Total Pageviews

Sunday, June 24, 2012

நாகேஷ் பற்றி கே. பாலசந்தர்



தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி' வேடத்தை யாரால் மறக்க முடியும்? பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.

“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.

நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?' என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!' என்று விளக்கம் சொன்னார்.

அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்' நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.

நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்' என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.'
அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்' நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே' என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.
`சர்வர் சுந்தரம்' நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்' என்று கத்தினார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.
பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி' நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்' நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி' நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்' எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா' என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

இந்த `வெள்ளிவிழா' பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.

அடுத்து `அபூர்வ ராகங்கள்' படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.
 
(Thanks Manivannan and KUMUTHAM)

No comments:

Post a Comment