Total Pageviews

Monday, December 26, 2016

வைகை நதி!

 
வைகை நதியின் இன்றைய நிலை. படித்து முடித்ததும் அழுகாத குறை தான். தயவு செய்து பொறுமையாக படிக்கவும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு !

தமிழகத்தில் இறந்து கொண்டிருக்கும் நதிகளில் ஒன்று வைகை. அது பாதி செத்துவிட்டது. மதுரையில் மனிதர்களைவிட அதிகம் கொலை செய்யப்பட்டது வைகையாகத்தான் இருக்கும். ஆற்றின் பல இடங்களில் மலக் கழிவு கால்வாய்கள் புதைக்கப்பட்டிருக் கின்றன. சகஜமாகக் கலக்கின்றன சாக்கடைகள். சலனமின்றி கடந்து போகிறார்கள் மனிதர்கள். மனசாட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது.

எப்படி இருந்த நதி தெரியுமா வைகை? ஒருகாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தது வைகை நதி. பாண்டியர்களின் செல்லப் பிள்ளை அது. வருசநாட்டிலிருந்து ராமநாதபுரம் வரை ஒரு இளவரசியைப்போல வலம் வந்தது வைகை. பாண்டியர்கள் வைகையை மடியில் வைத்து தாலாட்டினார்கள். ஏரிகள், கண்மாய்கள் என்னும் தொட்டிலில் வைத்து சீராட்டினார்கள். அகமகிழ்ந்து வாரி வழங்கியது வைகை.

வைகையை கடலில் புகாத நதி என்பார்கள். உவமானத்துக்கு சொன்னா லும் உண்மையும் இருக்கிறது. இப் போதும் வைகையின் நீர் நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளங் களின்போது மட்டுமே கடலில் கலக்கிறது. காரணம், பாண்டியர்களின் நீர் மேலாண்மை. நீரை வீணாக்கக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார் கள். பாண்டியர்கள் காலத்தில் வைகை யில் சுமார் 3000 சங்கிலித் தொடர் ஏரிகள், கண்மாய்கள் அமைக்கப்பட்டன. அந்த நீர் நிலைகள் அத்தனையும் வைகையின் நீரை உள்வாங்கிக்கொண்டன. இதனால், கடலுக்கு வைகையின் நீர் மிகக் குறை வான அளவே சென்றது.

இதை வைத்து ஒருமுறை ஒட்டக்கூத் தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் பாட்டுப் போட்டி நடந்தது. அப்போது ஓட்டக்கூத்தர்,

“நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று

வாரியிடம் புகுதாத வைகையே” என்று பாடினார்.

அதாவது, உமையை இடப்பக்கமாகக் கொண்ட சிவபெருமானுக்கு பாற்கடல் நஞ்சை கொடுத்ததால் நான் கடலுக்கு புகமாட்டேன் என்று மறுத்துவிட்டதாம் வைகை.

இதற்கு எதிர்ப்பாட்டு பாடினார் புகழேந்திப் புலவர்.

“வாரி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து

நடத்தும் தமிழ் பாண்டிய நாடு”

என்றார் அவர். முன்னவர் புராண ரீதியாக காரணம் சொன்னார் எனில் பின்னவர் புவியியல் ரீதியாக காரணத்தை விளக்கினார். வைகை தனது தண்ணீரை இரு கரைகளிலும் வாரி வாரி (வாய்க்கால்கள் வழியாக) வழங்கிவிட்டதால் கடலுக்கு செல்ல நீர் இல்லை என்கிறார்.

வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலை யின் கிழக்குப் பகுதியிலுள்ள வருசநாடு - ஆண்டிபட்டி மலைத் தொடரின் உயரமான மேகமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. வனத்துக்குள்ளேயே வைகையுடன் மேல் மணலாறு, இரவங்கலாறு இணைந் துக்கொள்கின்றன. சதுரமலையிலிருந்து வரும் மூங்கிலாறு வருச நாட்டில் இணை கிறது. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து வரும் முல்லையாறு, தேனிக்கும் ஆண்டிப்பட்டிக்கும் இடையே இணைந்து வைகை அணையை அடைகிறது. கூடலூருக்கு மேற்கே கலிக்கவையாறு, சுருளி மலையிலிருந்து சுருளியாறு, சுருளிப்பட்டிக்கு வடக்கில் கூத்தநாச்சி வாய்க்கால், காமயக்கவுண் டன்பட்டிக்கும் அணைப்பட்டிக்கும் இடையே வறட்டாறு என்கிற தேனியாறு மற்றும் சில ஓடைகள் வைகையுடன் இணைகின்றன. வைகை அணைக்கு கிழக்கிலும் ஓடைகள் வைகையுடன் இணைகின்றன. பழனி மலையின் மேற்கில் உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன. இதற்கு கீழே மஞ்சலாறு, மருதா நதி ஆகியவை வைகையின் வடகரையில் இணைகின்றன. இதுவரை மலைப் பள்ளதாக்குகளில் ஓடி வரும் வைகை, அணைக்கரைப்பட்டியில் சமதளத்தை அடைகிறது. பின்பு மதுரை அருகே சாத்தையாறு ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகையுடன் கலக்கின்றன. இத்தனை நதிகள் இணைந்ததால் கடல் போல பொங்கி ஓடியது வைகை. அது ஒரு காலம்.

அதேசமயம் வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருந்தது வைகை. ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடும் என்று சொல்ல முடியாது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மையை உணர்ந்த பாண்டியர்கள் ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அதனை முழுமையாக ஏரிகளில் சேமித்துக் கொண்டார்கள். வைகையின் இந்த நீரியல் ஓட்டத்தை அவர்கள் நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட ஆண்டில் வைகையில் நிச்சயம் நீர்ப்பாயும் என்று தெரிந்தால் குறிப்பிட்ட ஏரிகள் நிரம்பும் வகையில் ஆற்றிலிருந்து நேரடி கால்வாய்கள் வெட்டினார்கள். வெள்ளக்காலங்களில் அந்தக் கால்வாய்கள் திறக்கப்பட்டன. நீர்வரத்து குறைவான காலங்களில் ஆற்றின் குறுக்கே சாய்வாக மரம், தழை, மண் கொண்டு தற்காலிக கொரம்புகளை அமைத்தார்கள். சில இடங்களில் பாறைகள் கொண்டு சிறு அணைகளை அமைத்தனர்.

நாஞ்சில் நாட்டில் பறலையாற்றையும் பழையாற்றையும் இணைத்ததுபோல வைகையில் கால்வாய் வெட்டி அருகிலுள்ள கீழ்குண்டாறு, சருகுணி ஆறு ஆகியவற்றுடன் வைகையை இணைத்தார்கள். வைகையின் வடிநிலப் பகுதியும் அதனை அடுத்துள்ள குண்டாறு, சருகணியாறு வடிநிலப் பகுதியையும் பிரிக்கும் பகுதி வைகையின் தளத்தைவிட மிகக் குறைந்த அளவே உயரம் கொண்டது. அதேசமயம் வைகையின் வடிநிலம் குறுகலானது. இந்த புவியியல் பொறியியல் உண்மையை புரிந்துகொண்ட பாண்டியர்கள், வைகையின் நீரியல் ஓட்டத்துக்கு ஏற்ற பொறியியல் நுட்பங்களுடன் வைகையிலிருந்து கால்வாய்களை அமைத்தார்கள்.

பாண்டிய மன்னன் செழியன் சேந்தனால் (கி.பி.620 - 650) வைகையில் மதகு மற்றும் அரிகேசரி கால்வாய் வெட்டப்பட்டது. சோழவந்தான் தென் கரை கண்மாயை உருவாக்கியதும் செழின் சேந்தன்தான். குருவித்துறை, நாகமலை புதுக்கோட்டை, மாடக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, உறப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை வெட்டி கண்மாய்களை நிரப்பினார்கள். சுட்ட செங்கற்களால் ஏரியின் மதகை வடிவமைத்தார்கள். நீர் கசியாதபடி மண்ணுடன் தாவர பிசின் உள்ளிட்ட சில பொருட்களை சேர்த்து ‘அரைமண்ணை’ பயன்படுத்தி ஏரிக் கரைகளை அமைத்தார்கள்.

இன்று ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ஊர்களில் கண்மாய்கள் காய்ந்துக் கிடக்கின்றன. தமிழகமே வெள்ளக்காடாக மிதந்தபோதும் அந்தக் கண்மாய்களில் துளி தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள். காரணம், வைகை ஆற்றில் நமது நவீன பொறியாளர்கள் கட்டிய கால்வாய்கள். பாண்டியர்களுக்கு தெரிந்திருந்த வைகையின் நீரியல் தொழில்நுட்பம், பொறியியல் படித்த பொறியாளர்களுக்கு தெரியாமல் போனதுதான் வேதனை !
Thanks to Gomathi Elango !

No comments:

Post a Comment