இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமான்னு அப்பவே ஆச்சரியப்பட வைத்த இயக்குனர்; பாலசந்தர். ஏன்னா அவரோட படங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவை. 50 வருஷத்துக்குப் பிறகு நடக்கப் போற விஷயத்தை அப்பவே அசால்டாக எடுத்திருப்பார். அந்தளவு முற்போக்கான சிந்தனை கொண்டவர். அப்படி ஒரு அற்புதமான அவரது படைப்பைப் பற்றித் தான் இங்குப் பார்க்க உள்ளோம்.
அவள் ஒரு தொடர்கதை படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகையைத் தேடிக் கொண்டு இருந்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அப்போது அவருக்கு எர்ணாகுளம் படத்தில் 2 பீஸ் உடையில் நடித்த சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. தனது படத்துக்கு இவள் தான் கதாநாயகி என்று முடிவு செய்தார்.
அதன்படி பேசி நடிக்க வைத்தார். அப்போது சுஜாதாவால் பாலசந்தர் சொல்லிக் கொடுப்பது போல நடிக்க முடியவில்லை. திணறினார். அதனால் பாலசந்தர் அவரைக் கோபத்தில் திட்ட, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாராம். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருந்ததாம்.
பாலசந்தரே பிரமிக்கும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பாலசந்தர் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய திறமை எப்படி இருக்கும் என்பதை எடைபோடுவதில் வல்லவர். அப்படித்தான் சுஜாதா விஷயத்திலும் இருந்துள்ளது. இல்லாவிட்டால் 2 பீஸ் உடைக்கும், இந்தப் படத்தில் சுஜாதா அணிந்த உடைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எப்படி கணித்துள்ளார் என்று பாருங்கள்.
இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அது தான் விகடகவி ரோல். அந்த கதாபாத்திரத்துக்குக் கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்த ராஜேஷ் சரியாக வருவார் என்று நினைத்தார் பாலசந்தர்.
அப்போது அவர் வாத்தியாராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். நல்ல தமிழ் பேசுவார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துவாரா என்ற சிந்தனை அவர் மனதிலே இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் யாரை நடிக்க வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டே இருந்தார் பாலசந்தர்.
ஒருநாள் கஸ்தூரி ரங்கன் சாலையில் பாலசந்தர் காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்தப் பக்கமாகக் கமல் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் அடடா இந்தப் பையனை மறந்துவிட்டோமே என்று நினைத்தார்.
அப்போது கமலை சந்தித்ததும் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 3 நாளில் திட்டமிட்டு அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் பாலசந்தர். அதனால் பெரிய லாபம் கிடைத்தது என்கிறார் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல். இந்த மாதிரி பாலசந்தர் திட்டமிட்டபடி பணியாற்றாமல் இருந்தால் நான் கடன்சுமையில் மூழ்கி இருப்பேன் என்றார் அவர்.
இந்தப் படத்தின் 100வது நாள் விழாவுக்கு பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் வந்து இருந்தார். முன்னர் இதுபோன்ற ஒரு பாராட்டு விழாவில் சத்யஜித்ரேவை சந்தித்துள்ளேன். இப்போது இன்னொரு மேதை பாலசந்தரை சந்திக்கிறேன் என்றாராம். 1974ல் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் இப்போதும் புத்தம்புது படம் பார்த்த மாதிரி தான் பிரஷ்ஷாக இருக்கும் அதன் கதை.
No comments:
Post a Comment