Total Pageviews

Sunday, August 20, 2017

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் !


‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியா வை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜனவரி 23, 1897

இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவரு டைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கி லுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

திருமண வாழ்க்கை

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜி யின் பங்கு

‘தன்னுடைய நாட்டை அடிமை ப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலே யரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபை களை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர் களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.

1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பது தான் எனது கொள்கை” என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டு விழா நடத்தியதோடு மட்டு மல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக் கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல் வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேரு வையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாரா மையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணா விரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.

‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.

சுதந்திர இந்திய ராணுவம்

1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.

போஸ் மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.
Photo

Sunday, February 26, 2017

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !



பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகிவிடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால்,

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் கோயிலைப்பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில்கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்துகொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்  மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது!

Friday, February 24, 2017

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்

ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம்
திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

"பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், 


எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?" 


மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்

ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை
ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான்
கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.

இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

Thanks to Malathi.C

கடல் !




கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.

பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு.

வாழ்வியல் நீதி!

எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,

உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.

அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.

குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று
கருடபகவான்,

குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"

நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,

அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது;

அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.

அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.

வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ
அது நிகழ்ந்தே தீரும்.
அதனால்
அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல்,
செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே
வாழ்வியல் நீதி!

நேர்மையை விதையுங்கள்...

நேர்மையை விதையுங்கள்...

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால், நிறுவனத்தின் பொறுப்பை தன்னிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லாரும் தன் அறைக்கு வருமாறு உத்தரவிட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் நான் வைக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்களே அந்த அரியனையை அலங்கரிப்பர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கு ஒன்று கொடுக்கிறேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரமிட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம், இதே நாள் எடுத்து வந்து என்னி டம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் அடுத்த எம்.டி. என்றார்.

அனைவரும் விதையை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்னதையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் சென்றது.

நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்துவிட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ராமு. ஆனால், தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் உருண்டோடிவிட்டது.

எல்லாரும் முதலாளியிடம் பூத்தொட்டியை காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போக மாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.

செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்தான். அவனுடன் பணிபுரியும் ஊழியர்களின் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள். உங்களில் ஒருவர்தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகிறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வையிட்டார்.

ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான். அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்தபடியே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உர மிட்டு தண்ணீர் விட்டதை விலா வாரியாக சொன்னான். முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டு கொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பினான். நான் உங்களுக்கு கொடுத்த விதைகள் அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்.

ஆகவே, 

***அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

***நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்..!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது! நேர்மையை விதையுங்கள்! பதவியும் பணமும் தேடிவரும்.

Thanks to Malathi.C