்தால் நார்த்தனாரை உங்கள் தோழியாக்க முயலுங்கள்.

18. மாமியாரை நன்றாகப் பார்த்துக் கொண்டால் அவர் ஏன் தன் பெண்ணிடம் மருமகளைப் பற்றி குறைகளைப் பட்டியலிடப் போகிறார்? அந்த அளவிற்கு இடம் கொடுக்காமல் அன்பைக் கொட்டி விட்டால்?

19. சில மாமியார்கள் மரும்கள்கள் என்ன தான் சந்தனமாக இழைத்தாலும் அவர்களை மனதாரப் புகழ மனம் வருவதில்லை. இருக்கட்டும்? உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வார்த்தைகளாகக் கூறா விட்டாலும் ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் பணிவிடைகளை உணருவார்கள். அது போதுமே உங்களுக்கு.

20. பிறந்த வீட்டு உறவுகளை எப்படி கவனிக்கிறீர்களோ எப்படி உங்கள் இல்லத்தினர் கவனிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே போல் புகுந்த வீட்டு உறவுகளையும் தாங்குங்கள்.

21. மருமகள் வெளியில் சாப்பிடுவது என்றால் வயதான மாமியார், மாமனார் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அக்கறையுடன் தொலைபேசியில் விசாரித்து அந்த சிற்றுண்டியை வாங்கி வருவது உங்கள் மீது உள்ள அன்பை அதிகமாக்கும்.

22. குழந்தைகளை வளர்க்க பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியைப் போல் நினைக்காமல் அவர்களால் முடியாத அன்று அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

23. குழந்தைகளிடம் நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரைப் பற்றி உயர்வாகக் கூறுவது நல்லது. 'உங்க பாட்டி தான் அந்த காலத்து கதை சூப்பரா சொல்லுவாங்க, போய் கேளுங்க' என்பதும் பாட்டி, தாத்தாவை மதிக்காமல் பேசும் பிள்ளைகளைக் கண்டிப்பதும் மாமியார் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவும் உதவும்.

24. ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது உங்கள் மாமியார், மாமனாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அவ்வாறு வரும் போது உங்கள் திட்டமிடலின் படி சில இடங்களும் அவர்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும் கூட்டிச் சென்று வரலாம். அதை விட்டு விட்டு நீங்கள் உங்கள் கணவர், குழந்தைகளுடன் மட்டும் சென்று வர வேண்டும் என்று யோசிக்கக் கூடாது.

25. பெரிய முடிவுகள் எடுப்பதானால் பெரியவர்களைக் கேட்டே முடிவெடுக்கவும். நல்லது, கெட்டது என்ன? எந்த நேரத்திலே எது செய்யலாம்? எது கூடாது போன்றவற்றை அவர்கள் அன்புவ ரீதியாகக் கூறுவார்கள்.

26. திருமணமாகாத நார்த்தனாரோ மச்சினரோ இருந்தால் அவர்களுக்குத் திருமணத்திற்கு வரன் பார்ப்பது, அன்புடன் பழகுவது, பிடித்ததைச் செய்து தருவது என்று இருப்பதும் மாமியாருக்குப் பிடிக்கும்.

27. பண்டிகை காலங்களில் மாமியார், மாமனாரையும் கடைகளுக்கு அழைத்துச் சென்று பிடித்த துணிமணிகள், தின் பண்டங்கள் வாங்கித் தருவது குடும்பத்தின் உறவைப் பலப்படுத்தும். வர விரும்பாதவர்களுக்கு, பிடித்த நிறம் கேட்டுத் தெரிந்து கொண்டு நீங்களே தேர்வு செய்வதும் நல்லது.

28. மாமியாரின் தேவைகள் குறைகள் அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றைப் பார்த்து பார்த்து செய்திட வேண்டும்.

29. மாமியாருக்கும் மாமனாருக்கும் இனிய பரிசுகள், அவர்கள் மனம் கவர்ந்த சிறு சிறு பொருட்கள் வாங்கி அசத்துவதும் நல்லது.

30. சிக்கனமாக இருக்கும் மருமகளைத் தான் எல்லா மாமியாருக்கும் பிடிக்கும். அவர்கள் மனம் கோணதவாறு சிக்கனமாக இருப்பது குடும்பத்திற்கே நல்லது.

31.மாமியாரைப் பீச்சிற்கோ, கோவில்களுக்கோ உறவினர் இல்லங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களும் பாவம், வீட்டிலேயே அடைந்து கிடந்தால் அவர்களுக்கும் மாற்றம் வேண்டாமா?

32. மாமியார், மாமனாரை ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குக் கூட்டிச் சென்று அதற்கேற்ப மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வரச் செய்ய வேண்டும். உங்கள் அக்கறையான இந்த செயல் மாமியாரின் உள்ளத்தில் கோவில் கட்டி வழிபடச் செய்யும்.

33. சிடுசிடுவென மாமியாரிடம் எரிந்து விழாதீர்கள். சமைப்பதை ஆத்மார்த்தமாக உள்ளன்புடன் செய்து முடிந்தால் பக்கத்தில் அமர்ந்து பரிமாறுங்கள்.

34. மாதா மாதம் மாமியாருக்கென்று தனியே பணம் செலவிற்குக் கொடுக்கவும். அவர்களுக்கும் தனிப்பட்ட தேவைகளும் ஆசைகளும் இருக்குமல்லவா?

35. மாமியாரைப் பற்றி எந்த அவதூறும் வம்பும் பக்கத்து வீட்டிலோ தோழிகளிடமோ வம்பு பேசாதீர்கள், அவர்கள் காதிற்கு எட்டினால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்?

36. மாமியாருக்குப் பிடித்த விஷயங்கள், குறைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள். உதாரனமாக காசிக்குச் செல்வதோ ஏதேனும் கோவில்கள் சென்று வருவதோ நெடு நாளைய ஆசையாக இருக்கலாம்.

37. வெளிநாடு வாழ் மருமகள் என்றால் மாமியாருக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வது நல்ல பலன் அளிக்கும். முடிந்தால் அவர்களை உங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைச் சமைக்க விடாமல் ஓய்வளித்து ஊரைச் சுற்றிக் காட்டலாம்.

38. தாத்தா, பாட்டியின் அன்பும் அருகாமையும் அரவணைப்பும் கிடைக்க உங்கள் குழந்தைகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பிஞ்சு உள்ளங்களுக்கு அன்பு கிடைக்காமல் பிரித்து விடாதீர்கள்.

39. நீங்கள் உயிருடன் இருக்கும் போதே வயதானவர்களை அனாதைகள் போல காப்பகத்தில் சேர்க்காதீர்கள். அது மகா பாதகச் செயல். பாவம்.

40. மாமியார், மாமனாரின் மனம் குளிர குளிர உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் சந்ததியினருக்கே ஆசிர்வாதம் தான். ஒரு வேளை படுத்தும் மாமியாராக இருந்தாலும் நீங்கள் செய்த பணிவிடைகள் புண்ணியக் கணக்கில் போய்ச் சேரும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

41. உங்கள் கணவர் மனதில் இடம் பிடிக்க அழகாக இருந்து அன்பாக நடந்து நன்றாக சமைத்தால் மட்டும் போதாது. மாமியாரிடம் நடக்கும் முறை உங்கள் கணவருக்கும் உங்கள் மேல் பாசமும் நல்ல அபிப்பிராயமும் உண்டாக வழி வகுக்கும்.

42. அம்மா பிள்ளையாக உங்கள் கணவர் இருக்கிறார் என்றாலும் தவறில்லை. நீங்கள் அவரைத் தாண்டி உங்களவரே பொறாமைப்படும் அளவிற்கு மாமியார் மெச்சும் பொண்ணாக இருங்களேன்.

43.மாமியார்களிடம் அன்பாகப் பழகிப் பார்த்தவர்களுக்கு அவர்களது குழந்தையுள்ளம் புரியும். அன்பிற்கு ஏங்கும் அந்த உள்ளங்களுக்கு அன்பைக் கொட்டிக் கொடுங்கள். பெண்ணிற்குப் பெண்ணே எதிரி என்ற கருத்தை உடைத்துக் காட்டுங்கள். மாமியார் மெச்ச வாழ்ந்து காட்டுங்கள்.

44.பிறந்தகத்தில் இருப்பது போல் இங்கும் மாமியாரிடம் அரட்டை அடித்து கலகலப்பாகப் பழகுங்கள்.

45. முந்தின நாள் இரவில் சண்டை நடந்தது என்றால் அடுத்த நாள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளாமல் இயல்பாய், 'பரவாயில்லை அத்தை, ஏதோ கோபத்தில் சொல்லிட்டீங்க, நானும் மறந்துட்டேன், நான் தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கங்க' என்று உங்கள் மேல் தவறு இருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மாமியார் மேல் இருந்தால் அப்போதே மறந்து விடுங்கள்.

46. உங்கள் மாமியார்- மருமகள் சண்டைகள் கோபங்களை உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி சின்ன சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

47.மாமியாருக்காக உங்கள் சுயத்தை விட்டுக் கொடுத்து உங்களை மாறுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள். அதே நேரம் இயல்பாய், யதார்த்தமாய் பிடித்ததது பிடிக்காதது உணர்ந்து சூழலுக்குத் தக்கவாறு அனுசரித்து நடங்கள்.

48. அடுத்தவர் உங்கள் உறவில் புகுந்து நாட்டாமை செய்யும் அளவிற்குப் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் கூடுமானவரை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

49. உங்கள் மேல் உங்கள் கணவர் காட்டும் அன்பும் மரியாதையும் நீங்கள் வாழும் இந்த வாழ்க்கையும் கிடைக்கக் காரணமே உங்கள் மாமியார் என்ற வாழும் தெய்வம் என்பதை மறந்து விட வேண்டாம். மாமியார் உங்களவரை உங்களுக்குப் பரிசளித்த தாய்.

50. 'எண்ணம் போல் வாழ்வு' என்பார்கள். மாமியாரைப் பற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை இந்த நொடியிலே அகற்றி விடுங்கள். அவரது நிறைகளைப் பாருங்கள். குறைகளைப் பெரிதாக்காதீர்கள். தாயாக நேசியுங்கள்.

மாமியார்- மருமகள் உறவு அன்புக்கலை. இதைப் படிக்க நல்ல உள்ளமும் அன்பு காட்டும் திறனும் இருந்தாலே போதும். வம்பை விடுத்து அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள். மாமியார்- மருமகளின் உறவு கணவருக்கும் நன்மை தரும். அம்ம்மவிற்கும் பேச முடியாமல் மனைவிக்கும் பேச முடியாமல் தத்தளிக்கும் துர்பாக்கியம் அந்தப் பையனுக்கு வேண்டாமே. உங்கள் ஒற்றுமை தான் குடும்பத்தின் ஆணிவேர், அஸ்திவாரம் எல்லாமே. மாமியார்- மருமகள் உறவில் பொறாமை வேண்டாம், பொறுமை போதும். பெருமை வேண்டாம், திறமையும் நேர்மையும் போதும். தலைக்கனம் வேண்டாம். தன்மையும் மென்மையும் போதும். வம்பு வேண்டாம், அன்பு போதுமே.சிந்திப்பீரா? மாமியார் மனதில் இடம் பிடித்தாயிற்று.


Thanks to Tamilooviyam

No comments:

Post a Comment