2 நிமிஷ சீனை கட் பண்ணுனதால என் மரியாதையே போச்சு.. நான் அவ்வளவு அசிங்கப்பட்டேன்" உருகிய தேவா..
தேனிசை தென்றல் தேவா, தான் இசையமைத்த படத்தில் 2 நிமிட காட்சியை கட் செய்ததால் தனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்து பிரபலமானவர் தேனிசைத் தென்றல் தேவா. அதிகமாக தமிழ் சினிமாவிற்கு இவர் இசையமைத்திருந்தாலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இவர் 36 ஆண்டுகளுக்கு மேல் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சிறந்த பாடகரும் கூட.
வடசென்னையின் புகழ்பெற்ற கானா பாடல்களை அதிகளவில் தமிழ் சினிமாவில் வைத்து கானா பாடல்களை வெளியுலகம் அறியச்செய்தவர். சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசின் விருது பெற்றது மட்டுமின்றி பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான இவர், தன் சினிமா வாழ்க்கையில் 2 நிமிட காட்சியை தூக்கியதால் சந்தித்த அவமானங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.
சூரியன் படத்திற்கு இசை
எஸ் எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு தேவா அளித்த பேட்டியில், தான் இசையமைத்த சூரியன் படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அந்தப் படத்தில் இன்டெலிஜென்ஸ் செக்யூரிட்டி ஆபிசராக இருக்கும் சரத்குமார், மொட்டையடித்துக் கொண்டு தலைமறைவாக இருக்க காட்டுப் பகுதிக்குள் உள்ள குடியிருப்புக்குள் வருகிறார்.
அங்கு மனோரமாவின் உதவியுடன் சின்னச் சின்ன வேலை செய்து வரும் சரத்குமாரை ரோஜா காதலிப்பார். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் கல்யாணத்தில் முடியும். இவர்களுக்கு முதலிரவு நடக்கும் சமயத்தில் ஒரு பாட்டிற்கு இசையமைக்குமாறு கூறினர்.
பாடலுக்கான சீன்
அதற்கான சீனை என்னிடம் விளக்குமாறு கூறியபோது, முதலிரவு சமயத்தில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சரத்குமார் டிரான்சிஸ்டரில் பாடல் கேட்டுக் கொண்டிருப்பார். அதில் காக்க காக்க கனகவேல் காக்க என கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இது சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்.
இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கும் போது, வீட்டின் உள்ளே இருந்து வந்த ரோஜா, என்னைய்யா நீ திண்ணையில உக்கார்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டுட்டு இருக்க.. உள்ள வாய்யா நான் பாடுறேன் கந்த சஷ்டி கவசம் என கையை பிடித்து இழுக்கும் படி சீன்.
18 வயசு இளமொட்டு மனசு
அதனால், அந்த கந்த சஷ்டி கவசத்தில் 2 வரிகளை பாட்டில் வைத்து இசையமைக்க வேண்டும் என என்னிடம் கேட்டனர். இதனால், "நான் 18 வயசு இளமொட்டு மனசு"ன்னு 2 வரி மட்டும் கந்த சஷ்டி கவசம் பாட்டின் ராகத்தில் பாடலை கொண்டுவந்து பின், இசையை மாற்றி விடுங்கள் என என்னிடம் கூறினர்.
கட் பண்ணிய எடிட்டர்
எனவே, நானும் அதே ராகத்தில் இசையமைத்தேன். ஆனால், படம் ரிலீஸ் ஆகும் போது, படத்தின் நீளம் நிறைய இருப்பதாகக் கூறி ரோஜோ, சரத்குமாரிடம் பேசும் வசனத்தை தூக்கி விட்டனர்.
இதனால், படம் பார்ப்பவர்களுக்கு அங்கு ஏன் கந்த சஷ்டி ராகத்தில் பாடல் இருக்கிறது என்பதே தெரியவில்லை. அப்போது பலரும் என்னை திட்டினர். பலரும் பக்தி பாடலை இப்படி பயன்படுத்தி இருக்கிறீர்கள் என மிகவும் திட்டினர்.
என் மரியாதையே போச்சு
அதுமட்டுமின்றி, நான் பாட்டின் இசையைத் திருடி பாடல் அமைத்ததாக பல விமர்சனங்கள், அவமரியாதைகள் எழுந்தது. அந்தப் படத்திற்கு பிறகு என் சினிமா வாழ்க்கையில் சில சிக்கல்கள் வந்தது எனக் கூறியிருப்பார்.
இந்த 2 நிமிட காட்சியை படத்திலிருந்து எடுக்காமல் இருந்திருந்தால், என் மீது இவ்வளவு கோவம் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்திருந்தார்.
தேன் மொழி
No comments:
Post a Comment