Total Pageviews

Wednesday, October 22, 2025

சமயம் பார்த்து அடிப்பதில் கண்ணதாசனை மிஞ்ச ஆளில்லை... அண்ணாவுக்கே டஃப் கொடுத்துட்டாரே!

 

கவிஞர்களுக்குள் சண்டை வந்தாலும் அது சனையாகத் தான் இருக்கும். ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்த ஒரு சுவையான சம்பவம் தான் இது.

கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர்.

பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என பிளவு வந்து விட்டது. கண்ணதாசனின் மனதில் அண்ணா செய்த செயல்கள் யாவும் ஆழமாக பதிந்து விட்டன. அது மனதைப் பாதித்தன. நேரம் கிடைக்கும்போது அதைக் கொட்டி விட நினைத்தார். நேரமும் வந்தது. அதுதான் சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா. அந்தப் படத்தில் ஒரு சிச்சுவேஷன்.

அண்ணன் பாலாஜி, தம்பி சிவாஜிக்கு ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான். ஆனால் நடந்த உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலை. இதுதான் சிச்சுவேஷன். அண்ணா பாட்டு எழுதுங்கன்னு கண்ணதாசனைப் பார்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. சொல்கிறார்.

கண்ணதாசனுக்கு இந்த சிச்சுவேஷன் அல்வா சாப்பிடுவது போல இருந்தது. இத்தனை நாளா இதற்காகத் தானே காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். மனதில் இருந்த காயத்தை ஆற்றும் வேகத்தில் அந்த சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுதானே கவிஞன். என்ன பாட்டுன்னு பாருங்க.

‘அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழி அம்மா. கண்ணை இமையே பிரித்ததம்மா - என் கையே என்னை அடித்ததம்மா...’ என்று பேனாவால் அண்ணாவை அடித்தார்.

அது மட்டும் அல்லாமல், அவனை நினைத்தே நான் இருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை. அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை என்று தன்னிலை விளக்கமும் அதே பாடலில் கொடுத்தார். அந்தப் பாடலை அண்ணாவிடம் போட்டுக் காட்டினர் சிலர்.

இருவர் பகையில் நாமளும் குளிர் காயலாமே என்ற நப்பாசையில் அவர்கள் வந்ததை அண்ணா புரிந்து கொண்டார். அதனால் விடுய்யா. என்னை அவர் நல்ல தமிழில் தானே திட்டுகிறார். திட்டி விட்டுப் போகிறார். விட்டு விடுங்கள் என்றாராம்.

நண்பரின் மகளுக்காகக் காலேஜ் சீட் கேட்டும் கொடுக்காத முதல்வர்... சந்திரபாபு கொடுத்த பதிலடி!

 

சந்திரபாபுவை சந்திப்பதற்காக அவரது நண்பர் ஒருவர் மகளையும் அழைத்து வந்தார். அவர் சந்திரபாபுவிடம் என்னுடைய மகளுக்குக் காலேஜ்ல சீட் வாங்கித் தரணும். நீங்க நினைச்சா நிச்சயமா முடியும்னு சந்திரபாபுவிடம் கூற, காலேஜ் சீட்டா? வாங்க என்னோடு என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் சந்திரபாபு.

அந்தக் கல்லூரி நிர்வாகத்தைச் சந்தித்த சந்திரபாபு, இந்தப் பெண்ணுக்கு சீட் வேணும்னு கேட்டார். அதற்கு அட்மிஷன் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி சீட் தருவதற்கு வாய்ப்பு இல்லன்னு அந்த நிர்வாகி சொன்னார். இதைக் கேட்டதும் சந்திரபாபு மிகுந்த வருத்தம் அடைந்தார். ராத்திரி முழுவதும் தூங்கவே இல்லை. அப்படி இருக்கும்போதுதான் அந்தக் கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து 75 ஆயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அதனால் மறுநாள் காலையில் அந்த நண்பரையும், அந்தப் பெண்ணையும் தன் வீட்டுக்கு வரவழைத்து மீண்டும் அந்தக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு போய் கல்லூரி முதல்வரைச் சந்தித்தார். உங்க கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து இசைக்கச்சேரி வைத்து 75 ஆயிரம் ரூபாயை நிதியாகத் திரட்டி உங்க கல்லூரிக்கு கொடுத்துருக்கேன். அப்படி இருந்தும் நான் பரிந்துரைத்த ஒரு பெண்ணுக்கு சீட் இல்லைன்னு சொல்றீங்களே. என்ன நியாயம்னு கேட்டுள்ளார் சந்திரபாபு.

அதைக் கேட்டதும் கல்லூரி முதல்வர் பழைய ரெக்கார்டுகளை எல்லாம் திரும்பப் பார்த்தார். அதுல சந்திரபாபு சொன்னது உண்மைதான்னு தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அந்தக் கல்லூரியிலே அட்மிஷன் கொடுத்தார். அட்மிஷன் கொடுத்த உடனே நாற்காலியை விட்டு எழுந்த சந்திரபாபு, ‘நான் நேற்று வந்து உங்கக்கிட்டே கேட்டேன். அப்பவே நீங்க அட்மிஷன் கொடுத்துருந்தீங்கன்னா நான் உங்களுக்கு நன்றி சொல்லிருப்பேன்.

அப்படிக் கொடுத்துருந்தீங்கன்னா அது எனக்காகக் கொடுத்த சீட்டுங்கற எண்ணம் வந்துருக்கும். ஆனா இப்ப நீங்க கொடுத்த சீட்டு நான் வசூலித்து தந்த 75ஆயிரம் ரூபாய்க்காகக் கொடுத்த சீட்டு. அதனால உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்’ என்று சொல்லி விட்டு அந்தக் கல்லூரியை விட்டுப் புறப்பட்டார் சந்திரபாபு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.