‘வசந்த மாளிகை’யில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!?
சிவாஜி கணேசனின் பேர் சொல்லும் படங்களில் மறக்க முடியாத ஒன்று ’வசந்த மாளிகை’. ஓல்டு இஸ் கோல்டு என்பதற்கு இந்தப் படம் நூறு சதவிகித கியாரண்டி.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அந்தக் கால கட்டத்தில் கலக்கிய, காதல் காவியம் இது. சிவாஜியும் வாணிஸ்ரீயும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்.
இந்தப் படம் தெலுங்கில் நாகேஸ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்து சூப்பர் ஹிட்டான ’பிரேம நகர்’ படத்தின் ரீமேக்.
கோடூரி கவுசல்யா தேவி அதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. டி.ராமாநாயுடு தயாரித்திருந்தார்.
அவரே இதை தமிழில் தயாரிக்க, தெலுங்கு படத்தை இயக்கிய கே.எஸ்.பிரகாஷ் ராவ் தமிழிலும் இயக்கினார்.
சிவாஜி, வாணிஸ்ரீயோடு, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.எஸ்.ரங்காராவ், ஸ்ரீகாந்த், செந்தாமரை என பெரிய நட்சத்திரக் கூட்டம் படத்தில்.
ஸ்ரீதர் படங்களின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இதற்கு மிரட்டலாக ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழ், தெலுங்கு என இரண்டுப் படத்துக்கும் இசை கே.வி.மகாதேவன். ஒவ்வொரு பாடலையும் முத்து முத்தாக கொடுத்திருந்தார்.
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே, மயக்கமென்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக, கலைமகள் கைப்பொருளே... என அனைத்துப் பாடலையும், அதோடு ஒன்ற வைத்த பெருமை இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனைச் சேரும்.
பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதி இருந்தார். பாடல்களின் ஒவ்வொரு வரியையும் ரசித்து, ரசித்து மயங்கலாம் எப்போதும். இப்போது கேட்டாலும் புல்லரிக்க வைக்கிறது, பாடல்கள்.
இந்தப் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஜமீன் பங்களா செட்டும், கண்ணாடியால் அமைக்கப்பட்ட காதல் மாளிகையும் அந்தக் காலத்தில் ரசிகர்களை வியக்க வைத்த அம்சங்கள்.
’வசந்த மாளிகை’யில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.
இதனால், தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயையே தமிழிலும் நடிக்க வைத்தார்கள். ஜெயலலிதா நடித்திருந்தால், இந்தப் படம் இன்னும் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம்.
1972-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம், 750 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சென்னையில் ரிலீஸ் ஆன மூன்று தியேட்டர்களில் 271 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடிய படம் இது.
இலங்கையிலும் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது என்கிறார்கள். முதலில், கதைப்படி ஹீரோ இறந்துவிடுவது போல வைத்திருந்த கிளைமாக்ஸை, பிறகு உயிர் பிழைப்பது போல மாற்றி ரிலீஸுக்கு பிறகு சேர்த்தார்கள்.
No comments:
Post a Comment