Total Pageviews

Friday, March 29, 2013

மாபாவியோர் வாழும் மதுரை

சங்கரதாஸ் சுவாமிகள் மதுரையில் நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் “மாபாவியோர் கூடி வாழும் மதுரை” என்று ஒரு வசனம் வந்தது.


இதைக் கேட்ட ரசிகர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்தனர். கற்களையும், நாற்காலிகளையும் வீசி எறிந்தனர். பெரும் அமளி ஏற்பட்டது.

இதை உணர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் மேடையில் ஏறினார். அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி வேண்டினார். யாரும் கேட்கவில்லை.

”முதலில் “மாபாவி” என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்கள்.

உடனே சுவாமிகள், “முதலில் மாபாவி என்பதற்கு விளக்கம் தருகிறேன். அது தங்களுக்கு சரியாகப்படவில்லையென்றால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்” என்றார்.

ரசிகர்கள் சற்று அமைதியானார்கள்.

பின் அதை சுவாமிகள் விளக்கினார்.

“மா” என்றால் மலைமகள், “பா” என்றால் கலைமகள், “வி” என்றால் திருமகள். ஆக வீரம், கல்வி மற்றும் செல்வம் கூடி வாழும் மும்மாடக் கூடல் என்பதைத்தான் மாபாவி என்றோம்.

கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


படிக்காதவனுக்கு மாலையா...?



காமராஜர் ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார்.

அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.



படம் உடைக்கப்படாமலிருக்க



ஒரு சிற்றூரில் கலைஞர் கருணாநிதி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அசோகன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அசோகன், “கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது பதினாறு முறை படையெடுத்து பதினேழாவது முறை வெற்றி கண்டது போல், நான் தேதி கேட்டு கலைஞரிடம் பலமுறை படையெடுத்து இன்று வெற்றி கண்டேன். இப்போது கலைஞர் பேசுவார்” என்றார்.

கலைஞர், “அசோகனை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசவிடுங்கள் என்றேன். காரணம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பு சிலை உடைப்பில் முடிந்தது. அசோகன் படையெடுப்பு (பலமுறை அழைத்தது) என் பட உடைப்பில் முடிந்து விடக் கூடாது என்பதால் கூட்டத்திற்கு வந்து விட்டேன்” என்றார்.

கூட்டத்தில் பலத்த கர ஒலியும், சிரிப்பொலியும் எழுந்தன.

யாகாவாராயினும் நாகாக்க யாருக்காக?

யாகாவாராயினும் நாகாக்க  யாருக்காக?

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராய்னும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்?

பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?




சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ, மசியையோ, நெய்யையோ தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது. அதாவது தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ் இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.
 
உடலில் தீப்புண் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது.

இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் 
கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.

தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது. துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.

தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.

அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பானம் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!

ஊரடங்கு




ஊரடங்கு’ என்பது ஆங்கிலத்தில் `கர்ப்யூ’ (Curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு’ என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே ப்யூ’ என்பதில் இருந்து `கர்ப்யூ’ வந்தது.
 
இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது’ என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.

நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கர்ப்யூ’ சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

. இதயம் எப்படி வேலை செய்கிறது?

நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்று, இதயம். உடம்பெங்கும் ரத்த ஓட்டத்துக்கு மூலமாக இருப்பது இதயம்தான்
.

 
இதயம் எப்படி வேலை செய்கிறது?

இதயத் தசை சுருங்கி விரியும் தன்மை உடையது. இதயம் முழுமையாக விரிந்திருக்கும்போது, அசுத்த ரத்தம் கொண்டுவரும் சிரைகள் வலது இதய அறைகளையும், சுத்த ரத்தம் கொண்டுவரும் நுரையீரல் சிரை இடது இதய அறைகளையும் நிரப்புகிறது.

கீழறைகளுக்குச் செல்வதை விட அதிகமான ரத்தம் மேலறைகளுக்குச் செல்வதால் மேலறைச் சுவர்கள் முழுமையாக விரிகின்றன. அதன்பின் மேலறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன.

இவ்வாறு மேலறைகள் சுருங்கும்போது அவற்றில் உள்ள ரத்தம், விரிந்திருக்கும் கீழ் அறைகளுக்குள் வால்வுகள் வழியாகச் செல்கிறது. கீழறைகள் நிரம்பியவுடன் உட்போக்கு வால்வுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இப்போது, கீழறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன. அழுத்தப்படும் ரத்தம், மேலறைக்குச் செல்வதை வால்வுகள் தடை செய்வதால், தமனிக்குள் செல்கிறது. வலது கீழறை ரத்தம் நுரையீரல் தமனிக்குள்ளும், இடது கீழறை ரத்தம் பெருந்தமனிக்குள்ளும், பாய்குழலுக்குள் சென்ற ரத்தம் கீழறைகளுக்கும் மீண்டும் திரும்புவதை அவற்றின் நுழைவாயில் வால்வுகள் அனுமதிப்பதில்லை.

இவ்வாறு இதயத்தில் ரத்தம் நிரம்பி, வெளியேறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கீழறைகள் சுருங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறையிலிருந்து மூன்று அவுன்ஸ் ரத்தம் வெளியேறுகிறது.

கீழறை சுருங்கும்போது இதயத்தின் நுனி முன்னுக்குத் தள்ளி மார்புச் சுவர்களை அடிப்பதால்தான் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

இதயம் முழுமையாக விரிவது, மேலறைகள் சுருங்குவது, கீழறைகள் சுருங்குவது, மீண்டும் இதயம் முழுமையாக விரிவது என்று விரிதல்- சுருங்கல் நிகழ்ச்சி இடைவிடாமல் நடைபெறுகிறது. நிமிடத்துக்குச் சுமார் 72 தடவை இதயத் தசையான கார்டியாக் தசை மாறி மாறித் தளர்ந்து சுருங்குவதாகக் கூறலாம்.

ரப்பர் பையினுள் தண்ணீரை அடைத்து அதை அழுத்தினால் பையில் ஓட்டை இருந்தால் நீர் எவ்வளவு வேகமாக வெளிவரும்! அதைப் போலவே இதயத்தின் மேலறை சுருங்கும்போது ரத்தம் மேலறையில் இருந்து கீழறைக்கும், கீழறை சுருங்கும்போது அதிலிருந்து ரத்தக் குழாய்களுக்கும் செல்கிறது என்று சொல்லலாம்.

ஒரு மனிதனை ஐந்நூறு அடி உயரம் தூக்குவதற்கு எவ்வளவு சக்தி செலவழியுமோ, அவ்வளவு வேலையை இதயம் ஒவ்வொரு நாளும் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைக்குள் அடங்கக்கூடிய இதயம் இவ்வளவு வேலை செய்வது அதிசயத்திலும் அதிசயமாகும்!