Total Pageviews

Tuesday, April 23, 2013

பூம்புகார் – தமிழ்ப் பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்





சுமார் 11 500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகிய தோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.  "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிடங்களை கொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கிய நயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும், கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் என ஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும், அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறு தேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும், இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்த பூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.

பூம்புகாரை கலைக் கண்களோடும் வரலாற்றுப் பார்வையோடும் காணச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு, ஒரு நாள் மாலைப்பொழுது இனிமையானதாக அமையும்.

நாகப்பட்டணம் மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ளது பூம்புகார். சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தூரம். மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தூரம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பூம்புகாருக்கு வரலாம். காரில் வருபவர்களுக்கு பயணம் மேலும் வசதியாக இருக்கும்.

மாலை 4 மணியளவில் பூம்புகாருக்கு வந்தால் கலைக்கூடம் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டடத்தையும் ரசித்துவிட்டு, 6 மணியளவில் கடற்கரைக்கு வரலாம். அந்தி சாயும் பொழுதை கடல்காற்றுடனும் அலைகளுடனும் கழித்துவிட்டு உற்சாக மனநிலையுடன் திரும்பலாம்.

பூம்புகாருக்கு அருகே தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மயிலாடுதுறை நகரத்தில் தங்குவதற்கு பல ஹோட்டல்கள் உள்ளன.

மழையும் வெயிலும் அதிகமில்லாத ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணிப்பது சிறப்பு.

கடல் கொண்ட நிலப்பகுதிகளால் தமிழகம் இழந்தவை ஏராளம்.

1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாளன்று வீசிய புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகால 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால்  ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான வர்கள் பலியாயினர். சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்பவர்கள் தனுஷ்கோடி வரை போட்மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் செல்வது அன்றைய வழக்கம். அந்த போட்மெயில் எக்ஸ் பிரஸையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது, அந்த ஆழிப்பேரலை.  கடல் கொண்ட தனுஷ்கோடியில் இன்று எஞ்சியிருப்பது, சிதிலமடைந்த ஒருதேவாலயமும் சிலகட்டிடங் களும் மட்டுமே.

புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கண்ட ஆழிப்பேரலையை அறிவோம். 26-12-2006-ல் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி, அந்தமான்-நிகோபர் தீவுகளின் இந்திரா முனை வழியாக தமிழகக் கடற்கரையைத் தாக்கிய அந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் 1000 கி.மீ. நீள கடலோரப்பகுதிகளில் பெரும்பாலானவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. ராமேஸ்வரம், திருச்செந்தூரைத் தவிர மற்ற கடலோரப் பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டன.  பல மீனவ கிராமங்கள்  மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகளற்றுப் போயின. தமிழகத்தின் கடல் எல்லைகள்  இயற்கையின் கரங்களால் திருத்தியமைக்கப்பட்டன.

இப்படித் திருத்தியமைக்கப்படுவது நெடுங்கால மாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில பகுதிகள் கடலுக்குள் சென்றதுபோல, சில பகுதிகள் கடலிலிருந்து வெகுதூரம் சென்றிருப் பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னை கடற்கரையின் மணற்பகுதி கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்திருப்பதாக நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு கடலோரமாக இருந்த சீர்காழி தற்போது கடற்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளடங்கியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உரு வாக்கப்பட்ட மணல் திட்டுகளும், நேராகப் பாயும் பாலாற்றில் செங்கல்பட்டுக்கு அருகே காணப் படும் திடீர் வளைவும், கடலைச் சந்திக் காமல் திருவெண்ணைநல்லூர் அருகே புதையுறும் மலட்டாறும், வேதாரண்யத் திலிருந்து திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் மணல் திட்டுகளும், வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்களும் இங் கெல்லாம் ஒருகாலத்தில் கடல் இருந்தது  என்பதைக் காட்டுவனவாக இருக்கின்றன என்கிறது, ஆய்வு முடிவு.

சுமார் 65ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் தாழ்ந்ததால் தமிழகமும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாகச் சேர்ந்திருந்தன என்றும், சுமார் 27ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும், தமிழகமும் பிரிந்தன என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 17ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இதேபோல கடல் மட்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் மாறுபாடுகளை உருவாக்கியதால் தமிழக-இலங்கை நிலப்பரப்பு சேர்ந்து-பிரிய வேண்டிய சூழல் மறுபடியும் ஏற்பட்டது, என்கின்றனர்.  இப்படி இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. இராமர் இலங்கைக்குச் செல்ல, அனுமன் கட்டிய பாலம் என்று சொல்லப் படுவது இந்த மணல் திட்டுகளைத்தான்.

புவி அமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா-க்ரீன்லாந்து-ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்தால், தாழ்வான கடற்கரையைக் கொண்டி ருக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல மூழ்கடிக்கப்படுமாம். இந்த எச்சரிக்கை,  தமிழகத் தின் கடலோர வரைபடம்- இயற்கையின் கைகளால் மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு கடற்கோளும் மண்ணோடு சேர்த்து பண்பாட்டு-வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் தமிழகம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகிறது. இயற்கையைச் சிதைக்காமல் வாழும் கலையையும் கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியையும் கைக்கொண்டால், முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் காப்பாற்றலாம்.

பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியதென்றும், இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது என்றும், மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது என்றும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்-இடைச் சங்கங்களை வளர்த்த தென்மதுரையும், கபாடபுரமும் கடலுக்கு இரையானதால் தமிழின் தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. மருத்துவம், வானியல், கணிதம், அறநெறி என ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்களை கடல்தாய் தன்னகத்தே கைப்பற்றிக்கொள்ள, நிலத்தோடு சேர்த்து பல சிந்தனை வளங்களின் குவியலையும் இழந்தாள், தமிழ்த்தாய். இன்று தமிழர்களிடம் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் கடைச்சங்கம் அமைந்திருந்த இன்றைய மதுரையிலிருந்தும் சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களுமேயாகும் என்கின்றனர், புலவர் பெருமக்கள்.

அன்றைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள், காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி  போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார். சோழர்களின் ஆட்சிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந் நகரத்தைப் பற்றி சிலப்பதிகாரம்,  பட்டினப்பாலை, மணி மேகலை ஆகிய நூல்கள் விவரித்துக் கூறுகின்றன. பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்ட நகரத்தில் சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விளக்கும் பட்டினப்பாலை- அந்த எழிலை கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. கிரேக்கத் திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் வருகைதரும் வணிகர்களோடு கடல்வாணிபம் நடத்தும் சிறப்பைப் பெற்றிருந்திருக்கிறது அன்றைய பூம்புகார்.

நான்காம் கடற்கோளில் பூம்புகார் நகரத்தை கடல்கொண்டதை கிரகாம் குக் என்ற ஆய்வாளர் வீடியோ படமாகவே எடுத்திருக்கிறார். மொழி ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்பதை கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ படங்கள் நிரூபிக்கின்றன. மீனவர்களின் உதவியுடன் இந்திய நிலவியல் வல்லுநர்களால் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் இருப்பதும் மண் மற்றும் கல்லால் செய்யப்பட்ட கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர்கள், முற்றங்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், பெரிய குதிரைவடிவ பொம்மைகள் ஆகியவை படம் பிடிக்கப்பட்டுள்ளன என்று கிரகாம் குக் தெரிவிக்கிறார். கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வல்லுநர்களுக்கு கிரகாம் குக்கின் வீடியோ படம் புதிய அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத் திருக்கிறது.

தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகாரை மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை சிற்பி கணபதி ஸ்தபதியின் துணையுடன் அமைத்தார். பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக  பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. முதல்வர் கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது. அதேவேளையில், கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்து மேலும் பல கடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால்; மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.

1 comment:

  1. உண்மைதான் இன்றைய கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்கள் சிந்து நாகரீகத்தின் முன்னோடிகள் என்பதை மெய்பித்துள்ளது. இந்தியா என்றுமே இத்தகைய ஆய்வுகளுக்கு ஆதரவளிப்பதில்லை.

    ReplyDelete