Total Pageviews

Thursday, November 13, 2025

எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே

 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்...

மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.

Wednesday, October 29, 2025

குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் !

 

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்

எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,

ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்

அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...

எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.

அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..

இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்

எம்ஜிஆர் இவர் கிட்ட பணம் கேட்டு வாங்குவார் இவருக்கு பணம் தேவை என்றால் எம்ஜிஆரிடம் கேட்டும் வாங்குவார் அந்தளவுக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்

கலைஞர் வீட்டுக்கு போனால் கலைஞர் வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் அளவுக்கு நெருங்கிய நட்பு

மணலி கந்தசாமி அவர்களிடம் நெருங்கிய நண்பர்

மாரியப்ப வாண்டையார்

முத்தையா செட்டியர்

புதுவை முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...

அத்தி வெட்டி அய்யா உக்கடை தேவர்.

பூண்டிதுளசி அய்யா வாண்டையார் எல்லோரும் அவரது நட்பு வட்டம்....

இவர் பரம்பரை காங்கிரஸ் காரர் என்றாலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி உதவி செய்து அதிகமாக செலவு செய்தவர்

தஞ்சாவூர் ஜில்லா போர்டு தேர்தலில் நின்றார்...பஞ்சாயத்து பேசுவதில் வல்லவர்...மக்கள் மனதில் நின்ற வள்ளல்..

தன் மகன் பாஸ்கரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சோமு தேவர், எம்.எஸ்.பாஸ்கரை நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்க வைத்தார், நாகையில் படிக்கும்போதே பாஸ்கர் நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது சிறுவயது முதலே ரத்தத்திலேயே ஊறி இருந்தது.

இந்த நிலையில் தான் 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் மேற்ப்படிப்புக்காக சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலானார்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.

டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.

விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.

அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இயக்குனர் பாலசந்தர் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார்

காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன் மிகவும் அவரை பாராட்டி மகிழ்ந்தார்

எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார்..

செப்டம்பர் 13 தேதி 1957ல் ஜமீன்தாரின் மகனாக பிறந்து செல்வாக்காக வளர்ந்து இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான குணசித்திர நடிகர் மட்டுமின்றி இவரது புகழுக்கு மணிமகுடமாக பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தில் காமராஜர் பேசியது போலவே காதுகளில் ஒலிக்க செய்தவர் மதிப்புகுறிய எம் எஸ் பாஸ்கர் அவர்கள்

அது மட்டுமல்ல தென் மாவட்ட நாடார்களின் பேச்சுகளையும்

சென்னை பூர்வகுடி பேச்சுக்களையும் கோவை கவுண்டர்களின் கொங்கு தமிழ் பேச்சுக்களையும் அச்சி அசலாக பேசக்கூடிய அற்புத கலைஞர்

இவரின் தமிழ் உச்சரிப்பு மேலும் பல பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்

இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான எம்‌எஸ்.பாஸ்கர் அவர்கள் பாஜக மூத்த தலைவரான பேட்டை சிவா அவர்களின் மாமா என்பது தனி சிறப்பு ஆகும்

இவரது உடன் பிறந்தவர் மகன் மகள் பேரன் பேத்திகள் தம்பிக்கோட்டை கீழக்காடுட்டிலும், சென்னையிலும் வாழ்ந்து வருகிறார்கள்

வாழ்க அன்னாரின் புகழ்

Monday, October 27, 2025

பாலசந்தர் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியாகி இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன!

 

இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமான்னு அப்பவே ஆச்சரியப்பட வைத்த இயக்குனர்; பாலசந்தர். ஏன்னா அவரோட படங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவை. 50 வருஷத்துக்குப் பிறகு நடக்கப் போற விஷயத்தை அப்பவே அசால்டாக எடுத்திருப்பார். அந்தளவு முற்போக்கான சிந்தனை கொண்டவர். அப்படி ஒரு அற்புதமான அவரது படைப்பைப் பற்றித் தான் இங்குப் பார்க்க உள்ளோம்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகையைத் தேடிக் கொண்டு இருந்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அப்போது அவருக்கு எர்ணாகுளம் படத்தில் 2 பீஸ் உடையில் நடித்த சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. தனது படத்துக்கு இவள் தான் கதாநாயகி என்று முடிவு செய்தார்.

அதன்படி பேசி நடிக்க வைத்தார். அப்போது சுஜாதாவால் பாலசந்தர் சொல்லிக் கொடுப்பது போல நடிக்க முடியவில்லை. திணறினார். அதனால் பாலசந்தர் அவரைக் கோபத்தில் திட்ட, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாராம். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருந்ததாம்.

பாலசந்தரே பிரமிக்கும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பாலசந்தர் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய திறமை எப்படி இருக்கும் என்பதை எடைபோடுவதில் வல்லவர். அப்படித்தான் சுஜாதா விஷயத்திலும் இருந்துள்ளது. இல்லாவிட்டால் 2 பீஸ் உடைக்கும், இந்தப் படத்தில் சுஜாதா அணிந்த உடைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எப்படி கணித்துள்ளார் என்று பாருங்கள்.

இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அது தான் விகடகவி ரோல். அந்த கதாபாத்திரத்துக்குக் கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்த ராஜேஷ் சரியாக வருவார் என்று நினைத்தார் பாலசந்தர்.

அப்போது அவர் வாத்தியாராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். நல்ல தமிழ் பேசுவார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துவாரா என்ற சிந்தனை அவர் மனதிலே இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் யாரை நடிக்க வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டே இருந்தார் பாலசந்தர்.

ஒருநாள் கஸ்தூரி ரங்கன் சாலையில் பாலசந்தர் காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்தப் பக்கமாகக் கமல் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் அடடா இந்தப் பையனை மறந்துவிட்டோமே என்று நினைத்தார்.

அப்போது கமலை சந்தித்ததும் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 3 நாளில் திட்டமிட்டு அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் பாலசந்தர். அதனால் பெரிய லாபம் கிடைத்தது என்கிறார் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல். இந்த மாதிரி பாலசந்தர் திட்டமிட்டபடி பணியாற்றாமல் இருந்தால் நான் கடன்சுமையில் மூழ்கி இருப்பேன் என்றார் அவர்.

இந்தப் படத்தின் 100வது நாள் விழாவுக்கு பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் வந்து இருந்தார். முன்னர் இதுபோன்ற ஒரு பாராட்டு விழாவில் சத்யஜித்ரேவை சந்தித்துள்ளேன். இப்போது இன்னொரு மேதை பாலசந்தரை சந்திக்கிறேன் என்றாராம். 1974ல் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் இப்போதும் புத்தம்புது படம் பார்த்த மாதிரி தான் பிரஷ்ஷாக இருக்கும் அதன் கதை.

Wednesday, October 22, 2025

சமயம் பார்த்து அடிப்பதில் கண்ணதாசனை மிஞ்ச ஆளில்லை... அண்ணாவுக்கே டஃப் கொடுத்துட்டாரே!

 

கவிஞர்களுக்குள் சண்டை வந்தாலும் அது சனையாகத் தான் இருக்கும். ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்த ஒரு சுவையான சம்பவம் தான் இது.

கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர்.

பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என பிளவு வந்து விட்டது. கண்ணதாசனின் மனதில் அண்ணா செய்த செயல்கள் யாவும் ஆழமாக பதிந்து விட்டன. அது மனதைப் பாதித்தன. நேரம் கிடைக்கும்போது அதைக் கொட்டி விட நினைத்தார். நேரமும் வந்தது. அதுதான் சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா. அந்தப் படத்தில் ஒரு சிச்சுவேஷன்.

அண்ணன் பாலாஜி, தம்பி சிவாஜிக்கு ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான். ஆனால் நடந்த உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலை. இதுதான் சிச்சுவேஷன். அண்ணா பாட்டு எழுதுங்கன்னு கண்ணதாசனைப் பார்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. சொல்கிறார்.

கண்ணதாசனுக்கு இந்த சிச்சுவேஷன் அல்வா சாப்பிடுவது போல இருந்தது. இத்தனை நாளா இதற்காகத் தானே காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். மனதில் இருந்த காயத்தை ஆற்றும் வேகத்தில் அந்த சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுதானே கவிஞன். என்ன பாட்டுன்னு பாருங்க.

‘அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழி அம்மா. கண்ணை இமையே பிரித்ததம்மா - என் கையே என்னை அடித்ததம்மா...’ என்று பேனாவால் அண்ணாவை அடித்தார்.

அது மட்டும் அல்லாமல், அவனை நினைத்தே நான் இருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை. அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை என்று தன்னிலை விளக்கமும் அதே பாடலில் கொடுத்தார். அந்தப் பாடலை அண்ணாவிடம் போட்டுக் காட்டினர் சிலர்.

இருவர் பகையில் நாமளும் குளிர் காயலாமே என்ற நப்பாசையில் அவர்கள் வந்ததை அண்ணா புரிந்து கொண்டார். அதனால் விடுய்யா. என்னை அவர் நல்ல தமிழில் தானே திட்டுகிறார். திட்டி விட்டுப் போகிறார். விட்டு விடுங்கள் என்றாராம்.

நண்பரின் மகளுக்காகக் காலேஜ் சீட் கேட்டும் கொடுக்காத முதல்வர்... சந்திரபாபு கொடுத்த பதிலடி!

 

சந்திரபாபுவை சந்திப்பதற்காக அவரது நண்பர் ஒருவர் மகளையும் அழைத்து வந்தார். அவர் சந்திரபாபுவிடம் என்னுடைய மகளுக்குக் காலேஜ்ல சீட் வாங்கித் தரணும். நீங்க நினைச்சா நிச்சயமா முடியும்னு சந்திரபாபுவிடம் கூற, காலேஜ் சீட்டா? வாங்க என்னோடு என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் சந்திரபாபு.

அந்தக் கல்லூரி நிர்வாகத்தைச் சந்தித்த சந்திரபாபு, இந்தப் பெண்ணுக்கு சீட் வேணும்னு கேட்டார். அதற்கு அட்மிஷன் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி சீட் தருவதற்கு வாய்ப்பு இல்லன்னு அந்த நிர்வாகி சொன்னார். இதைக் கேட்டதும் சந்திரபாபு மிகுந்த வருத்தம் அடைந்தார். ராத்திரி முழுவதும் தூங்கவே இல்லை. அப்படி இருக்கும்போதுதான் அந்தக் கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து 75 ஆயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அதனால் மறுநாள் காலையில் அந்த நண்பரையும், அந்தப் பெண்ணையும் தன் வீட்டுக்கு வரவழைத்து மீண்டும் அந்தக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு போய் கல்லூரி முதல்வரைச் சந்தித்தார். உங்க கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து இசைக்கச்சேரி வைத்து 75 ஆயிரம் ரூபாயை நிதியாகத் திரட்டி உங்க கல்லூரிக்கு கொடுத்துருக்கேன். அப்படி இருந்தும் நான் பரிந்துரைத்த ஒரு பெண்ணுக்கு சீட் இல்லைன்னு சொல்றீங்களே. என்ன நியாயம்னு கேட்டுள்ளார் சந்திரபாபு.

அதைக் கேட்டதும் கல்லூரி முதல்வர் பழைய ரெக்கார்டுகளை எல்லாம் திரும்பப் பார்த்தார். அதுல சந்திரபாபு சொன்னது உண்மைதான்னு தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அந்தக் கல்லூரியிலே அட்மிஷன் கொடுத்தார். அட்மிஷன் கொடுத்த உடனே நாற்காலியை விட்டு எழுந்த சந்திரபாபு, ‘நான் நேற்று வந்து உங்கக்கிட்டே கேட்டேன். அப்பவே நீங்க அட்மிஷன் கொடுத்துருந்தீங்கன்னா நான் உங்களுக்கு நன்றி சொல்லிருப்பேன்.

அப்படிக் கொடுத்துருந்தீங்கன்னா அது எனக்காகக் கொடுத்த சீட்டுங்கற எண்ணம் வந்துருக்கும். ஆனா இப்ப நீங்க கொடுத்த சீட்டு நான் வசூலித்து தந்த 75ஆயிரம் ரூபாய்க்காகக் கொடுத்த சீட்டு. அதனால உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்’ என்று சொல்லி விட்டு அந்தக் கல்லூரியை விட்டுப் புறப்பட்டார் சந்திரபாபு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Thursday, August 14, 2025

உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு, நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிடு!

 எனக்கு  நேரமில்லை":_*

பன்னிரண்டு மணி நேர பயணம் இப்போது நான்கு மணி நேரமாக சுருங்கிவிட்டது, 



ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

பன்னிரண்டு பேர் கொண்ட குடும்பம் இப்போது வெறும் இருவர், ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு நான்கு வாரங்கள் எடுத்த செய்தி, இப்போது நான்கு வினாடிகளில், 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

தூரத்திலுள்ள ஒருவரின் முகத்தைப் பார்க்க முன்பு வருடங்கள் ஆயின, 
இப்போது வினாடிகளில் தெரிகிறது – ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வீட்டில் சுற்றிச் செல்ல எடுத்த நேரமும் முயற்சியும், 
இப்போது லிஃப்ட்டில் வினாடிகளில் முடிகிறது, 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன், 
இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான், 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள்,
இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது, 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

ஆக்டிவாவில் செல்லும்போது, ஒரு கை கைப்பிடியில், இன்னொரு கை போனில் – 
ஏனென்றால் நின்று பேச அவனுக்கு நேரமில்லை.

கார் ஓட்டும்போது, ஒரு கை ஸ்டீயரிங்கில், இன்னொரு கை வாட்ஸ்அப்பில் – 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

ட்ராஃபிக் ஜாம் ஆனால், புதிய வழி உருவாக்க லேன் மாறுகிறான் 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

நண்பர்கள் மத்தியில், அவன் விரல்கள் போனில் பிஸியாக இருக்கும், 
ஏனென்றால் எங்கோ செல்ல வேண்டும் – நேரமில்லை.

தனியாக இருக்கும்போது அவன் நிம்மதியாக இருக்கிறான், 
ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியின்றி இருக்கிறான் – 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

புத்தகம் படிக்க நேரமில்லை,
பெற்றோரை அழைக்க நேரமில்லை,
நண்பனைச் சந்திக்க நேரமில்லை,
இயற்கையை ரசிக்க நேரமில்லை

ஆனால் –
ஐபிஎல்-க்கு நேரம் இருக்கிறது,
நெட்ஃபிளிக்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அர்த்தமற்ற ரீல்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அரசியல் விவாதத்திற்கு நேரம் இருக்கிறது –
ஆனால் தனக்கு நேரமில்லை...

உலகம் எளிமையாகிவிட்டது, வேகமாகிவிட்டது,
தொழில்நுட்பம் நெருங்கிவிட்டது, தூரங்கள் மறைந்துவிட்டன,
வசதிகள் பெருகிவிட்டன, வாய்ப்புகள் வளர்ந்துவிட்டன..
ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்து விலகிச் சென்றான்.

அமைதியாக உட்கார,
தன்னோடு பேச,
தன்னைப் புரிந்துகொள்ள,
அல்லது சில நிமிடங்கள் மனமார சிரிக்க –
நேரமில்லை என்கிறான்.

*பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. அந்த இறுதி நொடியில் அவன் உணர்கிறான் – நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிட்டேன்.*

எனவே இன்றே முடிவு செய் – உனக்காக கொஞ்சம் நேரம் வை,

உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு,

உன் இதயத்திற்காக, உன் அமைதிக்காக, வாழ்வின் சாராம்சத்திற்காக கொஞ்சம் வாழ். ஏனென்றால் நேரமில்லை என்பது உண்மையல்ல – அது வெறும் பழக்கம்... அதை மாற்ற வேண்டும்.

Thursday, August 7, 2025

திண்டுக்கல் பூட்டு !

 பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு. இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாட்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆட்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத் திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.


நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது.

 திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது. இதனை ஒழுங்கு படுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர். 



ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளை செய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

#டிலோ பூட்டு:
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

#பெல் லாக்:
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும் போதும், திறக்கும் போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

#லண்டன் லாக்:


ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.


இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.


பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை 22 கிலோ.