Total Pageviews

Monday, April 6, 2026

“சைவத்தை இழந்த மதுரை”

சைவத்தை இழந்த மதுரை”

சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க. அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பினா மாதிரி. விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டா கடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ் பெற்ற ஊரு தான். 

கறிதோசை, நண்டு ஆம்லெட், அயிரைமீன் குழம்பு வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை. சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மதுரை மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறிட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை..

வித விதமான சைவ உணவு வகைகளிலும் ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் மதுரை தான் டாப்.. உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போது மதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடு எனும் நேதாஜி ரோட்டில்..

மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும் சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல அத்தெருவெங்கும் மணக்கும். அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லி போன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும்.. 

தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும் வெங்காய சட்னியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும், ஆனியன் ரவா தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரைத்திசைத்த தங்க நிற உளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில் மீனாட்சி அம்மனை கையெடுத்து தரிசிக்க நிற்கும்..

அதே கூட்டம் தரிசனம் முடிந்த கையோடு மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து கால் கடுக்க நிற்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தில் நிற்க விருப்பம் இல்லாதவர்கள் மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படையெடுப்பார்கள். அதிகாலையில்  நெய் ஒழுக, வறுத்த முந்திரி திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சு நிறத்தில் அவர்கள் தரும் கேசரியே ஆஹா ரகம்.

இதனால் தான் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டென நம்பிவிடலாம். ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி, இந்த மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவிலேயே அதை ருசித்து வாழ்கின்றன. 

உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும். சாம்பாரைக் கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன. எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர். மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது.. 

உடனிருந்த ஷேவாக் போல அதிரடி காட்டியது. கோபு அய்யங்காரின் நெய் மினு மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி, வெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவை. இந்த உணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா..

காரக்கறி கிழங்கு, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்பு அப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், மெது போண்டா, கீரை வடை இப்படி மதுரையின் புகழ் பெற்ற சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்! சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல் மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே பிரத்யேகமாக, 

சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும் மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள் துவங்கி அதில் சில இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன. இத்தனை உணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத் தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான.. 

சப்பாத்தி வகைகள், சப்ஜி, அஜ்மீர் மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன் வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலா ஸ்வீட்ஸ். பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும் உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில் வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன்’ உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லி வாலா. 

ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் ஸ்வீட்டுகளில் அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரை மக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர். பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது. இட்லி, பொங்கல், தோசை என்று வழக்கம் போல இல்லாமல்..

ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, அவித்த முள்ளங்கி சப்பாத்தி என சப்பாத்திகளில் மட்டுமே பல வகை. பாலிலேயே அரிசியை வேக விட்டு பால் பொங்கல்,  அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் தோசை & உப்புமா, செட் தோசை கேரட் குருமா, பாண்டிய நாட்டில் சோளாப்பூரி & சென்னா புரோட்டா நவரத்ன குருமா என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பல வகையான உணவுகளை அறிமுகப்படுத்தியது! 

இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின் கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள் இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு ஆதரவளித்தனர். ஆரியபவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள் என விரிவடைந்து ஆரியபவன் பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! 

நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும், பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர் வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவா தோசையும், ஆந்திர பெசரட் தோசையும் அதற்கு உப்புமாவும், கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தன. சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும். 

1989இல் ஒரு அன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்! நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரை அப்படி அத்தனை மெனுக்கள். இடையில் இதே உடுப்பி தங்கள் கடையை ஆரியபவனிடம் தந்து விட்டு தமது கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஆரிய பவன் தங்களது மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள் தம் வெற்றிக் கொடியினை..

பசி போக்க பறக்கவிட்டனர். மதுரையில் ஆரிய பவன் எனும் கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் கீழச் சித்திரை வீதியில் இருந்த மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கீதா கஃபே, வடைகளுக்கு புகழ் பெற்ற KBS, வசந்த பவன், பரசுராம், குருபிரசாத் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவ ஓட்டல்கள் மினுக்கிட்டன.

டவுன் ஹால் ரோட்டில் பழைய தங்கம் தியேட்டர் போகும் வழியில் சைடு வகிடு எடுத்தது போல இருக்கும் இடம் ‘காக்கா தோப்பு’ அங்கே ஶ்ரீராம் மெஸ் ஒரு குறிப்பிடத்தக்க சைவ சாப்பாடு ஓட்டல்! மதுரையர்களின் சாப்பிடும் கெப்பாசிட்டி பற்றி நன்கு அறிந்து இருந்தும் தைரியமாக 90களில் 25 ரூபாய்க்கு அன்லிமிடெட் வெரைட்டிகளுடன் அன்லிமிடெட் மீல்ஸ் தந்த உணவகம். 

கிரேப் ஜூஸில் துவங்கி இறுதியில் தரும் பாயாசம் வரை அத்தனை வெரைட்டிகள். வடை, இரண்டு பொரியல், இரண்டு கூட்டு, அவியல், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், அப்பளம் & ஊறுகாய் கூட அபாரமாக இருக்கும். ஶ்ரீராமில் சாப்பிட்ட திருப்தி என்பது சொல்லில் புரியாது. அதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும். அந்த ஹோட்டல் இருக்கும் தெருவில் ஜெய் ஶ்ரீராம் எனும் கோஷம்..

சாப்பிட்ட ஒவ்வொருவரின் திருப்தியான ஏப்பமாக அந்தத் தெருவெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இத்தனைக்கும் ஆரியபவனுக்கும் ஶ்ரீராமுக்கு இடையேயான இடைவெளி 700 அடிகள் கூட இருக்காது. சைவத்தில் கோலோச்சிய உடுப்பி ஓட்டல் போலவே ஆரியபவனின் வெற்றிக் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது. அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை. 

மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது. கோபு அய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய ஹோட்டல் மனோரமாவும் இப்போது இல்லை.  இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர் பரோட்டா சூரியின் அம்மன் & அய்யன் போன்ற உணவங்கள் பேருக்கு இருந்தாலும், அந்த காலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது.. 

அன்றைக்கு சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர் தரமான சைவ ஓட்டல்களோ அல்லது வித விதமான ருசி மிகுந்த புதிய சைவ மெனுக்களோ மதுரையில் அருகிவிட்டது. கோவை போல பாரம்பரியம் மிக்க சிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு தேர்ந்த தொழில் முறையான ஓட்டல் கடை மதுரை மாநகரில் தற்போது இல்லவே இல்லை. இதுவே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்.

விடுபட்டு போனவை : சோலைமலை தியேட்டர் அருகேயிருந்த கெளரி கிருஷ்ணா, கோரிப் பாளையம் கிங் மெட்ரோ & குயின் மெட்ரோ, பீபீ குளம் நாராயணா, திடீர் நகர் பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அசோக் பவன்.. மஹால் ரோட்டில் இருந்த வாஸன் டிபன் ஹோம்.. பெரியார் கீஷ்டுகானம் எதிரில் வசந்த விஹார், அண்ணா பஸ் ஸ்டாண்ட் இராஜேஸ்வரி,, டவுன் ஹால் ரோட்டில் இருந்த சரஸ்வதி.. 

{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள் இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்}

 🟣மீள்பதிவு🟣

No comments:

Post a Comment