Total Pageviews

Thursday, February 11, 2016

ஜனகனின் வில்லை உடைத்தது யார்?"

சும்மா ஒரு கற்பனை... படித்தது !

கி.பி 2064..

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் காலம்!

கீழ் கண்ட சம்பவம் அவர்கள் மத்தியில் நடக்கிறது..

தமிழ் வகுப்பு, கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர் மாணவர்களின் கவனிப்புத் திறனைப் பரிசோதிக்க எண்ணி கேள்வி கேட்டார்.

"மாணவர்களே! என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்கள், ஜனகனின் வில்லை உடைத்தது யார்?"

மாணவர்கள் முகத்தில் பீதி கிளம்பியது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தனர்.

ஆசிரியருக்கு கோபம் வந்தது.. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை எழுப்பினார்.

"நீ பதில் சொல்!" படாரென அவரின் கைகளைப் பிடித்து அழுது கொண்டே சொன்னான் "நான் உடைக்கலை சார், எவன் உடைச்சான்னும் நாங்க பார்க்கலை சார். தயவு செய்து எங்களை சந்தேகப்படாதீங்க சார்"

அவனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் கோரஸாக அதையே சொன்னார்கள்.!

வெறுத்துப் போன ஆசிரியர் அனைவரின் பெற்றோர்களையும் மறுநாள் அழைத்து வரச் சொன்னார், மறுநாள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வந்தனர்..

ஆசிரியர் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார், பதில் தவறாகக் கூறிய மாணவனின் தந்தை எழுந்து சொன்னார்;

"சார்! என் மகனின் நடத்தை குறித்து வருத்தப்படுகிறேன். சின்ன வயதிலிருந்தே அவன் சேட்டைக்காரன், கண்டிப்பாக வில்லை அவன் தான் உடைத்திருப்பான்.. வில்லிற்கு என்ன விலை எனச் சொல்லுங்கள் தந்து விடுகிறேன். விசயத்தைப் பெரிசு படுத்தாமல் இதோடு விட்டு விடுங்கள்".

ஆசிரியர் எதுவும் பேசாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் நடந்தவைகளைச் சொன்னார், தலைமை ஆசிரியரின் கண்கள் சிவந்தன.. கத்தினார்.

"இந்த ஏரியாவிலேயே மிகப் பெரிய பள்ளி நம்முடையது. இதில் இவ்வளவு கேவலமான மாணவர்களும் பெற்றோர்களுமா? இதை விடக் கூடாது..

இவர்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் உடைப்பார்கள், பிடிபட்டால் பணம் கொடுத்து தப்பித்துக் கொள்வார்கள். இன்னும் என்னெல்லாம் உடைத்திருக்கிறார்களோ?

நீர் உடனே போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யும்".

தலையலடித்துக் கொண்ட தமிழாசிரியர் அனைவருடனும் காவல் நிலையம் சென்றார், நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்ட எஸ்.ஐ சொன்னார்;

"மாணவர்கள்ன்னு பார்க்க மாட்டேன். ஒரு நிமிஷத்துல எப்.ஐ.ஆர் போட்டிருவேன், ஆனா நீங்க சொல்லுற ஜனகர் இருக்கிற இடம் இந்த ஸ்டேஷன் எல்லைக்குள்ளே வரலை. எதுக்கும் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்துட்டு எஸ்.பி ய பார்த்து சொல்லிட்டுப் போங்க. எப்படியும் வில்லை உடைச்சது யாருன்னு கண்டு பிடிச்சுடலாம்."

எதுவும் பேசாமல் வெளியேறிய தமிழாசிரியர் வழக்கறிஞரைச் சந்தித்து நடந்தவைகளை விளக்கி வருத்தத்துடன் சொன்னார்.

"பார்த்தீங்களா சார்! யாருக்குமே என்ன நடக்குதுன்னு தெரியலை. நீங்க கேஸ் போட்டு இவங்க அத்தனை பேரோட முகமூடிகளையும் கிழிக்கணும்".

வழக்கறிஞர் வெகுண்டு எழுந்தார்.. கண்களில் அனல் பறக்கப் பேசினார் "நீங்கள் கவலைப் படாதீர்கள் சார். இந்த உலகத்துல நியாயம் இன்னும் செத்திடலை. நான் தர்ற வக்காலத்துல கையெழுத்துப் போடுங்க, அத்தனை பேரையும் கூண்டுல ஏத்தி அவ்வளவு பேரும் சேர்ந்து தான் வில்லை உடைச்சாங்கன்னு வாதாடி தண்டனை வாங்கி கொடுத்துடுறேன்.துட்டு கொஞ்சம் ஹெவியா வெட்டினீங்கன்னாவில்லை உடைச்சதை பார்த்ததது மாதிரி சாட்சிகளை ரெடி பண்ணிடலாம்..

இவனுங்கள்லாம் ஜெயில்ல கழி தின்னாத் தான் புத்தி வரும்".

ஆசிரியர் எழுந்து சொன்னார் "எல்லோரும் என்னென்னவோ பேசுறீங்க,..ராமாயணத்துக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் நினைக்கவே இல்லை...பகவான் ராமனையும் கூண்டுல நிக்க வைதுருவீங்க போல ..நான் வர்றேன் சார்....இது எதுல போய் முடியுமோ தெரியலை ...!!!!!!!!!!நல்ல வேலை நாளைக்கு நான் ஓய்வு பெறுகின்றேன் அப்படின்னு கிளம்பிட்டார் .

No comments:

Post a Comment