- முதன் முதலில் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்த போது விரும்பி படித்த நாவல்கள் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்களின் புதினங்கள்தான்.
- திருமதி ரமணிச்சந்திரன் அவர்கள் 1938 July 10 திருச்செந்தூரில் பிறந்தார்.
- ரமணிசந்திரன் முதன்முதலாக 1964 ஆம் ஆண்டில் ராணி இதழில் சிறுகதை எழுதினார். பின்னர் தினத்தந்தி இதழில் நெடுங்கதைகள் எழுதினார்.
- இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’.
- ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய "வண்ணவிழிப் பார்வையிலே" என்ற நெடுங்கதைக்காக 2003 ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது.
- அப்பரிசிற்குரிய வெள்ளிப்பட்டயம், 50000 உருபாய்க்கான பொற்கிழி, பொன்னாடை ஆகியவற்றை நீதிபதி கி.கோவிந்தராசன் 2003 செப்டம்பர் 28ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் வழங்கினார்.
- திருமதி ரமணிச்சந்திரன் அவர்களின் பால் நிலா நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றதாகும்.
- இந்த நாவலை நான் பல முறை வாசித்திருக்கிறேன்.
- ரமணிச்சந்திரன் எழுதிய மயங்குகிறாள் ஒரு மாது, மானே மானே, கண்ணே கண்மணியே,அவரது 100 - வது நாவலான என்ன என்ன ஆசைகளோ என அனைத்தும் அருமையாக இருக்கும்.
- இவரது நாவல்களின் வழியாகவே நான் முதன் முதலில் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அறிந்தேன்.
- ஆம் இவரது நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு இடத்தில் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி குறிப்பிட்டிருப்பபார்.
- அதனை படிக்கும் போது அந்த நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது என அறிய விரும்பியே பொன்னியின் செல்வனை ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கி முதன் முதல் வாசித்தேன்.
- மறக்க முடியா ஒரு அனுபவம். அதன் பின் இன்று வரை எண்ணிலடங்கா முறை வாசித்து விட்டேன்.
- இப்படி ஒரு அற்புதமான நாவலை எனக்கு அறிமுகப்படுத்தி சோழ வரலாறு பற்றிய தேடுதலை எனக்குள் விதைத்த திருமதி.ரமணிச்சந்திரன் அவர்களை வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது.
ஒரு வாசகி ரமணிச்சந்திரன் பற்றி பகிர்ந்தது:
- மயங்குகிறாள் ஒரு மாது என்ற கதையில், அப்பா சொல்லும் காந்தியக் கொள்கை போலே உலகம் இருக்கும் என எண்ணி இந்தச் சமூகத்தை நம்பும் பெண் கடைசியாக உண்மையை உணர்ந்து உடையும்போது சமூகத்தின் உண்மை முகத்தை கிழித்திருப்பார். ’
- வீட்டை விட்டு பெண் வெளியேறினாலே அவளுக்கான மரியாதை போனதாகிறது... அதில் குடும்பத்தையும் இந்த சமூகம் சேர்த்தே சிதைக்கிறது’ என்பதை மிகத் தெளிவாக கதைபடுத்தியிருப்பார்.
- எந்த அளவுகோலில் இந்த சமூகம் அளக்கிறது என்பது இன்று வரையுமே தெரியாத ஒன்று.
- அவரின் கதைகளில் சாதி இருக்காது... மதம் இருக்காது... அரசியல் கருத்துகளோ காட்சிகளோ இருக்காது. காதலும் காதல் சார்ந்த பிரச்னைகளும் குடும்பங்களில் இன்னும் நிலவும் ஏற்ற இறக்கங்களும் மனித மனத்தின் போக்குகளும் அதற்கான தூண்டுகோல்களும்தாம் இருக்கும்.
- தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். ஆனால், அது எப்படி தனிமனிதனைப் பாதிக்கிறது என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும் மற்ற இடங்களில் தூவிவிட்டும் சென்றிருப்பார் ரமணிசந்திரன்.
- எவ்வளவு கோபம் இருந்தாலும் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் கையில் எடுப்பது ரமணிசந்திரன் கதைகளைத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் இங்கு இருக்க மாட்டோம்.
- கதையோடு பயணித்து கொண்டிருப்போம். சமூகத்தைப் பற்றி, குடும்பச் சூழலில் இருக்கும் சில சிக்கல்களைப் பற்றி எல்லாம் புரிதல் வந்தது என்றால் அதற்கு அவர்தான் காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.
- நல்ல சமூக சிந்தனையும் நிறைய புத்தகங்கள் வாசிப்பதற்கான ஊக்கத்தையும் அவரிடமிருந்தே பெற்றேன். இப்படி என் வாழ்க்கையில் மாற்றத்துக்கான விதையானது கிழக்கு வெளுத்த போதே விதைக்கப்பட்டு விட்டது.
- ஆம். மாற்றங்களே மாறாதது!
- உங்களுக்குள்ளும் திருமதி.ரமணிச்சந்திரன் அவர்களை பற்றிய தேடுதல் இருந்தால் இங்கு பகிருங்களேன்.