Total Pageviews

Thursday, December 19, 2024

'பொட்டு வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி, 'சுமதி என் சுந்தரி' திரைப்படத்தில்!

 

சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி

அதில் எஸ்.பி.பி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.

'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது பிரபு ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது.

பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம்,

"பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு."

மறுபடியும் பாடல்.

கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது.

"பிரபு..."

"என்னப்பா ?"

"இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு."

மீண்டும்... மீண்டும்... மீண்டும்...

பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்பா.

அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ''இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?"

பிரபு சொல்லியிருக்கிறார்.

"புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்."

சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, "பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட (MSV) இது விஷயமா உடனே பேசணும்."

அப்படித்தான் சிவாஜிக்கு 'பொட்டு

வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி, 'சுமதி என் சுந்தரி'

திரைப்படத்தில்.

இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

"எஸ்பி.பி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.

அவரைப் பாராட்டி நான் ஏதாவது பேச ஆரம்பித்தால், நம்மை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் நம்மை பாராட்டி இப்படி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்."

"பிரபுவோட நடிப்பு எல்லோருக்கும்

ரொம்ப பிடிக்கும்.

'என்னவென்று சொல்வதம்மா' பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு" என்று சொல்வாராம் எஸ்பிபி.

இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.

அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, "டூயட் படம் பாத்திருக்கீங்களா ?

அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே... பியூட்டிஃபுல்."

இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.

இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு, நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.

"நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.

அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க."

இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.

இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால்,

நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.

நல்ல நல்ல பாடங்களையும் கூட

நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.

முகநூல் பதிவு-பிரசாந்த் 🥀🌹

இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!!

 💜மனைவி என்பவள் தெய்வமாகலாம்!

இயக்குனர் ஸ்ரீதரை,

யாராலும் மறக்க முடியாது!!

திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.

கல்யாணப் பரிசு

தேன் நிலவு

நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சம் மறப்பதில்லை

காதலிக்க நேரமில்லை

சுமை தாங்கி

வெண்ணிற ஆடை

சிவந்த மண்

உரிமைக்குரல்

இளமை ஊஞ்சலாடுகிறது

.

எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...! ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்... ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் .. அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் தேவசேனா ..

யார் இந்த தேவசேனா..?

இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி..! மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்..! உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார்... கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்...!

இவர் கேட்கும் இரக்க தொனியில்

எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம் !

கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து , அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா...!

.

சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்..!

.

ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்...!

.

இப்படியாக ... பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா , கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்...!

அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்...!

" மனைவி என்பவள்

தெய்வமாகலாம்.."

.

ஆம் .. ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே..!

.

"மனைவி என்பவள் தெய்வமாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனைவி என்பவள் தெய்வமாகலாம்!

Tuesday, November 12, 2024

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் !

 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.

வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.

தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.

வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து,

“இங்கே வாடா, தம்பீ…’ என்று அழைத்ததும்,

மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் பையன்.

“தம்பி, பையில் என்ன இருக்கு?’ என்று கேட்டார்.

“ஒண்ணுமில்லையே!’ என் றான்.

“காட்டு, பார்க்கலாம்!’ என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார்.

பூட்டு..!

கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

“ஏண்டா, எடுத்தே?’ என்றார்.

“பசி, பழைய சாமான் கடையில்

போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும்.

சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!’ என்று உள்ளதைச் சொன்னான்.

அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததை பார்த்து விட்டார்.

தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவன் தான் எடுத்திருப்பான்,

என். எஸ்.கே.,பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத்தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.

என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன்.

எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என். எஸ். கே., சிரித்தபடி,

“வாங்க… வாங்க… பூட்டைத் தேடறீ ங்களா?

ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான்.

தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன்.

“இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான்.

அதுக்காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்…’ என்றவர்,

பையனிடம்,

“டேய், தம்பி கொடுப் பாரு;

போயி வாங்கிட்டுப் போ!’ என்றார்.

பாவம்!

அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.

Wednesday, October 30, 2024

நடிகை மாதவி !

 

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!

நடிகை மாதவி தனது வாழ்வில் திருமணம் செய்ய வேண்டாம் என்று இருந்ததாகவும் ஆனால் திடீரென 33 வயதில் தனது ஆன்மீக குரு ஒருவர் கை காட்டியவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு அவரது வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 80களில் இருந்தவர் நடிகை மாதவி. தமிழில் இவர் 1980 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’தில்லுமுல்லு’ திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிப்பில் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன் பின் ரஜினி ஜோடியாக ’கர்ஜனை’ கமல் ஜோடியாக ’ராஜபார்வை’, ’டிக் டிக்’, ’எல்லாம் இன்பமயம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் கமல்ஹாசனின் ’சட்டம்’ ரஜினியின் ’தம்பிக்கு எந்த ஊரு’ மீண்டும் கமல்ஹாசனுடன் ’காக்கி சட்டை’, ’மங்கம்மா சபதம்’ மீண்டும் ரஜினியுடன் ’விடுதலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மாதவி ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பார். குறிப்பாக அவர் தனது ஆன்மீக குருவான சுவாமி ராமா என்பவர் மீது அதீத பக்தி வைத்திருந்தார் என்பதும் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுவாமி ராமா என்பவரின் சீடர்களில் ஒருவர் தொழிலதிபர் ரால் சர்மா. இவரை மாதவியுடன் சுவாமி ராமா அறிமுகம் செய்ததாகவும் அதன் பிறகு இருவரும் நட்பாக பழகி பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி திருமணம் செய்வதற்கு அவரது ஆன்மீக குரு சுவாமி ராமா என்பவர் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மாதவிக்கு 3 மகள்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகள்களின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

திருமணத்திற்கு பின் சில படங்களில் நடித்தாலும் சில வருடங்களில் அவர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் கமல், ரஜினி உடன் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த மாதவிக்கு தற்போது கூட சில வாய்ப்புகள் வந்தாலும் அவர் விடாப்படியாக நடிக்க முடியாது என்று கூறி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

‘வசந்த மாளிகை’யில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!?

 

வசந்த மாளிகை’யில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!?

சிவாஜி கணேசனின் பேர் சொல்லும் படங்களில் மறக்க முடியாத ஒன்று ’வசந்த மாளிகை’. ஓல்டு இஸ் கோல்டு என்பதற்கு இந்தப் படம் நூறு சதவிகித கியாரண்டி.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அந்தக் கால கட்டத்தில் கலக்கிய, காதல் காவியம் இது. சிவாஜியும் வாணிஸ்ரீயும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்.

இந்தப் படம் தெலுங்கில் நாகேஸ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்து சூப்பர் ஹிட்டான ’பிரேம நகர்’ படத்தின் ரீமேக்.

கோடூரி கவுசல்யா தேவி அதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. டி.ராமாநாயுடு தயாரித்திருந்தார்.

அவரே இதை தமிழில் தயாரிக்க, தெலுங்கு படத்தை இயக்கிய கே.எஸ்.பிரகாஷ் ராவ் தமிழிலும் இயக்கினார்.

சிவாஜி, வாணிஸ்ரீயோடு, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.எஸ்.ரங்காராவ், ஸ்ரீகாந்த், செந்தாமரை என பெரிய நட்சத்திரக் கூட்டம் படத்தில்.

ஸ்ரீதர் படங்களின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இதற்கு மிரட்டலாக ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டுப் படத்துக்கும் இசை கே.வி.மகாதேவன். ஒவ்வொரு பாடலையும் முத்து முத்தாக கொடுத்திருந்தார்.

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே, மயக்கமென்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக, கலைமகள் கைப்பொருளே... என அனைத்துப் பாடலையும், அதோடு ஒன்ற வைத்த பெருமை இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனைச் சேரும்.

பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதி இருந்தார். பாடல்களின் ஒவ்வொரு வரியையும் ரசித்து, ரசித்து மயங்கலாம் எப்போதும். இப்போது கேட்டாலும் புல்லரிக்க வைக்கிறது, பாடல்கள்.

இந்தப் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஜமீன் பங்களா செட்டும், கண்ணாடியால் அமைக்கப்பட்ட காதல் மாளிகையும் அந்தக் காலத்தில் ரசிகர்களை வியக்க வைத்த அம்சங்கள்.

’வசந்த மாளிகை’யில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.

இதனால், தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயையே தமிழிலும் நடிக்க வைத்தார்கள். ஜெயலலிதா நடித்திருந்தால், இந்தப் படம் இன்னும் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம்.

1972-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம், 750 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சென்னையில் ரிலீஸ் ஆன மூன்று தியேட்டர்களில் 271 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடிய படம் இது.

இலங்கையிலும் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது என்கிறார்கள். முதலில், கதைப்படி ஹீரோ இறந்துவிடுவது போல வைத்திருந்த கிளைமாக்ஸை, பிறகு உயிர் பிழைப்பது போல மாற்றி ரிலீஸுக்கு பிறகு சேர்த்தார்கள்.


நடிகவேள் எம். ஆர். ராதா !

 

நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்

நல்லா தெரியும்ணே என்றார் கஜபதி. அப்படியா அந்த பணத்தைக் கொடு என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி தான் ட்ரைவரிடம் கொடுத்து இளங்கோவனிடம் கொடுக்க சொல்லி அனுப்பினார்

கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது அவரின் முகம் மாறுவதைக் கண்ட எம். ஆர். ராதா என்னையா ஒரு மாதிரி இருக்க என்றார்.

என்னண்ணே நான் கொடுத்துற மாட்டனா அவ்வளவு நம்பிக்கை இல்லையா என்றார் கஜபதி.

அதற்கு எம். ஆர். ராதா இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா கொடிகட்டி பறந்தவரு. செட்ல ஒரு வசனத்தை மாத்தணும்னா கூட அவரைத் தேடி போய் அனுமதி வாங்கி தான் மாத்துவாங்க..

அவரு ஓகோன்னு இருக்கிறப்ப நீ பாத்திருக்க அவரை நல்லா தெரியும்னு வேற சொல்ற. இப்ப அவரு நிலைமை சரி இல்லை. அவரு வீட்டை ஜப்தி செய்ய போறாங்களாம். நீ போய் பணம் குடுக்குறப்ப என்ன நினைப்பாரு நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படுவார்ல.

அதான் அவருக்கு தெரியாதவங்க மூலம் கொடுத்து அனுப்பிச்சேன். அவரு அவ மரியாதையா நினைக்க கூடாதுல்ல என்று தெளிவு படுத்தினார்.

#செய்யும் செயலில் தெய்வம் தோன்றும்..!!

TR ராஜகுமாரி !

 

TR ராஜகுமாரி !

தமிழத்திரை கனவு கன்னி!

சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார்.

தம்பி டி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து "ஆர்.ஆர். பிக்சர்ஸ்" என்ற படக் கம்பெனியை ராஜகுமாரி தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம்

🌹 "வாழப்பிறந்தவள்". அதில் ராஜகுமாரி நடித்தார். ராமண்ணா டைரக்ட் செய்தார். படம் சுமார் ரகம்.

🌹1954_ல் எம்.ஜி.ஆரையும், சிவாஜி கணேசனையும் ஒன்றாக நடிக்கச் செய்து, "கூண்டுக்கிளி" என்ற படத்தைத் தயாரித்தார். இதில் தனக்குப் பொருத்தமான வேடம் இல்லை என்ற காரணத்தால் பி.எஸ்.சரோஜாவையும், குசல குமாரியையும் நடிக்க வைத்தார். ராமண்ணா டைரக்ட் செய்தார்.

இரு மாபெரும் நடிகர்கள் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டு துவண்டு விடாது ராஜகுமாரி, அடுத்த படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க, தம்பியுடன் தீவிரமாக ஆலோசித்தார்.

🌹"குலேபகாவலி" கதையை மசாலாப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். எம்.ஜி.ஆர். கதாநாயகன். அவருக்கு மூன்று ஜோடிகள். அவர்களில் ஒருவராக ராஜகுமாரி நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.

பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம்.ஜி.ஆர். என்ற நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ராஜகுமாரி, சிவாஜி கணேசனுடன் "தங்கப்பதுமை"யில் சேர்ந்து நடித்தார்.

ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமை முதன் முதலாக ராஜகுமாரிக்குக் கிடைத்தது. பின்னர் இந்த பெருமையை பி.பானுமதி பெற்றார்.

1963_ல் "வானம்பாடி" படத்தில் ராஜகுமாரி நடித்தார். அதுவே அவருடைய கடைசி படம். அதன்பின் படங்களில் நடிக்கவில்லை.

.

. தி.நகரில் உள்ள தன் வீட்டில் ராஜகுமாரி தன் வாழ்க்கையின் பின்பகுதியை அமைதியாகக் கழித்தார். விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.

காலப்போக்கில், தன்னுடைய "ராஜகுமாரி" தியேட்டரை விலைக்கு விற்று விட்டார். அது பலருடைய கை மாறி, பின்னர் இடிக்கப்பட்டு, இப்போது வணிக வளாகமாகக் காட்சி அளிக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ராஜகுமாரி 20_9_1999_ல் தமது 77_வது வயதில் காலமானார்.

ஸ்ரீநிவாஸ்......