அந்த காலத்தில் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எனவே அந்த இலக்கணத்தின் படி, தனது முக பாவங்களை, உணர்ச்சிகளை சினிமாவிலும் மிகையாக கொட்டித் தீர்க்கும் பழக்கம் அவர்களிடம் இயல்பாக படிந்திருந்தது. அவ்வகையான நடிப்பு தான் 'சிறந்தது' என்று கருதப்பட்ட காலமாகவும் அது இருந்தது.
ஆனால், தனது அடக்கமான, மிக இயல்பான நடிப்பின் மூலம் ஒரு புது இலக்கணத்தை ஏற்படுத்தியவர் முத்துராமன் என்றால் அது மிகையாகாது. 'Subtle acting' என்னும் பாணியை முத்துராமனிடம் அதிகம் காண முடியும். அது மிகவும் உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தாலும் சரி, அதிகம் கொட்டி விடாமல், தேவைக்கேற்ற அளவான உணர்ச்சியை மட்டும் வெளிக்காட்டி நடிப்பதில் முத்துராமன் தனித்துவம் கொண்டவராக இருந்தார்.
'நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்' என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் இரண்டு ஹீரோக்களில் ஒருவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதை என்று பல்வேறு பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'காதலிக்க நேரமில்லை', 'சர்வர் சுந்தரம்' 'பாமா விஜயம்', 'சூர்யகாந்தி', 'எதிர் நீச்சல்' போன்ற திரைப்படங்களில் கவனத்திற்கு உரிய பாத்திரங்களில் நடித்தார். தெளிவான உச்சரிப்பு, அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு, வசீகரமான தோற்றம் போன்ற காரணங்களினால் தனித்துத் தென்பட்டார்.
ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற 'சாமானியர்களின் நாயகர்களாக' திகழ்பவர்களின் பலமே அவர்களின் இயல்பான நடிப்புதான். ஹீரோவிற்கான பிம்ப சிலுவைகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு வேடத்திலும் அவர்களால் இயல்பாக உள்நுழைந்து விட முடியும். பொதுவெளியிலும் இவர்கள் செயற்கையாக எவ்வித பாவனைகளையும் செய்ய வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இல்லை. இது போன்ற நடிகர்கள், சினிமாவை தங்களுக்கான முதலீடாக மாற்றிக் கொள்ளாமல் நடிப்பை மட்டுமே பிரதானமாகவும் தொழிலாகவும் வைத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள். சினிமாவின் மூலம் கிடைக்கும் புகழ், செல்வாக்கு போன்றவற்றை மற்றவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ள முயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்!!
No comments:
Post a Comment