Total Pageviews

Friday, March 20, 2026

காஜா ஷெரீப் என்று ஒரு நடிகர் இருந்தாரே, அவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?


  1. காஜா ஷெரீஃப் இவர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சார்ந்தவர்.
  2. இராமநாதபுரம் மாவட்டம் கமல், விக்ரம், ராஜ்கிரண் போன்ற முன்னணி கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அது போல இவரும் சினிமாவில் பேசப்பட்ட வேண்டிய கலைஞராவார்.
  3. ஏனென்றால் 80களில் இருந்து 90கள் வரை அப்போதைய விஜய் சேதுபதி போல காஜா ஷெரீஃப் நடிக்காத படங்களே இல்லை எனலாம்.
  4. துண்டு துக்கடா வேடங்கள் என்றாலும் சரி, கனமான கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, நகைச்சுவை பாத்திரங்கள் என்றாலும் சரி இவர் நடிக்க தவறியதே இல்லை.
  5. எல்லா கதாபாத்திரங்களிலும் நன்றாக நடிக்க கூடியவர் ஏனென்றால் இவர் படித்தது பாக்யராஜ் ஸ்கூலில்.
  6. ஸ்கூல் என்றால் பாக்யராஜ் சொல்லி கொடுத்த திரைப்பாடம் அதை குறிப்பிட்டேன்.
  7. பாக்யராஜின் பட்டறையில் இவர் வளர்ந்ததால் இவர் நடிப்பில் பிய்த்து உதறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
  8. இயக்குனர் பாரதிராஜா இயக்கி பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் படத்தில்தான் காஜா ஷெரிஃப் அறிமுகமானார்.
  9. தொடர்ந்து பாக்யராஜின் படங்களான சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது மனதை கவர்ந்தார் யார் இந்த சிறுவன் இப்படி நடிக்கிறானே என ஆச்சரியப்பட வைத்தார்.
  10. குறிப்பாக அந்த ஏழு நாட்கள் படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படம் அந்த படத்தில் ஆஸானே ஆஸானே என படம் முழுவதும் பாக்யராஜை அழைத்து கலகலப்பூட்டி இருப்பார்.
  11. ஏடா கோபி என பாக்யராஜ் அழைப்பதும் ஆசானே என காஜா ஷெரிஃப் அழைப்பதும் இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அப்போ செம ஒர்க் அவுட் என்றுதான் சொல்ல வேண்டும்.
  12. பாக்யராஜ் ஆடையை எல்லாம் கழற்றி காஜா ஷெரிஃபை பார்த்து கொள்ள சொல்லி குளித்து கொண்டிருக்க, வெளியில் எங்கோ சாவு ஊர்வலம் தாரை தப்பட்டை அடித்து செல்ல அந்த தாரை தப்பட்டை சத்தம் கேட்டு நிர்வாணமாக குளித்து கொண்டிருந்த பாக்யராஜை விட்டு விட்டு காஜா ஷெரிஃப் டான்ஸ் ஆடிக்கொண்டே செல்ல பாக்யராஜ் டிரஸ் இல்லாமல் செய்வதறியாது தவிப்பார்.
  13. ஒரு வழியாக காஜா ஷெரிஃப்ஃபை பார்த்த உடன் அடியை போட்டு வெளுத்து விடுவார்.
  14. இதில் எல்லாம் காஜா ஷெரிஃப் குறும்புத்தனத்தின் உச்சிக்கே சென்று இருப்பார் என சொல்லலாம்.
  15. அது போல் பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் டெய்லரான கவுண்டமணியிடம் காஜா போடும் பையனாக சிறுவயதிலேயே சிகரெட் எல்லாம் அடிக்கும் குறும்புத்தன பையனாக நடித்திருப்பார்.
  16. கவுண்டமணி கடையில் உட்கார்ந்து ஏதாவது தைத்துக்கொண்டே பேச அதை எல்லாம் மனதிற்குள் முனகிக்கொண்டே நக்கல் செய்வதும் கவுண்டமணியிடம் அடிவாங்குவதும் காஜா ஷெரிஃபின் வேலை.
  17. கவுண்டமணியிடம் கோவித்து வேலையை விட்டு செல்லும் காஜா ஷெரிஃப் அவர் கடைக்கு முன்பே நின்று சுருள் சுருளாக புகை விட்டு சிகரெட் குடிப்பதும் அதை பார்த்து கவுண்டமணி அதிர்ச்சியடைவதும் செம ரகளையான காட்சியாக இருக்கும்.
  18. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, இன்னும் எண்ணற்ற முன்னணி நடிகர்களுடனும் காஜா ஷெரிஃப் நடித்து கலக்கி இருப்பார்.
  19. கமல் நடித்த காதல் பரிசு படத்தில் கமலுக்கு சால்ட் கோட்ட சிலுவை என்ற கதாபாத்திரம் அதில் கமல் உடன் வரும் குப்பத்து பையனாக காஜா ஷெரிஃப் கலகலப்பூட்டி இருப்பார்.
  20. ரஜினி நடித்த காளி, நான் சிகப்பு மனிதன் இன்னும் எண்ணற்ற படங்களில் ரஜினியுடன் காஜா ஷெரிஃப் நடித்துள்ளார்.
  21. மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தில் சிறு குழந்தை நட்சத்திரமாக அருமையான வேடம் இவருக்கு.இவரை பார்த்த உடன் ஏதோ சாதாரண நடிகர் என்றே பலரும் நினைப்பர்.
  22. ஆனால் இவர் அந்த நாளைய லெஜண்ட் இயக்குனர்களின் படங்களில் எல்லாம் நடித்திருப்பார்.
  23. பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ், பாலு மகேந்திரா, எஸ்.ஏ சந்திரசேகர், விசு என முன்னணி இயக்குனர்கள் படங்களில் எல்லாம் காஜா ஷெரிஃப்க்கு ஒரு முக்கிய வேடம் கண்டிப்பாய் உண்டு.
  24. பல படங்களில் ஹீரோக்களின் சிறு வயது கதாபாத்திரத்தில் காஜா ஷெரிஃப்தான் நடித்திருப்பார்.
  25. காஜா ஷெரிஃப் நடிப்பில் சிறப்பான பல படங்களை கூறிக்கொண்டே இருக்கலாம். இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்த படம் சம்சாரம் அது மின்சாரம்.
  26. இப்படத்தில் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ண முடியாமல் தவிக்கும் வேடத்தில் காமெடியாக கலக்கி இருப்பார்.
  27. முதலில் காமெடியாக வரும் ஃபோர்ஷன்ஸ் எல்லாம் அவர் பாஸ் செய்த பிறகு சீரியஸாக வரும். சீரியஸான அந்த காட்சிகளிலும் அழகாக நடித்திருப்பார்.
  28. அஜீத் நடித்த சிட்டிஸன் படத்தில் ஒரு வெயிட் ஆன ரோலில் நடித்திருப்பார் அதன் பிறகு இவர் சொல்லிக் கொள்ளும் படி சினிமாக்களில் வரவில்லை என சொல்லலாம்.
  29. சரத்குமார் நடித்த 2006ல் வந்த தலைமகன் படத்துக்கு பிறகு இவர் சுத்தமாக நடிக்கவில்லை.
  30. 90களின் ஆரம்பத்திலேயே அப்போதைய சிறு வேட நடிகர்களான உசிலைமணி, ஓமக்குச்சி, கிங்காங், தவக்களை இது போல சிறு சிறு காமெடி நடிகர்களை வைத்து பல கிராம கோவில் திருவிழாக்கள், கிராம முளைப்பாரி திருவிழா, கோவில் கொடை விழாக்கள், தீ மிதி திருவிழா, சந்தனக்கூடு திருவிழா என பல திருவிழாக்களில் சின்ன சின்ன காமெடி நடிகர்களை ஒன்றினைத்து நட்சத்திர இரவு என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்.

ஆனால் தற்போது இந்த ஹாஜா ஷெரீப் எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை . இப்போது அவர் மலேசிய, துபாய், கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இதில் தமிழ் நடிகர், நடிகைகளை அங்கு அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும், ஏற்பாட்டாளாராக பணியாற்றி வருகிறார்.

Tuesday, March 17, 2026

கவியரசர் கண்ணதாசனின் வாராயோ தோழி வாராயோ !

 சென்சார் போர்டையே திணறடித்த கவிஞரின் வரிகள்…!


தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.
 
பாசமலர். 

இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

முதல் இரவுக்கு முன்ப முன் ஒரு தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார். 

இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது.

Friday, March 6, 2026

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!
 

வரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!

"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்!

அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!

நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!

"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..!

ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி "ஐயர்" என்பவர் தலைமை தாங்கியிருந்தார்... முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பார்த்து கொண்டிருந்தார்..!

அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் சத்தமாக.

அதேபோல, கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, "பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே... நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே..." என்று ஆரம்பித்தார்.

அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, 'அய்யா... கம்பர் நாடாரு இல்ல..' என்றார்.

'நாடார் இல்லயா... நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...'

'அய்யா... அவரு முதலியாரும் இல்ல...' என்றார்.

'முதலியாரும் இல்லயா சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...'

'அய்யா... அவரு அய்யரும் இல்ல...'

'என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா... அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா... அப்ப ஜாதி கிடையாதா... சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே..." என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!

இப்படி எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியாலும் பேரன்பாலும் பெருங்கருணையாலும் நிறைந்தது..!

"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.

பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன.

ராதாவின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின.. அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று விழுந்தன..!!

சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா..!

திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது.. அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!

ஸ்ரீநிவாஸ்.....

நடிகர் சசிகுமார் !

 

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.

நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Saturday, February 28, 2026

ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

 

2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, போக்கிரி ராஜா, பில்லா, மிஸ்டர் பாரத், ப்ரியா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவருடன் தொடர்ந்து சர்ச்கைள் மற்றும் பொய்யான தகவல்களும் பரவ தொடங்கியது.அந்த வகையில் 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, அம்ரீஷ் ஆகியோர் நடிப்பில வெளியான பிரியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று  ஓடிக்கொண்டிருக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள், ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டார். அவர் பைத்தியம் அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பரப்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த நிகழ்வுகள் குறித்தும், எம்.ஜி.ஆர் தன்னிடம் நலம் விசாரித்தது குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில், பணம் கொடுத்தே சிவந்த கை எம்.ஜி.ஆர், அவர் எப்போதே எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார் என்பது தெரியாது. ஏனென்றால் விஜயா ஹாஸ்பிடல் வந்து அட்மிட்டாயிருக்கேன்.

நர்வஸ் பிரேக்டாம். எம்.ஜி.ஆர் அவர்கள் வாரத்திற்கு இருமுறை போன் பண்ணி எப்படியிருக்கார் என்று விசாரிப்பார். அங்கே இரண்டு மாதம் சிகிச்சை எடுத்து நான் குணமான பிறகும், என்னை வெளியே விடடாமல் அப்படியே உட்கார வச்சிட்டாங்க. ஏனென்றால் சி.எம். ஆபிஸில் இருந்து ஒரு போன் வருகிறது. நான் டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு அவருக்கிட்ட சொல்லிவிட்டு தான் போகனும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் எனக்கு போன் செய்தார். எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கலா? நான் டெல்லி போய்ட்டு இருக்கேன். வந்தவுடன் வந்து என்ன பாருங்க என்று சொன்னார்.

அதன்படி அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது என்கிட்ட சொன்னாங்க. பார்ப்பா தம்பி ஒரு நடிகனுக்கு உடம்புதான் மூலதனம். அந்த உடம்பை ஜாக்கர்த்தியா பாத்துக்கொணும். ஸ்ட்ண்ட் பண்றேனு சொல்லி ரிஸ்க் எடுக்காதே. ஸ்டெண்ட் பண்ணதற்கு வேற ஆளங்க இருக்காங்க என்று அறிவுரை கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

செம்மீன் ஷீலா !

 

17 வயதில் அறிமுகம்; ஒரே நடிகருடன் 107 படங்கள் நடித்து சாதனை: 2 முதல்வர்களுடன் நடித்தவர் இந்த நடிகை!

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது 17 வயதில் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 480 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஒருவர், 2 மாநில முதல்வர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் செம்மீன் ஷீலா.

1945-ம் ஆண்டு, கேரளாவில் பிறந்த இவர், தனது 17 வயதில் 1962-ம் ஆண்டு, பாக்யசித்தகம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதே ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில் வெளியான பாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா, அடுத்து எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்திருந்தார். மேலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

1995-ம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் நடித்திருந்த ஷீலா 10 வருட இடைவெளிக்கு பிறகு 2005-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தில், பிரபுவின் அத்தை அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகர் பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த ஷீலா, இன்றுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்துள்ளார்.

அதேபோல் தமிழில் எம்.ஜி.ஆருடன் நடித்த ஷீலா, தெலுங்கில் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவருமே பின்னாளில், முதல்வர்களாக முத்திரை பதித்தனர். 1966-ம் ஆண்டு மலையாளத்தில் சத்யன் நடிப்பில் வெளியான செம்மீன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அன்று முதல் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்ட இவர், அழகிலும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர், நாவல் ஆசிரியர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓவியர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய நடிகை செம்மீன் ஷீலா, காதலிக்க நேரமில்லை பட நடிகர் ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜார்ஜ் விஷ்ணு என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜார்ஜ் விஷ்ணு, கடைசியாக சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 80 வயதை கடந்துள்ள நடிகை ஷீலா, கடைசியாக மலையாளத்தில் ‘அனுராகம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். யக்ஷகானம், சிகரங்கள் என இரு படங்களை இயக்கியுள்ள ஷீலா, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விஷ்ணு தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழச்சி கயல்விழி

Wednesday, February 25, 2026

சுருளி ராஜன் !

 படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எம்ஜிஆர் ரஜினியை விட படு பிசியான நடிகர்.. 1 ஆண்டில் 50 படம்!! இந்த பழக்கத்தால் பறிபோன உயிர்..
 
சினிமாவில் சிலரது குரலும், அவர்களது உடல்மொழியும் தனித்துவமானது. அதை பிரதியெடுக்க முயற்சித்தாலும், அந்த நேர்த்தியை வார்த்தெடுக்க வாய்ப்பில்லை. அப்படியான கலைஞர்கள் காலம் கடந்து வாழ்பவர்கள். அப்படி ஒருவர் தான் மறைந்த நடிகர் சுருளி ராஜன். ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து கரியரின் உச்சத்தில் இருந்தவர். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் காத்திருந்த காலம் இருந்தது.
 
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி ராஜனின் பெற்றோர் சிறு வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் தனது அண்ணன் பராமரிப்பிலேயே வளர்ந்தார். தொடக்கத்தில் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தவர், சினிமா கனவை எட்டிப்பிடிக்க சென்னை வந்தார். திமுகவின் தேர்தல் நிதியில் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வசனம் எழுதிய ‘காகிதப் பூ’ என்ற நாடகத்தில் நடிக்க சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
 
இந்த நாடகம் வெற்றிபெற்றதால் சுருளி ராஜனுக்கான சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ‘காகித பூ’ நாடகத்தை பார்த்த நடிகர் ஜெய்சங்கர், அவர் நடிப்பில் 1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.அடுத்து ‘அன்று கண்ட முகம்’ படத்தில் நடித்தார். 
 
ஜெய்சங்கர் - சுருளிராஜன் இடையிலான பிணைப்பு அதிகரித்ததால், அடுத்தடுத்து ஜெய் சங்கர் நடித்த ‘காதல் படுத்தும் பாடு’, ‘உயிர் மேல் ஆசை’ ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் ‘தண்ணீர் திருவிழா’, சிவாஜியுடன் ‘அஞ்சல் பெட்டி 520’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 
 
தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, எல்லாமே உன் கைராசி, ஜானி, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு மட்டும் 50 படங்கள் நடித்து சாதனை படைத்தார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சுருளி ராஜன் நடித்துள்ளார்கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு விஜயகாந்தின் ‘ஏமாறாதே ஏமாறாதே’ திரைப்படம் தான் சுருளி ராஜன் நடிப்பில் வெளியான கடைசி படம்.
 
அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையானதால் சுருளிராஜனின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து அனைவரும் சிரிக்க வைத்த சுருளி ராஜன் கடந்த 1980-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு பிறகும் பல திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.