Total Pageviews

Thursday, February 11, 2016

ஜனகனின் வில்லை உடைத்தது யார்?"

சும்மா ஒரு கற்பனை... படித்தது !

கி.பி 2064..

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் காலம்!

கீழ் கண்ட சம்பவம் அவர்கள் மத்தியில் நடக்கிறது..

தமிழ் வகுப்பு, கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர் மாணவர்களின் கவனிப்புத் திறனைப் பரிசோதிக்க எண்ணி கேள்வி கேட்டார்.

"மாணவர்களே! என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்கள், ஜனகனின் வில்லை உடைத்தது யார்?"

மாணவர்கள் முகத்தில் பீதி கிளம்பியது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தனர்.

ஆசிரியருக்கு கோபம் வந்தது.. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை எழுப்பினார்.

"நீ பதில் சொல்!" படாரென அவரின் கைகளைப் பிடித்து அழுது கொண்டே சொன்னான் "நான் உடைக்கலை சார், எவன் உடைச்சான்னும் நாங்க பார்க்கலை சார். தயவு செய்து எங்களை சந்தேகப்படாதீங்க சார்"

அவனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் கோரஸாக அதையே சொன்னார்கள்.!

வெறுத்துப் போன ஆசிரியர் அனைவரின் பெற்றோர்களையும் மறுநாள் அழைத்து வரச் சொன்னார், மறுநாள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வந்தனர்..

ஆசிரியர் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார், பதில் தவறாகக் கூறிய மாணவனின் தந்தை எழுந்து சொன்னார்;

"சார்! என் மகனின் நடத்தை குறித்து வருத்தப்படுகிறேன். சின்ன வயதிலிருந்தே அவன் சேட்டைக்காரன், கண்டிப்பாக வில்லை அவன் தான் உடைத்திருப்பான்.. வில்லிற்கு என்ன விலை எனச் சொல்லுங்கள் தந்து விடுகிறேன். விசயத்தைப் பெரிசு படுத்தாமல் இதோடு விட்டு விடுங்கள்".

ஆசிரியர் எதுவும் பேசாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் நடந்தவைகளைச் சொன்னார், தலைமை ஆசிரியரின் கண்கள் சிவந்தன.. கத்தினார்.

"இந்த ஏரியாவிலேயே மிகப் பெரிய பள்ளி நம்முடையது. இதில் இவ்வளவு கேவலமான மாணவர்களும் பெற்றோர்களுமா? இதை விடக் கூடாது..

இவர்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் உடைப்பார்கள், பிடிபட்டால் பணம் கொடுத்து தப்பித்துக் கொள்வார்கள். இன்னும் என்னெல்லாம் உடைத்திருக்கிறார்களோ?

நீர் உடனே போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யும்".

தலையலடித்துக் கொண்ட தமிழாசிரியர் அனைவருடனும் காவல் நிலையம் சென்றார், நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்ட எஸ்.ஐ சொன்னார்;

"மாணவர்கள்ன்னு பார்க்க மாட்டேன். ஒரு நிமிஷத்துல எப்.ஐ.ஆர் போட்டிருவேன், ஆனா நீங்க சொல்லுற ஜனகர் இருக்கிற இடம் இந்த ஸ்டேஷன் எல்லைக்குள்ளே வரலை. எதுக்கும் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்துட்டு எஸ்.பி ய பார்த்து சொல்லிட்டுப் போங்க. எப்படியும் வில்லை உடைச்சது யாருன்னு கண்டு பிடிச்சுடலாம்."

எதுவும் பேசாமல் வெளியேறிய தமிழாசிரியர் வழக்கறிஞரைச் சந்தித்து நடந்தவைகளை விளக்கி வருத்தத்துடன் சொன்னார்.

"பார்த்தீங்களா சார்! யாருக்குமே என்ன நடக்குதுன்னு தெரியலை. நீங்க கேஸ் போட்டு இவங்க அத்தனை பேரோட முகமூடிகளையும் கிழிக்கணும்".

வழக்கறிஞர் வெகுண்டு எழுந்தார்.. கண்களில் அனல் பறக்கப் பேசினார் "நீங்கள் கவலைப் படாதீர்கள் சார். இந்த உலகத்துல நியாயம் இன்னும் செத்திடலை. நான் தர்ற வக்காலத்துல கையெழுத்துப் போடுங்க, அத்தனை பேரையும் கூண்டுல ஏத்தி அவ்வளவு பேரும் சேர்ந்து தான் வில்லை உடைச்சாங்கன்னு வாதாடி தண்டனை வாங்கி கொடுத்துடுறேன்.துட்டு கொஞ்சம் ஹெவியா வெட்டினீங்கன்னாவில்லை உடைச்சதை பார்த்ததது மாதிரி சாட்சிகளை ரெடி பண்ணிடலாம்..

இவனுங்கள்லாம் ஜெயில்ல கழி தின்னாத் தான் புத்தி வரும்".

ஆசிரியர் எழுந்து சொன்னார் "எல்லோரும் என்னென்னவோ பேசுறீங்க,..ராமாயணத்துக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் நினைக்கவே இல்லை...பகவான் ராமனையும் கூண்டுல நிக்க வைதுருவீங்க போல ..நான் வர்றேன் சார்....இது எதுல போய் முடியுமோ தெரியலை ...!!!!!!!!!!நல்ல வேலை நாளைக்கு நான் ஓய்வு பெறுகின்றேன் அப்படின்னு கிளம்பிட்டார் .

எண்ணம் போல் வாழ்வு !

 
மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன் கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.


நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.

மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.
அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.

உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான எண்ணமுடைய உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்......?


செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.

சிறுகதை!
 

ஒரு ஊரில், ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் நல்ல அறிஞரும் கூட, தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன்  மகனை அருகாமையில் அழைத்தார்.
 
 மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.

என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார்.

என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான் மகன். அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை” என்றார். ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக்கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மரணித்து போனார்.

அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது.

அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது.

மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும் என்று கூறினான்.
 
முடியாது, முடியவே முடியாது என்று மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். இல்லை, இது என் தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.

இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை, எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக…

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக்
கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள் என்றார். 

அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள்.
 
ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!
 
இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார். 

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர்.

தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான் மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. என் மகனே… 

அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.

இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி,
நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும்.

ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. 

அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!” என்று எழுதியிருந்தது. கடிதத்தை படித்த அந்த நிமிடம் உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவம், மமதை சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வு.

கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

Thanks to C Malathi

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது......
Thanks to Donlee

Wednesday, February 10, 2016

தீராத சளி தொல்லைக்கு நிவாரணம் !

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.

மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.

கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.

பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thanks to Nataraj

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ்

 த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும். இவர் உடல்நிலை சரியில்லாமல் 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.


Thanks to Malaimalar.com

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் 


1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

THANKS TO MALAIMALAR.COM