Total Pageviews

Monday, April 6, 2026

நடிகர் பிரசாந்த் !

 

நடிகர் பிரசாந்த் அவர்களை தான் மிகவும் பரிதாபமாக நடிகராக பார்க்கிறேன்!!

தனது முதல் படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கும் போது வயது 17 தான். மருத்துவம் படிக்கவே ஆசைப்பட்டார் அவரது தந்தை தியாகராஜன் அவர்கள், ஆனால் பிரசாந்த் அதற்குள் நடிகராகி புகழ் பெற்று விட்டார்.

பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த முதல் இளம் நடிகர் பிரசாந்த் மட்டும் தான். அதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என வேற்று மொழி திரைப்படங்களில் நேரடி கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதுவும் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்திலும், ஒரு பாடலில் ஏழு உலக அதிசயங்களுடன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களுடன் ஆடிய உலகில் ஒரே நடிகர் பிரசாந்த் மட்டும் தான், இன்று வரை அது எட்டாம் அதிசயம் தான்!!

90களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார் பிரசாந்த் அவர்கள். இளம் கதாநாயகிகளுடன் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்திய இளம் கதாநாயகன் பிரசாந்த் மட்டும் தான். இளம் கதாநாயகர்களில் முதன் முதலில் பெண் வேடம் போட்டு நடித்தவர் பிரசாந்த் அவர்கள் தான். அதேபோல் காதல் இளவரசனாக திரைப்படத்தில் காதல் கவிதை பேசி நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுக்களில் சிக்காத நடிகர் பிரசாந்த் மட்டும் தான்.

தனது திரைப்படங்களில் காதலியை பார்த்து ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன், என்று உருகி உருகி காதலித்தாலும் நிஜத்தில் யாரையும் காதலிக்காமல், தனது பெற்றோர் பார்த்த பெண்ணை தான் மணந்தார்! ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை.

திருமண வாழ்க்கை பெரும்பாலும் பல நட்சத்திர நடிகர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இதற்கு பலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் இதிலும் பிரசாந்த் மட்டும் தான் விதிவிலக்காக இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு டாப் ஸ்டாராக இருந்தார் பிரசாந்த். கிரகலட்சுமியை திருமணம் செய்த பிறகு, சில பிரச்சினைகள் காரணமாக, நீதிமன்றம் வழக்கு, விவாகரத்து வழக்கு என்று தனது தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திரைவாழ்க்கையும் மணவாழ்க்கையும் சரியாக அமையாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

தனது தந்தை இயக்கத்தில் பல படங்களில் நடித்தார் பிரசாந்த். குறிப்பாக தந்தையின் வெற்றி படமான மலையூர் மம்பட்டியான் ரீமேக் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வெற்றி பெறவில்லை. கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில் பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நடித்தார், இதுவும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதன் பிறகு பல படங்களில் நடித்தார். ஆனாலும் எதுவும் வெற்றி படமாக அமைய வில்லை.

2019 ஆண்டு வெளிவந்த வினய விதேய ராமா எனும் தெலுங்கு படத்தில் ராம் சரண் அண்ணனாக நடித்திருந்தார் பிரசாந்த் அவர்கள். நம்ம பிரசாந்த் அவர்களா என்று கண்களால் நம்ப முடியவில்லை. மனம் ஏற்ற வில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி இருந்த நடிகர், தனது மணவாழ்க்கை தோல்வியால் திரைப்பட வாழ்க்கையும் சரிந்து, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில்… நேரம் சரியில்லை என்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது எவ்வளவு உண்மை!!

இந்தியில் ரித்திக் ரோஷன் அவர்கள் போன்று தான் தமிழில் நடிகர் பிரசாந்த் அவர்களும். சினிமாவிற்காக பல விஷயங்களை கற்று கொண்டவர் பிரசாந்த் அவர்கள். சிறுவயதில் தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் வாங்கியவர். பியானோ இசைப்பதில் வல்லவர் பிரசாந்த். சிறப்பாக வர வேண்டிய நடிகர். காலத்தின் கோலம் வேறு மாதிரியாக அமைந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற திறமை மட்டுமே போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர்களில் பிரசாந்த் அளவிற்கு அழகிலும், உடல் பலத்திலும், நிறத்திலும், நடிப்பிலும், பணத்திலும், பிரசாந்த் அவர்களுக்கு நிகராக யாருமில்லை. குறிப்பாக திநகரில் உள்ள பிரசாந்த் கோல்டு டவர் போதும், பிரசாந்த் அவர்களின் செல்ல செழிப்பான வாழ்க்கைக்கு…

தற்போது 50 வயதாகும் பிரசாந்த் அவர்களுக்கு பல பிரச்சனைகள் தாண்டிய பிறகும் ரசிகர்கள் பக்க துணையாக இருக்கிறார்கள். பிரசாந்த் அவர்களுக்கு பெரிய உதவியாக இருப்பது அவர் தந்தை தியாகராஜன் அவர்கள் தான். அடுத்ததாக அவர் இயக்கத்தில் அந்தகன் படம் வெளிவர உள்ளது. அந்தகன் திரைப்படம் நல்ல வெற்றி படமாக அமைய வேண்டும். இன்னும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரசாந்த் அவர்கள் புகழ் பெற வேண்டும். அவரது தனிப்பட்ட வாழ்வும் சிறக்க வேண்டும்!! மீண்டும் டாப் ஸ்டாராக ஜொலிக்க வேண்டும்!!

No comments:

Post a Comment