Total Pageviews

Friday, March 11, 2016

காலை உணவை தவிர்க்க வேண்டாம் !

காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது போன்றாகும். அதற்காக தான் பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். இதற்கு பிரேக்கிங் தி ஃபாஸ்ட் என்பதுதான் அதன் அர்த்தம். முதல் நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை 9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான். நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும். காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும்? எப்படி ஆரோக்கியமானவராக இருக்க முடியும்?. எனவே, விரதத்தை முடியுங்கள் காலையில்.காலை உணவு என்பது எரிபொருள் நிரப்புவது சமம். நாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

அப்போதுதான் நாள் முழுவதும் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உடல் உதவி செய்யும். காலை உணவு என்பது நோய்களை விரட்ட உதவும். காலை 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகிவிடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும். காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும். உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.காலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது.

நம் உடலுக்குத் தொடர்ச்சியாக தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக அவசியம். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள். காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. இது காலை உணவின் முக்கியத்துவத்தை மருத்துவ ரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி. ராஜா மாதிரி என்றால் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே அர்த்தம். நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில் கிடைத்துவிடும். இட்லியில் மாவுச்சத்தும், சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். எனவே காலை உணவை தவிர்க்காதீர்கள்.

Thanks to Dinakaran.com

No comments:

Post a Comment