Total Pageviews

Tuesday, November 18, 2025

கமலுக்கு பாலசந்தர் கொடுத்த பேரதிர்ச்சி... கோபம் கொப்பளிக்க வந்த நேரத்தில் நாயகன் எடுத்த முடிவு !

 

எல்லாருக்குமே இக்கட்டான சூழல் என்று ஒன்று வரும். அது வரும்போது என்ன செய்யணும்னு ஒரு நிமிஷம் திகைச்சி நிற்போம். அதுல நிறைய தப்பும் நடக்கும். சுதாரிக்கிறவங்க பெரிய ஆளாகிடறாங்க. அப்படி ஒருவர் தான் கமல். என்ன நடந்ததுன்னு பாருங்க.

உதவி இயக்குனராகத் தன்னை சேர்த்துக் கொள்ளத் தான் பாலசந்தர் கூப்பிடுறாருன்னு நினைச்சி அவசரம் அவசரமாக கமல் ஓடி வந்தாராம். ஆனால் அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவின் தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்படி இருந்தும் கமல் நான் உதவி இயக்குனராகத் தான் வந்தேன் என்றாராம்.

ஆனால் அவரோ இந்தப் படத்தில் உன்னை நடிக்கத் தான் கூப்பிட்டேன் கறாராக சொன்னாராம் பாலசந்தர். அப்போது கமலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தற்செயலாக வெளியே எட்டிப் பார்த்துள்ளார். அங்கு ஏகப்பட்ட இளைஞர்கள் பாலசந்தரோட தரிசனம் கிடைக்காதா என வாய்ப்புக்காகக் காத்திருந்தார்களாம்.

அப்போது கமலின் மனசாட்சி ஒன்றை சொன்னதாம். இப்போ இந்த சான்ஸை விட்டா உனக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காது. பாலசந்தரை இனிமே சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்காது என்று.

உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம் கமல். அரங்கேற்றம் படத்தின் படப்பிடிப்பின் போது கமல் காட்டிய முகபாவங்கள் பாலசந்தரை ஆச்சரியப்பட வைத்தன. அவர் சொல்லாத பாவனைகளைக் கூட காட்டி அசத்தினாராம். கமலின் அந்த செய்கைகள் பாலசந்தரைப் பெரிதும் கவர்ந்தது.

அதனால் அரங்கேற்றம் படத்தின் கிளைமாக்ஸ்ல கமலுக்காகவே ஒரு காட்சியை வைத்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது உதவியாளரும் நண்பருமான அனந்துவிடம் இந்தப் பையன்கிட்ட பெரிய ஸ்பார்க் இருக்கு. நிச்சயமா இவன் பெரிய ஆளா வருவான்னு சொன்னாராம்.

அரங்கேற்றம் படம் வெளியான சில நாள்களிலேயே கமல் அவரை சந்திக்க வந்தார். அப்போது வெறும் 500 தான் எனக்கு சம்பளமா என அவரிடம் கோபத்தில் கேட்டாராம். இது சோதனை முயற்சி தான். இனி வரும் படங்கள்ல நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கும். நீ அற்புதமா நடிச்சிருக்கன்னு எல்லாரும் சொல்றாங்கன்னாரு. அதைக் கேட்டதும் கமல் அமைதியாகத் திரும்பினார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1973ல் பாலசந்தர் இயக்கிய படம் அரங்கேற்றம். சிவகுமார், பிரமிளா, சசிகுமார், எம்என்.ராஜம், ஜெயசித்ரா, எஸ்.வி.சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். வி.குமார் இசை அமைத்துள்ளார். கமல் வாலிபன் ஆனதும் வெளியான முதல் படம் இதுதான். இதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி வந்தார்.

Thursday, November 13, 2025

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

 

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

உயர்ந்த மனிதன் நடிகர் திலகம் சிவாஜியின் 125வது படம். ஏவிஎம் தயாரித்த அந்தப் படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு. அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சௌகார் ஜானகி. அந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பொருத்தவரைக்கும் முதலில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குப் பின்னால் ஏவிஎம்மில் தொழிலாளர்கள் பிரச்சனை ஏற்பட்டதால் இடையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காலம் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்குவதற்காக சௌகார் ஜானகி செட்டில் நுழைந்தார். அவரைப் பார்த்த உடனே சிவாஜிக்கு அதிர்ச்சி. ‘முதலில் படமாக்கிய காட்சிகளில் புடவையின் கலர் கருப்பு. இப்போது அந்தக் கலர் வேற மாதிரி இருக்கு. அதைக் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க’ன்னு அங்கு இருந்த உதவி இயக்குனர்களிடம் சிவாஜி சொன்னார்.

அதை அந்த உதவி இயக்குனர் சௌகார் ஜானகியிடம் சொன்னபோது ‘இல்ல இல்ல. நான் போட்டுருந்த புடவை இதுதான்’னு சாதித்தார். சிவாஜி அந்தளவுக்கு உறுதியா சொன்னதனால எடுத்தளவு அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்னு போட்டுப் பார்த்தார்கள். அப்படிப் போட்டுப் பார்த்த போது சிவாஜி போகல. சௌகார் ஜானகி மட்டும்தான் போனார். பார்த்தபோது தான் தெரிந்தது. அன்றைக்கு கட்டியிருந்தது கருப்புப் புடவைதான் என்று.

அங்கிருந்து படப்பிடிப்பு தளததிற்கு ஓடோடி வந்த சௌகார் ஜானகி சிவாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். என்னை மன்னிச்சிடுங்க. நான் தெரியாம சொல்லிட்டேன். அன்னைக்கு நான் கட்டி இருந்தது கருப்பு புடவை தான் என்றார். அந்தளவுக்கு மன்னிப்பு கேட்டார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் என்னன்னா அதற்கு முன்னாலே சிவாஜிக்கும் சௌகார் ஜானகிக்கும் இடையில் ஒரு மனத்தாங்கல்தான்.

அன்றைக்கு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிவாஜியோட ஞாபகசக்தி தான். உயர்ந்த மனிதன் படத்துக்குப் பின்னாலே எத்தனை படங்களில் சிவாஜி நடித்திருப்பார். அத்தனைப் படங்களில் நடித்த பின்னாலும் அந்தக் குறிப்பிட்ட காட்சியிலே நான் என்ன கலர் புடவை அணிந்திருந்தேன் என்பதை மிகச்சரியாக கூற முடிந்தது என்றால் அவருக்கு எப்பேர்ப்பட்ட ஞாபகசக்தி இருந்து இருக்கும் என்று சௌகார் ஜானகி பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலைத் தொகுத்து வழங்கியவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

விபத்தால் சிதைந்து போன ஜனகராஜ்... நீ தான் ராதாவுக்கு ஜோடி என்ற பாரதிராஜா!

 

80களில் நகைச்சுவை நடிகர்களில் ஜனகராஜ் நடிக்காத படங்களே இல்லை எனலாம். அப்போது அவருக்கு சினிமாவில் அந்தளவுக்கு மார்க்கெட் இருந்தது. பாரதிராஜா, பாக்கியராஜ, மணிரத்னம் இவரது நண்பர்கள். ஆரம்பத்தில் ஜெமினிகலர் லேப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் பழக்கமாம். அந்த வகையில் சினிமாவைத் தேடி இவர் போகவில்லை. இவரைத் தேடித்தான் சினிமாவே வந்ததாம்.சத்தமாகப் பேசுவதும், இவரது மெட்ராஸ் பாஷையும் தான் இவரை ரசிகர்கள் கொண்டாட காரணமாயின.

80 முதல் 90 வரை இவர் நடித்த படங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதன்பிறகு இவருடைய படங்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. பாரதிராஜா, டெல்லி கணேஷ், மணிரத்னம் இவரது ஆரம்ப கால நண்பர்கள். அதனால் அவர்களது படங்களில் இவர் பெரும்பாலும் நடித்து விடுவார். இவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் முகம் காயமானது.

அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் இவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள். ஒரு கண்; சிறியதாகவும், ஒரு கண் பெரியதாகவும் இருப்பதற்கும் இதுதான் காரணமாம். இனி சினிமாவில் எல்லாம் நடிக்கவே முடியாது என்று நினைத்தாராம்.

முகத்தில் அறுவை சிகிச்சை நடந்தபோது பாரதிராஜா பார்க்க வந்தாராம். என் அடுத்த படத்தில் ‘நீ தான் ஹீரோ. ராதாவுக்கு ஜோடி’ என சொல்ல இவரால் நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு வந்த படம் தான் காதல் ஓவியம். விபத்தில் சிதைந்த முகமே இவருக்கு அதன்பிறகு சினிமாவில் மார்க்கெட் வர காரணமாயின.

செவப்பு வில்லு என்ற படத்தில் தான் இவர் முதலில் நடித்தார். அதன் பிறகு கன்னிராசி படத்தில் நடித்து பிரபலமானார். கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம், பாலைவனச்சோலை படங்கள் இவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா என அவர் பேசும்போது தியேட்டரே சிரிப்பலையால் குலுங்கியது. நாயகன் படத்தில் கமலுடன் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார். அதே நேரத்தில் குணச்சித்திர கேரக்டரையும் செய்வார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரது காமெடி தூள் கிளப்பும். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன்பிறகு இவருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களே வந்தன. அதற்குள் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோர் வர ஆரம்பித்தனர். அப்போது ஜனகராஜின் படங்கள் குறைய ஆரம்பித்தன. ரஜினியின் அருணாச்சலம், மணிரத்னத்தின் ஆயுத எழுத்து போன்ற ஒரு சில படங்கள் தான் இவருக்குக் கிடைத்தன.

10 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியின் 96 என்ற படத்தில் நடித்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. அதன்பிறகு நீண்டகாலமாக அவர் கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார். கடைசியாக தாத்தா என்று ஒரு குறும் படத்தில் நடித்தார். இது தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான படம். நரேஷ் இயக்கியுள்ளார்.

எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே

 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்...

மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.

Wednesday, October 29, 2025

குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் !

 

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்

எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,

ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்

அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...

எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.

அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..

இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்

எம்ஜிஆர் இவர் கிட்ட பணம் கேட்டு வாங்குவார் இவருக்கு பணம் தேவை என்றால் எம்ஜிஆரிடம் கேட்டும் வாங்குவார் அந்தளவுக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்

கலைஞர் வீட்டுக்கு போனால் கலைஞர் வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் அளவுக்கு நெருங்கிய நட்பு

மணலி கந்தசாமி அவர்களிடம் நெருங்கிய நண்பர்

மாரியப்ப வாண்டையார்

முத்தையா செட்டியர்

புதுவை முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...

அத்தி வெட்டி அய்யா உக்கடை தேவர்.

பூண்டிதுளசி அய்யா வாண்டையார் எல்லோரும் அவரது நட்பு வட்டம்....

இவர் பரம்பரை காங்கிரஸ் காரர் என்றாலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி உதவி செய்து அதிகமாக செலவு செய்தவர்

தஞ்சாவூர் ஜில்லா போர்டு தேர்தலில் நின்றார்...பஞ்சாயத்து பேசுவதில் வல்லவர்...மக்கள் மனதில் நின்ற வள்ளல்..

தன் மகன் பாஸ்கரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சோமு தேவர், எம்.எஸ்.பாஸ்கரை நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்க வைத்தார், நாகையில் படிக்கும்போதே பாஸ்கர் நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது சிறுவயது முதலே ரத்தத்திலேயே ஊறி இருந்தது.

இந்த நிலையில் தான் 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் மேற்ப்படிப்புக்காக சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலானார்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.

டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.

விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.

அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இயக்குனர் பாலசந்தர் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார்

காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன் மிகவும் அவரை பாராட்டி மகிழ்ந்தார்

எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார்..

செப்டம்பர் 13 தேதி 1957ல் ஜமீன்தாரின் மகனாக பிறந்து செல்வாக்காக வளர்ந்து இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான குணசித்திர நடிகர் மட்டுமின்றி இவரது புகழுக்கு மணிமகுடமாக பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தில் காமராஜர் பேசியது போலவே காதுகளில் ஒலிக்க செய்தவர் மதிப்புகுறிய எம் எஸ் பாஸ்கர் அவர்கள்

அது மட்டுமல்ல தென் மாவட்ட நாடார்களின் பேச்சுகளையும்

சென்னை பூர்வகுடி பேச்சுக்களையும் கோவை கவுண்டர்களின் கொங்கு தமிழ் பேச்சுக்களையும் அச்சி அசலாக பேசக்கூடிய அற்புத கலைஞர்

இவரின் தமிழ் உச்சரிப்பு மேலும் பல பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்

இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான எம்‌எஸ்.பாஸ்கர் அவர்கள் பாஜக மூத்த தலைவரான பேட்டை சிவா அவர்களின் மாமா என்பது தனி சிறப்பு ஆகும்

இவரது உடன் பிறந்தவர் மகன் மகள் பேரன் பேத்திகள் தம்பிக்கோட்டை கீழக்காடுட்டிலும், சென்னையிலும் வாழ்ந்து வருகிறார்கள்

வாழ்க அன்னாரின் புகழ்

Monday, October 27, 2025

பாலசந்தர் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியாகி இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன!

 

இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமான்னு அப்பவே ஆச்சரியப்பட வைத்த இயக்குனர்; பாலசந்தர். ஏன்னா அவரோட படங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவை. 50 வருஷத்துக்குப் பிறகு நடக்கப் போற விஷயத்தை அப்பவே அசால்டாக எடுத்திருப்பார். அந்தளவு முற்போக்கான சிந்தனை கொண்டவர். அப்படி ஒரு அற்புதமான அவரது படைப்பைப் பற்றித் தான் இங்குப் பார்க்க உள்ளோம்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகையைத் தேடிக் கொண்டு இருந்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அப்போது அவருக்கு எர்ணாகுளம் படத்தில் 2 பீஸ் உடையில் நடித்த சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. தனது படத்துக்கு இவள் தான் கதாநாயகி என்று முடிவு செய்தார்.

அதன்படி பேசி நடிக்க வைத்தார். அப்போது சுஜாதாவால் பாலசந்தர் சொல்லிக் கொடுப்பது போல நடிக்க முடியவில்லை. திணறினார். அதனால் பாலசந்தர் அவரைக் கோபத்தில் திட்ட, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாராம். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருந்ததாம்.

பாலசந்தரே பிரமிக்கும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பாலசந்தர் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய திறமை எப்படி இருக்கும் என்பதை எடைபோடுவதில் வல்லவர். அப்படித்தான் சுஜாதா விஷயத்திலும் இருந்துள்ளது. இல்லாவிட்டால் 2 பீஸ் உடைக்கும், இந்தப் படத்தில் சுஜாதா அணிந்த உடைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எப்படி கணித்துள்ளார் என்று பாருங்கள்.

இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அது தான் விகடகவி ரோல். அந்த கதாபாத்திரத்துக்குக் கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்த ராஜேஷ் சரியாக வருவார் என்று நினைத்தார் பாலசந்தர்.

அப்போது அவர் வாத்தியாராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். நல்ல தமிழ் பேசுவார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துவாரா என்ற சிந்தனை அவர் மனதிலே இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் யாரை நடிக்க வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டே இருந்தார் பாலசந்தர்.

ஒருநாள் கஸ்தூரி ரங்கன் சாலையில் பாலசந்தர் காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்தப் பக்கமாகக் கமல் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் அடடா இந்தப் பையனை மறந்துவிட்டோமே என்று நினைத்தார்.

அப்போது கமலை சந்தித்ததும் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 3 நாளில் திட்டமிட்டு அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் பாலசந்தர். அதனால் பெரிய லாபம் கிடைத்தது என்கிறார் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல். இந்த மாதிரி பாலசந்தர் திட்டமிட்டபடி பணியாற்றாமல் இருந்தால் நான் கடன்சுமையில் மூழ்கி இருப்பேன் என்றார் அவர்.

இந்தப் படத்தின் 100வது நாள் விழாவுக்கு பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் வந்து இருந்தார். முன்னர் இதுபோன்ற ஒரு பாராட்டு விழாவில் சத்யஜித்ரேவை சந்தித்துள்ளேன். இப்போது இன்னொரு மேதை பாலசந்தரை சந்திக்கிறேன் என்றாராம். 1974ல் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் இப்போதும் புத்தம்புது படம் பார்த்த மாதிரி தான் பிரஷ்ஷாக இருக்கும் அதன் கதை.

Wednesday, October 22, 2025

சமயம் பார்த்து அடிப்பதில் கண்ணதாசனை மிஞ்ச ஆளில்லை... அண்ணாவுக்கே டஃப் கொடுத்துட்டாரே!

 

கவிஞர்களுக்குள் சண்டை வந்தாலும் அது சனையாகத் தான் இருக்கும். ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்த ஒரு சுவையான சம்பவம் தான் இது.

கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர்.

பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என பிளவு வந்து விட்டது. கண்ணதாசனின் மனதில் அண்ணா செய்த செயல்கள் யாவும் ஆழமாக பதிந்து விட்டன. அது மனதைப் பாதித்தன. நேரம் கிடைக்கும்போது அதைக் கொட்டி விட நினைத்தார். நேரமும் வந்தது. அதுதான் சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா. அந்தப் படத்தில் ஒரு சிச்சுவேஷன்.

அண்ணன் பாலாஜி, தம்பி சிவாஜிக்கு ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான். ஆனால் நடந்த உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலை. இதுதான் சிச்சுவேஷன். அண்ணா பாட்டு எழுதுங்கன்னு கண்ணதாசனைப் பார்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. சொல்கிறார்.

கண்ணதாசனுக்கு இந்த சிச்சுவேஷன் அல்வா சாப்பிடுவது போல இருந்தது. இத்தனை நாளா இதற்காகத் தானே காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். மனதில் இருந்த காயத்தை ஆற்றும் வேகத்தில் அந்த சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுதானே கவிஞன். என்ன பாட்டுன்னு பாருங்க.

‘அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழி அம்மா. கண்ணை இமையே பிரித்ததம்மா - என் கையே என்னை அடித்ததம்மா...’ என்று பேனாவால் அண்ணாவை அடித்தார்.

அது மட்டும் அல்லாமல், அவனை நினைத்தே நான் இருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை. அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை என்று தன்னிலை விளக்கமும் அதே பாடலில் கொடுத்தார். அந்தப் பாடலை அண்ணாவிடம் போட்டுக் காட்டினர் சிலர்.

இருவர் பகையில் நாமளும் குளிர் காயலாமே என்ற நப்பாசையில் அவர்கள் வந்ததை அண்ணா புரிந்து கொண்டார். அதனால் விடுய்யா. என்னை அவர் நல்ல தமிழில் தானே திட்டுகிறார். திட்டி விட்டுப் போகிறார். விட்டு விடுங்கள் என்றாராம்.