கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது சிவாஜி கணேசன் ஒரு தலைமுறை முன்னதாகத் தோன்றி விட்டாரோ என்கிற வருத்தம் எனக்கு அவ்வப்போது எழும்.
முதல் மரியாதை, தேவர் மகன் மாதிரி படங்களில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது, அடடா, இவர் இந்தத் தலைமுறையில் தோன்றியிருந்தால் இன்னும் பன்மடங்கு புகழ் அடைந்திருப்பாரோ என்று தோன்றும்.
சிவாஜிக்கு முன்னரே தமிழ் சினிமா உலகம் இருந்திருந்தாலும் அவர் தமிழ் சினிமாவின் ஒரு டர்னிங் பாயிண்ட் என்பதில் சந்தேகமில்லை. சிவாஜிக்கு முன்னால் வந்த படங்களில் வசனம்தான் ஹீரோவாக இருந்தது. எழுதிக் கொடுத்த வசனத்தைத் தடங்கல் இல்லாமல் பேசி விட்டாலே அது போதுமான நடிப்பாக இருந்தது.
முகபாவம், கண்கள், குரலின் ஏற்ற இறக்கங்கள், , நடக்கிற நடை இவை எல்லாமே ஒரு கதாபாத்திரத்துக்கு முக்கியம் என்பதை முதலில் தமிழ் சினிமா உலகுக்குச் சொன்னவர்.
‘நா யாருடா கதையிலே? போஸ்ட் மாஸ்டரா? ஏழையா மிடில் கிளாஸா? குடும்பம் திருப்தியா இருக்கா? போஸ்ட் மாஸ்டர் வேலையை பிடிச்சி பண்றேனா வேறே வழியில்லையேன்னு பண்றேனா? கோபக்காரனா, அவசரக்காரனா, முட்டாளா, அமைதியானவனா? அடுத்தவங்க கிண்டல் பண்ணா எப்படி ரியாக்ட் பண்ணணும், பாராட்டினா எப்படி ரியாக்ட் பண்ணணும், பாசமா இருந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னு எல்லாம் இதை வச்சித்தாண்டா முடிவு பண்ணணும்’ என்று விவரமாகப் பாத்திரத்தைக் கேட்டுக் கொள்வார் என எழுத்தாளர், டைரக்டர் பரத் என்கிற சேதுராமன் சொல்வார்.
சிட் ஃபீல்ட் எழுதிய திரைக்கதைப் புஸ்தகத்தில் கேரக்டர்களின் பயோ டேட்டா என்று ஒன்று மெய்ண்ட்டெய்ன் பண்ண வேண்டியதன் அவசியத்தைச் சொல்வார். அதன் பிரகாரம்தான் ரியாக்ஷன்களும் வசனங்களும் அமைக்கப்பட வேண்டும் என்பார். இதையெல்லாம் சிவாஜி படித்திருக்க வாய்ப்பே இல்லை!
சிவாஜியிடம் அடுத்தடுத்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியது இதுதான். கேரக்டரைப் புரிந்து கொள்ளுங்கள். நடிகன் தெரியக் கூடாது, கேரக்டர்தான் தெரிய வேண்டும்.
முகநூல் பதிவு-பிரசாந்த் 🥀 🌹