Total Pageviews

Sunday, December 22, 2024

இளையராஜாவின் அறிமுகம் பற்றி மனநிறைவோடு ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் நாகூர் ஹனிபா.

 

1973 ஆம் வருடத்தின் ஒரு நாள்.

அதிகாலை ஆறு மணி.

எம் எல் ஏ ஹாஸ்டல் வாசலில் வாட்டமான முகத்துடன் நின்றார் ராசையா என்ற இளையராஜா.

மூடி இருக்கும் அந்த அறைக் கதவைத் தட்டுவதா, வேண்டாமா ?

எம்எல்ஏ ஹாஸ்டலின்

அந்த அறையில் தங்கி இருந்தவர் அப்போது எம் எல் சி ஆக இருந்த நாகூர் ஹனிபா.

சிறிது நேர தயக்கத்துக்கு பின் தைரியமாக அந்த அறையின் கதவைத் தட்டினார் இளையராஜா.

சற்று நேரத்தில் கதவு திறந்தது. "தம்பி நீங்க யாரு ?" என்று தாடியைத் தடவியபடியே கேட்டார் நாகூர் ஹனிபா .

"ஐயா, என் பேரு ராசைய்யா."

"என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க தம்பி ?"

பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் தான் ஒரு இசைக்குழு வைத்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இளையராஜா. "ஐயா, முகமது நபி பற்றி நீங்கள் பாடும் பாடல்களுக்கு நான் இசையமைக்க ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

உள்ளே அழைத்து அவரை உட்கார வைத்தார் நாகூர் ஹனீபா. "தம்பி, நான் பாடும் பாடல்களுக்கான இசை அமைப்பு ஏற்பாடுகளை எல்லாம் ஹெச் எம் வி நிறுவனத்தார்தான் செய்வார்கள். நீங்கள் அவர்களைக் கலந்து ஆலோசியுங்களேன்."

ராசையாவிடம் இருந்து உடனே பதில் வந்தது. "ஐயா, அவர்களிடம் பேசிவிட்டுத்தான் உங்களைப் பார்க்க வந்தேன் ஐயா."

இளையராஜாவின் வாட்டமான முகத்தை உற்றுக் கவனித்தார் நாகூர் ஹனிபா. ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை அவர் மீது வந்தது. "நாளைக்குக் காலைல வந்து என்னை பாருங்க தம்பி !"

அடுத்த நாள் நடந்த விஷயத்தை அப்படியே சொல்கிறார் நாகூர் ஹனிபா.

"வந்தார்.

அப்போது அவரிடம் நான் சொன்ன பாடல் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திரு நபியிடம் போய் சலாம் சொல்லு'

இந்தப் பாட்டுக்கு இசையமைக்க முடியுமா தம்பி ?"

அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தார் இளையராஜா. அறையின் ஓரத்தில் ஒரு ஆர்மோனியம் இருந்தது. அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

"எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அந்தத் தம்பி வாசித்த இசையை கேட்டபோது தென்றலே நேரில் வந்தது போல இருந்தது.

அந்தப் பையன்... இப்போது பையன் அல்ல மிகப் பெரிய மனிதர்... அவர் வாசித்த இசையை கேட்டு அசந்து போனேன். 'தம்பி, நீங்கள் மிக நன்றாக முன்னேறுவீர்கள். மிகப்பெரிய இடத்திற்கு வருவீர்கள்' என்று மனதார வாழ்த்தினேன். அவர் இசையமைத்த அந்த இசைத்தட்டு நன்றாக விற்பனையாகிற்று."

இளையராஜாவின் அறிமுகம் பற்றி மனநிறைவோடு ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் நாகூர் ஹனிபா.

'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு...'

இந்தப் பாடல் இன்னொரு செய்தியைக் கூட நமக்குச் சொல்கிறது.

மூடி இருக்கும் கதவை

எவன் ஒருவன் துணிந்து தட்டுகிறானோ,

அவன் முன்னேற்ற பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கிறான்.

No comments:

Post a Comment