Total Pageviews

Sunday, December 22, 2024

மலேசியா வாசுதேவன் !

 மலேசியா  வாசுதேவன்!

எஸ்பிபியின் நிழலில் மனோவும், யேசுதாஸின் நிழலில் ஜெயச்சந்திரனும் மறைக்கப்பட்டிருந்தாலும், யாராலும் மறைக்க முடியாத தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது, ஆனால் அந்தந்த நேரத்தில் அவர் புகழுக்கேற்றபடி கொண்டாடப்பட்டாரா என்றால் இல்லை.

இன்று 2கே கிட்ஸ் கொண்டாடிய அளவுக்கு 'பேர் வச்சாலும்…' பாடலை வேறு யாரும் கொண்டாடிவிடவில்லை. ஆனாலும் அவருடைய குரலின் அத்தனை கோணங்களையும் தமிழ் மக்கள் கண்டனர் என்றுதான் கூறவேண்டும்,

அவர் கவனிக்கப்படாமல் போனவர் அல்ல! அவருடைய சிறப்பம்சமே அவர் குரலில் ததும்பும் கொண்டாட்ட தொனி தான். அதற்காகவே எண்ணற்ற குத்துப்பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், பக்திப்பாடல்களை பாடவைத்து ரசித்திருக்கிறது தமிழ் சமூகம்.

"நெஞ்சுக்குள் அச்சம் இல்லை

யாருக்கும் பயமும் இல்லை

வாராதோ வெற்றி நிச்சயம்…"

என அவர் பாட அதை கேட்கும்போதே நெஞ்சுக்குள் வீரம் பொங்கி, முரட்டுக்காளை ரஜினியாக மாறும் வல்லமை கொண்டது அவர் குரல்.

இது மட்டுமல்ல, ஆசை நூறுவகை, சிங்கமொன்று புறப்பட்டதே போன்ற பல மாஸ் பாடல்கள் ரஜினி திரைப்படங்களில் பாடியுள்ளார். இப்படி தமிழில் கிட்டத்தட்ட 8,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரல் ஒலிக்காத விசேஷங்கள் இன்றும் இல்லை அன்றும் இல்லை.

ஏன் இவர் குரல் அவ்வளவு தனித்துவம் உடையது என்றால், யேசுதாஸ், எஸ்பிபி போன்ற வளைவான குரல் அல்ல இவருடையது. நாமோ, நம் தந்தையோ பாடினால் யதார்த்தமாக வரும் குரல் என்பதாலேயே இதயத்துடன் அவ்வளவு நெருங்கி வருகிறார்.

இது இளையராஜாவுக்கும் தெரியும். 'பூவே இளைய பூவே' பாடலின் இன்டர்லூடில் இளையராஜா தனது ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பார், சரணம் வந்ததும் எல்லாவற்றையும் முடிப்பார், வாசுதேவனின் குரல் மட்டும் மேலோங்கும்.

'குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

விழியிரண்டு கடலானதே

எனது மனம் படகானதே…'

என அந்த வரிகளில் அவர் குரலுக்காகவே உருகியவர்கள் பலர்.

மலேசியா வாசுதேவன் என்றாலே, மாரியம்மா மாரியம்மா, தண்ணி கருத்துருச்சு, காதல் வைபோகமே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற குத்துப்பாடல்கள், பக்திப் பாடல்கள்

பலருக்கு நியாபகம் வரலாம். ஆனால் பல உள்ளம் நெகிழவைக்கும் குரலை பல மெலடி பாடல்களுக்கும், சோகப்பாடல்களுக்கும் கொடுத்தவர்தான் வாசுதேவன்.

முதல் மரியாதை திரைப்படத்தில், 'பூங்காற்று திரும்புமா', 'வெட்டிவேரு வாசம்', தர்ம யுத்தம் திரைப்படத்தில் 'ஒரு தங்க ரத்தத்தில்', விடியும் வரை காத்திரு திரைப்படத்தின், 'நீங்காத எண்ணம் ஒன்று', தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின், 'தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி', நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தின், 'ஆயிரம் மலர்களே', கிழக்கே போகும் ரயிலின் 'கோவில் மணி ஓசை தன்னை' போன்ற பல உருகவைக்கும் பாடல்களை பாடியுள்ளார். அதில் அவர் குரலே ஓங்கி நிற்கும் என்பதுதான் தனிச்சிறப்பு.

1985இல் சின்ன வீடு என்ற பாக்யராஜ் திரைப்படத்திற்கும், முதல் மரியாதை திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே சிச்சுவேஷன், ஆனால் முற்றிலும் வேறு வேறு ஸீன். பாக்யராஜ் தன் மனைவியை விட்டு வேறு பெண் மீது மையல் கொள்வதையும், சிவாஜி பாடும் பாட்டிற்கு ராதா எசப்பாட்டு பாடும் முதல் பாடலும்தான் அது. இரண்டிற்கும் இசை அளவில் அவரால் முடிந்த வேறுபாட்டை இளையராஜா கொடுத்தார் ஆனால் இரண்டு பாடலுக்கும் அடிநாதம் 'என்டர் இன்டு தி நியூ லைஃப்' எனப்படும் ஒரு 200 வருட பழைய சிம்ஃபனி தான். இருவருமே புதிய ஒரு வாழ்க்கைக்குள் செல்வதால், 'ஏ குருவி, சிட்டுக்குருவி' பாடலிலும், 'சிட்டுக்குருவி வெட்கப்படுது' பாடலிலும் வேண்டுமென்றே பயன்படுத்தினார் இளையராஜா.

ஆனால் அந்த இரு பாடல்களும் ஒன்றென தெரியாததற்கு பெரும் காரணம் வாசுதேவனின் தனித்துவமான குரல், மற்றொன்றை எஸ்பிபி பாடினார். இந்த வேறுபாட்டை கொடுக்க அப்போது இளையராஜாவுக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு வாசுதேவன் தான்.

அந்த வேறுபாட்டை பெரிதும் ரசித்தவரும் கூட என்று சொல்லலாம். 'ஏ ராசாத்தி', என்ற பாடல் அந்த காலத்தில் கிட்டத்தட்ட ஒரு 'ஆக்கப்பெல்லா' தான். அவ்வளவு வித்யாசமாக வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. வாசுதேவன் அவரால் முடிந்த அளவிற்கு எல்லா கோணங்களையும் அந்த பாடலில் கொடுத்திருப்பார். அதே போல அவரது குரலின் முற்றிலும் வேறு கோணத்தை எடுத்தது 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல்'. கிட்டத்தட்ட மிமிக்ரி செய்து பாடியது போலவே இருக்கும், அந்த பாடலில் சப்பாணி கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தமான குரலை வேறு யாராலும் தந்திருக்க முடியாது. முக்கியமாக இரண்டு ஹீரோக்கள் இணைந்து பாடும் பாடல்களுக்கு பெரிதும் இளையராஜா விரும்புவது வாசுதேவனை தான்.என்னம்மா கண்ணு சவுக்யமா பாடலாகட்டும், தென்மதுரை வைகை நதி பாடலாகட்டும். ரஜினிக்கு எஸ்பிபி வாய்ஸ் என்றால், அடுத்து இருப்பவருக்கு மலேசியா வாசுதேவன் என்பது இளையராஜா வைத்திருந்த எழுதப்படாத விதி.

படித்ததில் பிடித்தது - - - - - - -

கவிஞர் வாலி நினைவுகள்!

 

கவிஞர் வாலி நினைவுகள்!

ஒருமுறை குறும்புக்கார நிருபர் வாலியிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

எதிரெதிரே சேரில் அமர்ந்திருந்தனர்

பேட்டி முடியும்போது,

"ஸார்...ரங்கராஜன்ங்கற பெயரே நல்லாத்தான இருக்கு....ஏன் வாலி னு மாத்திக்கிட்டீங்க?" என கேட்டார்.

வாலி: எனக்கு நேரா இருக்குறவங்களோட அறிவில் பாதி எனக்கு வந்துரும் னு தான்.

(ராமாயணத்தில் வாலிக்கு எதிர்நின்று போரிடுபவர்களின் பாதிபலம் வாலிக்கு வந்துவிடும். ராமனே அதனால்தான் மரத்தின் பின்புறமிருந்து அம்பெய்து கொன்றான்)

நிருபர் : அப்படி ஒண்ணும் உங்கள் அறிவு வளர்ந்தமாதிரி தெரியலையே...?

வாலி:என்ன செய்ய...எனக்கு எதிரே இருக்கறவங்களுக்கு அறிவே இல்லையோ என்னவோ?

நிருபர் எழுந்து ஓடியேவிட்டார்.

பன்முக திறமை கொண்ட நடிகை சாவித்திரி !

 

தமிழ் திரையுலகில் நடிகையர் திலகம் என்ற அந்தஸ்தை பெற்ற அற்புதமான அழகான நடிகை தான் நடிகையர் திலகம் சாவித்திரி.

பன்முக திறமை கொண்ட நடிகை சாவித்திரி தான் படங்களில் நடித்ததோடு நின்று விடாமல் படத் தயாரிப்பிலும் இயக்கத்திலும் அப்போதே கவனத்தை செலுத்திய நடிகை.

அந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததின் காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு பிராப்தம் என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கி நடித்தார்.

நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் இணைந்து நடித்த பாசமலர் திரைப்படம் திரை உலகில் அண்ணன் தங்கை பற்றிய உறவின் முக்கியத்துவத்தையும் பாசத்தையும் மக்களுக்கு பறைசாற்றியது.

மேலும் நடிகையர் திலகத்தை சாவித்திரி என்று அழைத்தவர்களை விட சிவாஜியின் தங்கை என்று நினைத்து வந்தவர்களே அதிகமான அதிகம் என்று கூறும் அளவுக்கு இந்த படம் இருவருக்கும் மிக நல்ல பெயரை பெற்று தந்தது.

1964 ஆம் ஆண்டு ‘மூக மனசுலு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார் சாவித்திரி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை “பிராப்தம்” என்ற பெயரில் தமிழில் தயாரித்து இயக்க முடிவு செய்தார் சாவித்திரி

ஆனால் சாவித்திரியின் கணவரான ஜெமினி கணேசனுக்கு இதில் விருப்பம் இல்லாமல் போனது.

இந்த நிகழ்வை குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியபோது “சாவித்திரி என்ற அற்புதமான நடிகையின் வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் வீச காரணமாக இருந்தது இருந்தது பிராப்தம் என்ற திரைப்படதான்” என இத்தகவலை பகிர்ந்து கொண்டார்.

ஒரு வேளை “பிராப்தம்” திரைப்படத்தை அவர் உருவாக்கவில்லை என்றால் சாவித்திரியின் வாழ்க்கையே வேறு மாதிரியாக இருந்துருக்குமோ?

971ல் வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நம்பியார், நாகேஷ் மற்றும் எஸ் வி ரங்கராவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் நல்ல பாடல்கள் இடம்பெற்றிருந்தது. சொந்தம் எப்போதும் தொடர்கதை தான், சந்தனத்திலே நல்ல வாசம் எடுத்து, நேத்து பறித்த ரோஜா போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்று இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

சாவித்திரியின் இரண்டாவது முறையாக தயாரித்து இயக்கிய இந்த திரைப்படம் 50 நாட்கள் வரை ஓடிய சுமாரான வெற்றி படமாக அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக நடிகை சாவித்திரி தன்னுடைய மூன்று சொந்த வீட்டை அடமானம் வைத்து படத்திற்காக செலவு செய்திருந்தார்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார் சாவித்திரி.

இந்த படம் தயாரிப்பதற்கு முன்னதாகவே ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் இந்த படத்தை எடுக்க வேண்டாம் எடுத்தால் இந்த படம் ஓடாது என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் அதையும் மீறி இந்த படத்தை சாவித்திரி தயாரித்து இயக்கினார். அதன் பின் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சாவித்திரியும் ஜெமினி கணேசனும் பிரிந்து விட்டனர்.

இறுதியாக நடிகை சாவித்திரி இயக்கிய குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்த படங்களாக அமைந்துவிட்டன. இதில் மனம் உடைந்து சாவித்திரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்த சாவித்திரிக்கு தன்னுடைய 45 வது வயதிலே நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார்.

ஒரு நாள் படப்பிடிப்பின் பொழுது திடீரென மயங்கி விழுந்த சாவித்திரி கோமாவிற்கு சென்றார். அடுத்து 19 மாதங்களுக்கு மேலாக கோமா எனும் ஆழ் மயக்கத்தில் இருந்த சாவித்திரி அதன் பின் குறைந்த வயதிலேயே மரணம் அடைந்து விட்டார்.

கடும் வார்த்தைகள் மனதை கண்டிப்பாக காயப்படுத்தும்! அப்துல் கலாம் !

 நமது அன்பு குடியரசு தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது....

இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,

அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.

நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...

ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :

" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....

" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..

களைத்துப் போய் இருப்பார் ...

ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...

ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...

இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....

நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...

அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..

“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...

ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...

எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...

ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..

இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ...

ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...👌👇📢👊

👉நேரம்

👉இறப்பு

👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை

👉பணம்

👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி

👉கல்வி

👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை

👉கடமை

👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு

👉வாயிலிருந்து சொல்

👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்

👉தந்தை

👉இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்

👉தந்தை

👉குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்சி-

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செல்வத்திலும் எளிமை

7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்.

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்

3) பிறருக்கு உதவுங்கள்

4) யாரையும் வெறுக்காதீர்கள்

5) சுறுசுறுப்பாக இருங்கள்

6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்

7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை

2) கவனி உன் செயல்களை

3) கவனி உன் எண்ணங்களை

4) கவனி உன் நடத்தையை

5) கவனி உன் இதயத்தை

6) கவனி உன் முதுகை

7) கவனி உன் வாழ்க்கையை..

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்....👌👆👊👊👊📢

மத வெறியை தவிர்ப்போம் ! மனித நேயம் காப்போம் !

 

எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அறைக்கு வெளியே பரபரப்பு நிலவியது.

எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.

1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.

உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.

ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,

இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...

அன்னை தெரசா !

எம்ஜிஆரைச் சுற்றியிருந்த

அதிகாரிகள் அனைவரும்

எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.,

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட,

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,

சிலுவை அணியாத கிறிஸ்துவன்,

திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா,

அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை தவிர்ப்போம்.

மனித நேயம் காப்போம்.

இளையராஜாவின் அறிமுகம் பற்றி மனநிறைவோடு ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் நாகூர் ஹனிபா.

 

1973 ஆம் வருடத்தின் ஒரு நாள்.

அதிகாலை ஆறு மணி.

எம் எல் ஏ ஹாஸ்டல் வாசலில் வாட்டமான முகத்துடன் நின்றார் ராசையா என்ற இளையராஜா.

மூடி இருக்கும் அந்த அறைக் கதவைத் தட்டுவதா, வேண்டாமா ?

எம்எல்ஏ ஹாஸ்டலின்

அந்த அறையில் தங்கி இருந்தவர் அப்போது எம் எல் சி ஆக இருந்த நாகூர் ஹனிபா.

சிறிது நேர தயக்கத்துக்கு பின் தைரியமாக அந்த அறையின் கதவைத் தட்டினார் இளையராஜா.

சற்று நேரத்தில் கதவு திறந்தது. "தம்பி நீங்க யாரு ?" என்று தாடியைத் தடவியபடியே கேட்டார் நாகூர் ஹனிபா .

"ஐயா, என் பேரு ராசைய்யா."

"என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க தம்பி ?"

பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் தான் ஒரு இசைக்குழு வைத்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இளையராஜா. "ஐயா, முகமது நபி பற்றி நீங்கள் பாடும் பாடல்களுக்கு நான் இசையமைக்க ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

உள்ளே அழைத்து அவரை உட்கார வைத்தார் நாகூர் ஹனீபா. "தம்பி, நான் பாடும் பாடல்களுக்கான இசை அமைப்பு ஏற்பாடுகளை எல்லாம் ஹெச் எம் வி நிறுவனத்தார்தான் செய்வார்கள். நீங்கள் அவர்களைக் கலந்து ஆலோசியுங்களேன்."

ராசையாவிடம் இருந்து உடனே பதில் வந்தது. "ஐயா, அவர்களிடம் பேசிவிட்டுத்தான் உங்களைப் பார்க்க வந்தேன் ஐயா."

இளையராஜாவின் வாட்டமான முகத்தை உற்றுக் கவனித்தார் நாகூர் ஹனிபா. ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை அவர் மீது வந்தது. "நாளைக்குக் காலைல வந்து என்னை பாருங்க தம்பி !"

அடுத்த நாள் நடந்த விஷயத்தை அப்படியே சொல்கிறார் நாகூர் ஹனிபா.

"வந்தார்.

அப்போது அவரிடம் நான் சொன்ன பாடல் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திரு நபியிடம் போய் சலாம் சொல்லு'

இந்தப் பாட்டுக்கு இசையமைக்க முடியுமா தம்பி ?"

அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தார் இளையராஜா. அறையின் ஓரத்தில் ஒரு ஆர்மோனியம் இருந்தது. அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

"எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அந்தத் தம்பி வாசித்த இசையை கேட்டபோது தென்றலே நேரில் வந்தது போல இருந்தது.

அந்தப் பையன்... இப்போது பையன் அல்ல மிகப் பெரிய மனிதர்... அவர் வாசித்த இசையை கேட்டு அசந்து போனேன். 'தம்பி, நீங்கள் மிக நன்றாக முன்னேறுவீர்கள். மிகப்பெரிய இடத்திற்கு வருவீர்கள்' என்று மனதார வாழ்த்தினேன். அவர் இசையமைத்த அந்த இசைத்தட்டு நன்றாக விற்பனையாகிற்று."

இளையராஜாவின் அறிமுகம் பற்றி மனநிறைவோடு ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் நாகூர் ஹனிபா.

'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு...'

இந்தப் பாடல் இன்னொரு செய்தியைக் கூட நமக்குச் சொல்கிறது.

மூடி இருக்கும் கதவை

எவன் ஒருவன் துணிந்து தட்டுகிறானோ,

அவன் முன்னேற்ற பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கிறான்.

வாழ்க்கையில் சந்தோஷம் தாங்காமல் நான் அழுதது அதுதான் முதல் முறை" என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து

Top Tucker Comedy Show | Episode 6 | Part 4 | Vivek | Meera | Kumari Muthu  | Pandu | Ramesh Khanna 

கட்டுப்படுத்த முடியாமல்

கண்ணீர் விட்டு அழுகிறார்

குமரி முத்து.

2016 ல் இறந்து விட்ட குமரி முத்து, எப்போதோ தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டி அது.

அதில் விவேக் பற்றியும் ஒரு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

குமரி முத்துவின் கடைசிப் பெண்ணுக்கு கல்யாணமாம்.

ஆனால் அப்போது அவர் கையில் போதுமான அளவு பணம் இல்லையாம்.

அந்த நேரத்தில் இலங்கையில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள்.

50 ஆயிரம் ரூபாய் தருவதாக பேசியிருக்கிறார்கள்.

சரி எனச் சொல்லி விட்டார் குமரி முத்து. அடுத்ததாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்ட கேள்வி: "விவேக்கையும் அழைத்து வர முடியுமா ?"

விவேக்கிடம் போயிருக்கிறார் குமரி முத்து. விஷயம் முழுவதையும் சொல்லி இருக்கிறார்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த விவேக், அதன்பின் கேட்டிருக்கிறார்.

"உங்களுக்கு ஐம்பதாயிரம் சரி. எனக்கு எவ்வளவு கொடுப்பார்கள்..?"

எப்படியாவது விவேக்கை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என நினைத்து, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து.

'அப்படியானால் சரி' என்று சம்மதித்தாராம் விவேக்.

நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. ஐம்பதாயிரம் ரூபாயை கொண்டு வந்து குமரிமுத்துவிடம் கொடுத்திருக்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

"விவேக் சார் எங்கே" என்று கேட்டிருக்கிறார்கள்.

விவேக் தங்கியிருந்த அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாராம் குமரிமுத்து.

பேசியபடியே இரண்டு லட்சம் ரூபாயை விவேக் கையில் கொடுத்து இருக்கிறார்கள்.

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட விவேக், சற்று தள்ளி நின்ற குமரிமுத்துவை அருகில் அழைத்தாராம்.

தன் கையிலிருந்த இரண்டு லட்ச ரூபாயை அப்படியே குமரி முத்துவின் கையில் கொடுத்துவிட்டாராம்.

எதுவும் புரியாமல் விவேக்கை பார்த்திருக்கிறார் குமரிமுத்து.

விவேக் புன்னகை மாறாமல் சொன்னாராம். "உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்தமுடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்களே, இதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்.

இதற்காகத்தான் நீங்கள் கேட்டவுடன் நான் இந்த நிகழ்ச்சிக்கே வர சம்மதித்தேன்."

"வாழ்க்கையில் சந்தோஷம் தாங்காமல் நான் அழுதது அதுதான் முதல் முறை" என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து.

சினிமாவில் மட்டுமல்ல.

நிஜ வாழ்க்கையிலும் தன்னை சுற்றி இருந்த எல்லோரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்து, ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டுப் போயிருக்கிறார் விவேக்.