திருச்சியில்
பார்க்க வேண்டிய இடங்கள்
1) மலைக்கோட்டை
தினசரி காலை 6 மணி தல் இரவு 9 மணி வரை மலைக்கோட்டைக் கோவில்திறந்திருக்கும்.
83 அடி உயர மலையின் உச்சியில் உள்ள இக் கோவில், திருச்சி மக்களை மட்டுமல்லாது, நகருக்கு வரும் பிற பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. சிறிய குகைக் கோவிலாக இருந்த இதை நாயக்க மன்னர்கள் சரியானபடி பயன்படுத்தி தற்போதுள்ள கோட்டையாக மாற்றிக் கட்டினர்.
மலைக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால், 437 படிகளைக் கடக்க வேண்டும். கோவிலின் உச்சியில் உள்ள பிள்ளையார் கோவில், மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம், தாயுமானசாமி கோவில்.
2) ஸ்ரீரங்கம்
ரங்கநாதசுவாமி கோவில் திருச்சி நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில், காவிரி ஆற்றின் மறு கரையில், ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில், ஏழு சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 14-ம் நூற்றாண்டு மற்றும் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. சேரர்கள், பாண்டியர்கள்,சோழர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இக்கோவில் படிப்படியாக, கட்டப்பட்டடாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது . 1987-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் தெற்குப் பகுதியில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டராகும். இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரம் இதுதான். இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு என அழைக்கப்படும் பெருமாள். இருப்பினும் மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களும் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். விஜய நகரப் பேரரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அதிகளவில் இஸ்லாமியர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு உண்டு. கோவில் வளாகத்திலேயே தல வரலாறு உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
3) ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில்
ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கட்டப்படும் போதே, இக்கோவிலும் கட்டப்பட்டது. இது சிவன் கோவில் ஆகும். ஏழு கோபுரங்களைக் கொண்டது. நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிவலிங்கம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
4) உறையூர் வெக்காளியம்மன் கோவில்
உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவில் திருச்சி நகரின் முக்கிய கோவில்களில்ஒன்று.
5) சமயபுரம் மாரியம்மன் கோவில்
திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
6) விராலிமலை முருகன் கோவில்
விராலிமலை முருகன் கோவில் திருச்சியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் உள்ளது.
7)வயலூர் முருகன் கோவில்
திருச்சி அருகே உள்ள, பசும் வயல்கள் நடுவே அமைந்துள்ள வயலூர் முருகன் கோவில், பார்ப்பவர் கண்களுக்கு இதமான உணர்வைக் கொடுக்கும். இக்கோவிலில் வந்து வேண்டிக் கொண்டால் எதுவாக இருந்தாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. கோவில் வளாகத்தில் காணப்படும் மயில்கள் பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.
8) இதர இடங்கள்
திருவெறும்பூரில் பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.),
பொன்மலை ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை
ஆகியவை திருச்சி நகரின் பிற அடையாளங்கள்.
கரிகால் சோழன் கட்டிய கல்லணை,
சோழ மன்னர்களின் கட்டடக் கலையை உலகுக்கு எடுத்துக் காட்டி நிற்கும் ஒரு நினைவுச் சின்னம். காவிரி ஆற்றின் குறுக்கே, கம்பீரமாக நிற்கும் கல்லணை, திருச்சி நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது.
திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாஸ்தலம், முக்கொம்பு. திருச்சி வருபவர்கள் இங்கு செல்லாமல் இருக்க முடியாது என்ற அளவில் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில், முக்கொம்பு உள்ளது. ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் குளித்து புனிதநீராடும் ஆடிப்பெருக்கு, திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் பிரபலமானது. திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணம் விரைவில் நடக்க வேண்டி வரும் இளம் பெண்கள் ஆகியோர் இங்கு ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கின்போது நீராடினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்சி நகரில் கல்வி வசதிகள் சிறப்பான வகையில் உள்ளன.
No comments:
Post a Comment