Total Pageviews

Friday, March 29, 2013

. இதயம் எப்படி வேலை செய்கிறது?

நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்று, இதயம். உடம்பெங்கும் ரத்த ஓட்டத்துக்கு மூலமாக இருப்பது இதயம்தான்
.

 
இதயம் எப்படி வேலை செய்கிறது?

இதயத் தசை சுருங்கி விரியும் தன்மை உடையது. இதயம் முழுமையாக விரிந்திருக்கும்போது, அசுத்த ரத்தம் கொண்டுவரும் சிரைகள் வலது இதய அறைகளையும், சுத்த ரத்தம் கொண்டுவரும் நுரையீரல் சிரை இடது இதய அறைகளையும் நிரப்புகிறது.

கீழறைகளுக்குச் செல்வதை விட அதிகமான ரத்தம் மேலறைகளுக்குச் செல்வதால் மேலறைச் சுவர்கள் முழுமையாக விரிகின்றன. அதன்பின் மேலறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன.

இவ்வாறு மேலறைகள் சுருங்கும்போது அவற்றில் உள்ள ரத்தம், விரிந்திருக்கும் கீழ் அறைகளுக்குள் வால்வுகள் வழியாகச் செல்கிறது. கீழறைகள் நிரம்பியவுடன் உட்போக்கு வால்வுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இப்போது, கீழறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன. அழுத்தப்படும் ரத்தம், மேலறைக்குச் செல்வதை வால்வுகள் தடை செய்வதால், தமனிக்குள் செல்கிறது. வலது கீழறை ரத்தம் நுரையீரல் தமனிக்குள்ளும், இடது கீழறை ரத்தம் பெருந்தமனிக்குள்ளும், பாய்குழலுக்குள் சென்ற ரத்தம் கீழறைகளுக்கும் மீண்டும் திரும்புவதை அவற்றின் நுழைவாயில் வால்வுகள் அனுமதிப்பதில்லை.

இவ்வாறு இதயத்தில் ரத்தம் நிரம்பி, வெளியேறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கீழறைகள் சுருங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறையிலிருந்து மூன்று அவுன்ஸ் ரத்தம் வெளியேறுகிறது.

கீழறை சுருங்கும்போது இதயத்தின் நுனி முன்னுக்குத் தள்ளி மார்புச் சுவர்களை அடிப்பதால்தான் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

இதயம் முழுமையாக விரிவது, மேலறைகள் சுருங்குவது, கீழறைகள் சுருங்குவது, மீண்டும் இதயம் முழுமையாக விரிவது என்று விரிதல்- சுருங்கல் நிகழ்ச்சி இடைவிடாமல் நடைபெறுகிறது. நிமிடத்துக்குச் சுமார் 72 தடவை இதயத் தசையான கார்டியாக் தசை மாறி மாறித் தளர்ந்து சுருங்குவதாகக் கூறலாம்.

ரப்பர் பையினுள் தண்ணீரை அடைத்து அதை அழுத்தினால் பையில் ஓட்டை இருந்தால் நீர் எவ்வளவு வேகமாக வெளிவரும்! அதைப் போலவே இதயத்தின் மேலறை சுருங்கும்போது ரத்தம் மேலறையில் இருந்து கீழறைக்கும், கீழறை சுருங்கும்போது அதிலிருந்து ரத்தக் குழாய்களுக்கும் செல்கிறது என்று சொல்லலாம்.

ஒரு மனிதனை ஐந்நூறு அடி உயரம் தூக்குவதற்கு எவ்வளவு சக்தி செலவழியுமோ, அவ்வளவு வேலையை இதயம் ஒவ்வொரு நாளும் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைக்குள் அடங்கக்கூடிய இதயம் இவ்வளவு வேலை செய்வது அதிசயத்திலும் அதிசயமாகும்!

No comments:

Post a Comment