Total Pageviews

Friday, September 11, 2026

“மாடி வீட்டு ஏழை”


இல்லைங்க. நடிகர் சந்திரபாபு எம்ஜிஆரால் ஏமாற்றப்படவில்லை. சந்திரபாபு எம்ஜிஆரை நாயகனாக வைத்து “மாடி வீட்டு ஏழை” என்ற படத்தை தொடங்கினார்.

படப்பிடிப்பு தொடங்கியது: 1966 ஆம் ஆண்டு.

நாயகன்: எம்.ஜி.ஆர்.

நாயகி: சாவித்திரி

தயாரிப்பு மற்றும் இயக்கம்: ஜே.பி. சந்திரபாபு

இசை: எம். எஸ். விஸ்வநாதன்

படப்பிடிப்பு நடந்த இடம்: பானுமதியின் பரணி ஸ்டுடியோ.

ஆனால் படப்பிடிப்பு சுமார் 2 நாட்கள் மட்டுமே நடந்தது. பின்னர் எம்.ஜி.ஆரின் மேனேஜராக இருந்த எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணிக்கும் –சந்திரபாபு இடையிலான கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது.

இந்த கருத்து வேறுபாடு வரக்காரணம்

  1. MGR–சந்திரபாபு இயக்குநர் மோதல் — சந்திரபாபு மீண்டும் மீண்டும் ரீடேக் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினை.
  2. சாவித்திரியை மாற்ற வேண்டும் என்ற MGR-ன் கோரிக்கை — சந்திரபாபு ஏற்காததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.
  3. MGR-ன் கால்ஷீட் பிரச்சினை — இரண்டு நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் போனது.

1965–ல் எம்ஜிஆர் நடித்து 7 படங்களும் 1966ல் 9படங்களும் வெளிவந்தது. மாடிவீட்டுஏழை படத்திற்கு கால்ஷீட் கேட்கும் போது எம்ஜிஆர் கால்ஷீட் தரகாலதாமதமாகும் என்று தெரிவித்து பொறுமை காக்க நேரிடும் என்பதை தெரிவிக்கின்றார். மேலும் இந்த படத்திற்கு 6இலக்கத்தில் ஊதியம் கோட்கின்றார். அதற்கு சந்திரபாபு ஒத்துக்கொள்கின்றார்.

ஆனால், எம்ஜிஆர் படபிடிப்பிக்கு வரதாமதமானதால் அப்போது எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணியுடன் சந்திரபாபு தகராறு செய்ததால் ஏற்பட்ட மனவருத்தங்களே இப்படம் கைவிடப்படுவதற்கு காரணமாகியது.

இவ்வளவு நடந்தும், இதன் பிறகு 1966 பறக்கும் பாவை, 1968ல் கண்ணன் என் காதலன் மற்றும் 1969ல் அடிமைப்பெண் என்ற மூன்று படங்களில் நகச்சுவை வேடத்தில் சந்திரபாபு எம்ஜிஆருடன் நடக்கின்றார். இதில் அடிமைப்பெண் படம் எம்ஜிஆரின் சொந்த தயாரிப்புப் படமாகும்.

எம்ஜிஆர் சாவித்திரியுடன் சேர்ந்து நடித்த படங்கள் மூன்றுதான். அவை, 1957 - மகாதேவி,1964 - வேட்டைக்காரன மற்றும் 1965 - பரிசு.

1965 க்குப் பிறகு சாவித்திரியுடன் இணைந்து எம்ஜிஆர் நடிக்கவில்லை. ஓருவேளை எம்ஜிஆர் “மாடிவீட்டு ஏழை” படத்தில் சாவித்திரி வேண்டாம் என கூறியது உண்மையாகக் கூட இருந்திருக்கலாம்.

பிற்காலத்தில் சந்திரபாபு கடனில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எம்ஜிஆர் பணமாக உதவி செய்திருக்கின்றார். ஆனால், சந்திரபாபு அதிக போதையில் மூழ்கி தன்னைத்தானே அழித்துக்கொண்டார் என்றுதான் உணர்ந்து கொள்ள முடிகிறதே தவிர எம்ஜிஆரால் பழிவாங்கப்பட்டதாக நினைக்க ஆதாரம் இல்லை என்பதே உண்மையாகிறது.

Wednesday, September 9, 2026

ஓ.ஏ.கே.தேவர் !

 

இன்று தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத நடிகரான ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர், சுருக்கமாக ஓ.ஏ.கே.தேவர் என அழைக்கப்பட்ட பெரும் கலைஞரின் 52ஆம் நினைவு நாள். உடல் கட்டும், குரல் வலிமையும் ஒருங்கே கலந்தவர். இயல்பாகவே மல்யுத்தம், சிலம்பாட்டம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர், சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் குடும்ப கட்டுப்பாட்டால் தாமதமாகத் தான் மேடை நாடக உலகில் நுழைந்தார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய பின், பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரின் ஆதரவால் மேடை நாடகங்களில் அறிமுகமாகி, பின்னர் 1950-ஆம் ஆண்டு மாமன் மகள் படத்தின் மூலம் திரையுலகிற்குள் வந்தார்.

தூய தமிழ் உச்சரிப்பும், வலிமையான உரைநடையும் இவரை வரலாற்று, புராண, அரச மரபுக் கதாபாத்திரங்களுக்கு மிகச் சிறந்தவராக ஆக்கியது. மதுரை வீரன் படத்தில் திருமலை நாயக்கர், பூம்புகார் படத்தில் பாண்டிய மன்னன், கார்ணன் படத்தில் கனக மன்னன், திருவிளையாடல் படத்தில் தட்சன், சம்பூர்ண ராமாயணம் படத்தில் விபீஷணன் என பல புராண வேடங்களில் அவர் கலைப்பாடலைக் காட்டினார். மேலும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அதிமை பெண், மகாதேவி போன்ற புனைகதை, வரலாற்றுப் படங்களிலும் இவரின் பங்களிப்பு சிறப்பு பெற்றது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த போதெல்லாம் தனித்துவ குரலும் நடிப்பு வலிமையாலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஓமத்திராய் வேடம், படித்தால் மட்டும் போதுமா படத்தில் வழக்கறிஞர் வேடம் போன்றவை ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கின்றன.

வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம், புராணம் என எந்த வேடத்தையும் உயிரோட்டமுடன் ஏற்றுக்கொண்டு தன் உரைநடை வலிமையால் கேட்கும் போதே காட்சியைக் கற்பனை செய்ய வைத்தவர் ஓ.ஏ.கே.தேவர். ஐம்பதாம் வயதுக்கு முன்பே மறைந்தாலும், அவரின் குரல் இனிமையும் நடிப்பு வலிமையும் தமிழ்த் திரையுலகில் என்றும் மறக்க முடியாத சின்னமாக நிலைத்திருக்கும்

Prashanth

Srinivas

லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும்.

லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான

ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்தது முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.

இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார்.

ரயில்வே துறை என்பது மிகப் பெரிய பொறுப்பு தற்போதைய நிலவரப்படி 1.23 மில்லியன் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் உலகின் மிகப் பெரிய நிறுவனம். அப்படிப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கிறார். அன்றைய காலகட்டத்தில ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் இருந்தது.

யாரும் ஏற்க முன் வராத பதவியை ஏற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார்.

2004 ஜுலை 6 –ம் நாள் லல்லு தன் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நாடே திரும்பிப் பார்த்தது. காரணம், பொதுவாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையேற்றம் தான் இருக்கும்.

ஆனால், லல்லு தன் பட்ஜெட்டில் விலை குறைப்பு செய்தார். சாதாரண வகுப்பில் இருந்து முதல் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு வரை அனைத்துக்கும் பயணக்கட்டண குறைப்பு செய்தார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் துறை, இவர் வேறு பயணக்கட்டண குறைப்பு செய்கிறார், யாருக்கும் ஒன்றும் புரியவில்லை

லல்லு தன் வித்தியாசமான செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மக்கள் அனைவரும் ரயில்களை பயன்படுத்த போதிய இருக்கைகள் இல்லை. புதியதாக ரயில்கள் வாங்கலாம் என்ற யோசனையை லல்லு ஏற்கவில்லை. மாறாக, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் என்ஜின்களின் இழுவிசையை சற்று அதிகரிக்கச் சொன்னார்.

இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னார்.

இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னார்.

சாதாரணமாக

45 KMPH என்ற அளவில் இருந்த ரயில்களின் வேகம்

55 KMPH என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. கூடவே, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகியதுடன், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

அடுத்ததாக சரக்கு ரயில்களிலும் தன் கவனத்தை செலுத்தினார் லல்லு. வெகு நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த சரக்கு ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினார். மேலும் சரக்கு ரயில்களின் சுமக்கும் அளவை அதிகரிக்க திட்டமிட்டார். ஆனால் உயர் அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இப்படிச் செய்தால் ரயில்களில் ஆக்ஸிகள் உடைந்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் என்றனர். லல்லு நேரடியாக ஆய்வுகளில் இறங்கினார். அதிகாரிகள் மட்டுமல்லாது பொறியாளர்கள், இன்ஜின் இயக்குபவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

முடிவாக 20.3 டன் என்ற அளவில் இருந்து 22.9 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனால் ரயில்வேவிற்கு 3000 கோடி லாபம் கிடைத்தது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த துறையை லாபகரமான துறையாக மாற்றினார் லல்லு. பதவியேற்கும் போது கையிருப்பு 149 கோடி.

ஆனால் பதவியேற்றப் பின் கையிருப்பு 12000 கோடி. அன்று, லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும். தன் மீது வைக்கப்பட்ட எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் அடித்து தூள் தூளாக்கினார்.

உலகின் மிகச்சிறந்த பிசினஸ் பல்கலைகழகம் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் “லல்லு வின் ரயில்வே பணிகள்” இன்றும் விவாதபொருளாக அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.

~ வாட்ஸ்அப் பகிர்வு

எம். ஜி ஆர்- சாண்டோ சின்னப்பத்தேவர்!

 எம். ஜி ஆர் அவர்களுக்கு

சிறிது மனக் கஷ்டப்பட்டு பேசாமல்

இருந்த போது ஒரு நாள்....

சாண்டோ சின்னப்பத்தேவர் தன்னுடைய படத்திற்காக பாடல் ரெக்கார்டிங் செய்துவிட்டு வெளியே வருகிறார். தேவரைப் பார்த்ததும், ‘அண்ணே...’ என எம்.ஜி.ஆர் கூப்பிட, பதிலுக்கு ‘ஏ.. முருகா’ என வந்து எம்.ஜி.ஆரை தேவர் கட்டிப்பிடித்துவிடுகிறார். இருவரது கண்களுமே கலங்கிவிட்டன. ஏழு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர். கால் முறிந்தது பற்றி தேவர் எம்.ஜி.ஆரிடம் கேட்க, தேவரின் படத்தயாரிப்பு குறித்து எம்.ஜி.ஆர் கேட்க என இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். தன்னுடைய படத்திற்காக பாடல் பதிவு வேலை நடப்பதாக எம்.ஜி.ஆரிடம் தேவர் கூறினார். நான் அந்தப் பாட்டைக் கேட்கலாமா என எம்.ஜி.ஆர் கேட்க, ‘உனக்கு இல்லாமலா முருகா...’ எனக் கூறி ஸ்டூடியோ உள்ளே அழைத்துச் சென்று, பதிவுசெய்த நான்கு பாடல்களையும் போட்டுக் காண்பிக்கிறார். பாடல்கள் அற்புதமாக உள்ளன எனப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஹீரோ யார் என்று கேட்டுள்ளார். தனக்கு தொழில் தற்போது நலிவடைந்துவிட்டது என ஆதங்கப்பட்ட தேவர், கிடைக்குற நடிகர்களை வைத்து படம் எடுப்பதாகக் கூறியுள்ளார். ‘ஏன்... நான் இல்லையா’ என எம்.ஜி.ஆர் கேட்க, தேவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

தேவரை கையோடு வீட்டிற்கு அழைத்துச்சென்ற எம்.ஜி.ஆர், தன்னுடைய அம்மா புகைப்படத்தின் முன் நிறுத்துகிறார். ‘சத்தியா அம்மா மேல சத்தியம்மா சொல்றேன்ணா... இனி வருஷத்துக்கு ரெண்டு படம் உங்களுக்கு நான் நடிச்சுக்கொடுக்கிறேன்... கதை, வசனம் எதுலயும் நான் தலையிடமாட்டேன்’ என சத்தியம் பண்ணிக் கொடுக்கிறார். அதேபோல, நான் தொழில்பண்ணுகிற இடத்தில் தம்பி இருக்கக் கூடாது... தம்பி என்று சிவாஜியை குறிப்பிடுகிறார். ‘நான் நடிக்கும்வரை சிவாஜியை வைத்து படம் எடுக்கமாட்டேன் என நீங்களும் சத்தியம் பண்ணிக்கொடுங்கள்’ என்கிறார். தேவரும் சத்தியம் பண்ணிக்கொடுக்கிறார். தேவர் மிகப்பெரிய சிவாஜி ரசிகர்; எம்.ஜி.ஆருக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக சிவாஜியை வைத்து அவர் படம் எடுக்கவேயில்லை. பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக எம்.ஜி.ஆரும் 16 படங்கள் நடித்துக்கொடுத்து தேவரை மிகப்பெரிய கோடீஸ்வரனாக்கினார்".


Friday, September 4, 2026

‘அவள் அப்படித்தான்’. !

 


20க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடுவே கமல்… நள்ளிரவிலும் வந்து நடித்த ரஜினி! வெளியானபோது தோல்வி… இன்று தமிழ் சினிமாவின் கிளாசிக்!

1978-ல் ஒரு படம் வெளியானது. அதில் அப்போது வளர்ந்து கொண்டிருந்த இரண்டு மிகப்பெரிய நடிகர்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் நடித்திருந்தார்கள். கதையின் மையத்தில் ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு என்ற பெண் கதாபாத்திரம்.

ஆனால் படம் வெளியானபோது ரசிகர்கள் அதை பெரிதாக வரவேற்கவில்லை. சில திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் படம் விரைவாகவே எடுக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அதே திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அந்தப் படம் ‘அவள் அப்படித்தான்’. 

படத்தை இயக்கிய சி. ருத்ரய்யா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகிய மூவரையும் ஒரே படத்தில் இணைப்பதில் அனந்துவுக்கும் முக்கியப் பங்கு இருந்ததாகப் படத்தின் வசனகர்த்தா வண்ணநிலவன் பின்னர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் படத்தின் உண்மையான சிறப்பு என்ன?

மஞ்சு என்ற பெண், தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவங்களால் ஆண்கள் மீதும் காதல், திருமணம் போன்ற உறவுகள் மீதும் நம்பிக்கையை இழந்தவளாக மாறியிருக்கிறாள்.

அவளுடைய வாழ்க்கைக்குள் இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஆண்கள் வருகிறார்கள்.

ஒருவர் ரஜினிகாந்த் நடித்த தியாகு — பணம், அதிகாரம், ஆணாதிக்க சிந்தனை கொண்ட விளம்பர நிறுவன முதலாளி.

மற்றொருவர் கமல்ஹாசன் நடித்த அருண் — பெண்களின் வாழ்க்கையைப் பற்றி ஆவணப்படம் எடுக்க சென்னைக்கு வரும் உணர்வுப்பூர்வமான இளைஞர்.

அருண், மஞ்சுவை வெறுமனே அவள் வெளியில் காட்டிக்கொள்ளும் விதத்தை வைத்து மதிப்பிடாமல், அவள் ஏன் இப்படியாக மாறினாள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறான். மஞ்சுவும் தனது கடந்த காலத்தில் சந்தித்த வேதனையான அனுபவங்களை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். 

இதற்கிடையில் அருணுக்கு மஞ்சுவின் மீது காதல் வருகிறது.

ஆனால் மஞ்சு தியாகுவுடன் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது. இதனால் அருண் அவளைப் பற்றிய தனது எண்ணங்களையே சந்தேகிக்க ஆரம்பிக்கிறான்.

படத்தின் இறுதிப்பகுதியில் ஒரு பெரிய திருப்பம் வருகிறது.

மஞ்சு உண்மையில் தியாகுவை காதலிக்கவில்லை. அவனுடைய ஆணாதிக்க மனநிலையை அவனுக்கே புரிய வைக்க ஒரு திட்டத்தை வகுக்கிறாள். தன்னைப் பயன்படுத்த நினைத்த தியாகுவுக்கு எதிராக அவள் நிற்கும் அந்தக் காட்சியே கதையின் முக்கியமான தருணங்களில் ஒன்று. 

ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுகிறது.

அருண் மஞ்சுவை தவறாகப் புரிந்துகொண்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்பி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

Poster for Aval Appadithan (1978)

படத்தின் கடைசி காட்சிகளில் மஞ்சு, அருணின் மனைவியிடம் பெண்களின் விடுதலை குறித்து கேட்கும் உரையாடல், இன்றும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்தக் காட்சிக்குப் பிறகு மஞ்சு மீண்டும் தனியாகச் செல்கிறாள்.

அவள் இறந்துவிடவில்லை… அவளுக்குள் இருந்த ஒரு வாழ்க்கை மட்டும் முடிகிறது. மறுநாள் மீண்டும் அதே சமூகத்துக்குள் இன்னொரு மஞ்சு பிறக்கிறாள் என்பதுபோல படம் முடிகிறது.

அதனால்தான் படத்தின் பெயரும் ‘அவள் அப்படித்தான்’.

இவ்வளவு வித்தியாசமாக படம் எப்படி உருவானது?

அப்போது இருந்த வழக்கமான திரைப்பட பாணியைப் பின்பற்றாமல், குறைந்த செலவில் கருப்பு-வெள்ளையில் படம் எடுக்கப்பட்டது. நடிகர்களுக்கு மேக்கப் கூட பயன்படுத்தப்படவில்லை. நிழல்கள், நெருக்கமான காட்சிகள், வித்தியாசமான எடிட்டிங் முறைகள் போன்றவை படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை கொடுத்தன. 

கமல்ஹாசன் அப்போது 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், தனது ஓய்வு நேரத்தை இந்தப் படத்திற்காக ஒதுக்கியதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. சில கட்டங்களில் இரண்டு மணி நேரம் கிடைத்தாலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், படப்பிடிப்பு பல மாதங்களாக இடைவெளிகளுடன் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், அருண் பெண்களைப் பேட்டி எடுக்கும் காட்சிகளில் உண்மையான பெண்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் இயல்பான பதில்களைப் பதிவு செய்த முயற்சியும் அந்தக் காலத்துக்கு மிகவும் புதுமையானது. 

இளையராஜாவின் இசையும் படத்தின் இன்னொரு பலம். ‘உறவுகள் தொடர்கதை’, ‘பன்னீர் புஷ்பங்களே’ போன்ற பாடல்கள் பின்னாளில் தனி வரவேற்பைப் பெற்றன. 

1978 அக்டோபர் 30-ஆம் தேதி வெளியான இந்தப் படம் ஆரம்பத்தில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் இயக்குநர்கள் பாரதிராஜா, மிருணாள் சென் உள்ளிட்டோரின் பாராட்டுகளுக்குப் பிறகு படத்தின் மீது மீண்டும் கவனம் திரும்பியது. காலம் செல்லச் செல்ல இதற்கு ஒரு தனி ரசிகர் வட்டமும் உருவானது. 

இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது,

அப்போது ரசிகர்கள் புரிந்துகொள்ளத் தவறிய ஒரு படம்…
பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கிளாசிக்…
அதுதான் ‘அவள் அப்படித்தான்’.

சில படங்களின் வெற்றியை முதல் நாள் வசூல் தீர்மானிப்பதில்லை

இந்த படம் பார்க்கும் பொழுது

காமெடி வராது! மீசையையும் எடுக்க மாட்டேன்!! ரஜினியையே மாற்றிய பாலச்சந்தர்!

 Thillu Mullu
காமெடி எனக்கு வராது.. மீசையையும் எடுக்க மாட்டேன்!! ரஜினியையே மாற்றிய பாலச்சந்தர்!

ரஜினிகாந்த் என்றாலே இன்று ஆக்‌ஷன், ஸ்டைல் மட்டுமல்லாமல் அவரது காமெடி காட்சிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஆனால் ஒரு காலத்தில்,

‘என்னால் முழுக்க முழுக்க காமெடி படத்தில் நடிக்க முடியுமா?’

என்ற சந்தேகம் ரஜினிக்கே இருந்திருக்கிறது.

அந்த சந்தேகத்தை உடைத்து, ரஜினிக்குள் இருந்த காமெடி நடிகரை ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம்தான் ‘தில்லு முல்லு’.

1981ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘தில்லு முல்லு’, 1979ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘கோல் மால்’ திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கம்.

அந்த காலகட்டத்தில் ரஜினி என்றாலே ரசிகர்களுக்கு கோபம், வேகம், சண்டை, ஸ்டைல், வில்லத்தனமான சிரிப்பு போன்ற ஒரு குறிப்பிட்ட பிம்பம் இருந்தது.

அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர் அவரது குருவான கே.பாலச்சந்தர்.

ரஜினியை வைத்து முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்க முடிவு செய்தார்.

ஆனால் கதையை கேட்ட ரஜினிக்கே முதலில் தயக்கம் ஏற்பட்டது.

அதுவரை முழுமையான நகைச்சுவை கதையில் நடித்த அனுபவம் இல்லாததால்,

‘நான் எப்படி காமெடி செய்வேன்? இதற்கு நாகேஷ் மாதிரி ஒரு காமெடி நடிகரை வைத்துக்கொள்ளலாமே’

என்ற ரீதியில் பாலச்சந்தரிடம் ரஜினி கூறியதாக படத்தின் தயாரிப்பு தொடர்பான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பாலச்சந்தர் அதை ஏற்கவில்லை.

அவருக்கு ஒரு காமெடி நடிகரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல.

அதுவரை ஆக்‌ஷன் நடிகராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு ஹீரோவை வைத்து காமெடி செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

‘நீ நடி... நான் பார்த்துக்கொள்கிறேன்’

என்ற நம்பிக்கையை ரஜினிக்கு கொடுத்து படத்தில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.

இதற்கிடையே இன்னொரு விஷயத்திலும் ரஜினிக்கு தயக்கம் ஏற்பட்டது.

அது அவரது மீசை.

அந்த காலகட்டத்தில் ரஜினியின் முகத்தோற்றத்தில் மீசையும் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது.

ஆனால் ‘தில்லு முல்லு’ கதையில் சந்திரன் மற்றும் அவர் உருவாக்கும் கற்பனையான இரட்டை சகோதரன் இந்திரன் ஆகிய இருவருக்கும் வித்தியாசம் காட்ட வேண்டியிருந்தது.

சந்திரனுக்கு மீசை இருக்கும்.

இந்திரனுக்கு மீசை இருக்காது.

இதனால் படத்திற்காக தனது மீசையை முழுமையாக எடுக்க வேண்டும் என்று ரஜினியிடம் பாலச்சந்தர் கூறினார்.

அதற்கும் ரஜினி முதலில் தயங்கியிருக்கிறார்.

அதுவரை ரசிகர்கள் பார்த்து பழகிய தனது தோற்றத்தை மாற்றினால் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விஷயத்திலும் பாலச்சந்தர் விடவில்லை.

இறுதியில் தனது குருவின் பேச்சைக் கேட்டு ரஜினி மீசையை எடுத்தார்.

ரஜினிகாந்த் மீசையில்லாமல் திரையில் தோன்றிய முதல் திரைப்படமாகவும் ‘தில்லு முல்லு’ அமைந்தது.

படத்தின் கதை மிகவும் எளிமையானது.

வேலை தேடும் சந்திரன், தேங்காய் சீனிவாசன் நடித்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியிடம் வேலைக்கு சேர்கிறார்.

அவரது முதலாளி மிகவும் கண்டிப்பானவர்.

வேலைக்கு சேர்ந்த பிறகு ஒரு நாள் விடுமுறை பெறுவதற்காக தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டு சந்திரன் கால்பந்து போட்டி பார்க்க செல்கிறார்.

ஆனால் அதே இடத்தில் முதலாளியும் இருப்பார்.

அவரிடம் மாட்டிக் கொண்ட சந்திரன், தான் அங்கு வரவே இல்லை என்றும், முதலாளி பார்த்தது தனது இரட்டை சகோதரன் இந்திரன் என்றும் இன்னொரு பொய்யை சொல்கிறார்.

அந்த ஒரு பொய்யை காப்பாற்றுவதற்காக மீசையுடன் சந்திரனாகவும், மீசையில்லாமல் இந்திரனாகவும் மாறி மாறி நடிக்க வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படும்.

அதன் பிறகு நடக்கும் குழப்பங்கள்தான் படம் முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையாக தேங்காய் சீனிவாசனின் நடிப்பும் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

குறிப்பாக சந்திரன் - இந்திரன் குழப்பத்தில் தேங்காய் சீனிவாசன் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

மாதவி கதாநாயகியாக நடித்திருந்தார். சௌகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

படத்தின் கிளைமாக்ஸில் கமல்ஹாசன் வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் வந்ததும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக அமைந்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்களும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தன.

குறிப்பாக ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

படம் 1981 மே 1ஆம் தேதி வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

அதுவரை,

‘ரஜினி என்றால் ஆக்‌ஷன்... ஸ்டைல்’

என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு,

‘ரஜினியால் இரண்டு மணி நேரம் முழுக்க காமெடியும் செய்ய முடியும்’

என்பதை நிரூபித்தது ‘தில்லு முல்லு’.

பின்னாளில் ரஜினியின் பல திரைப்படங்களில் நகைச்சுவை மிக முக்கியமான அம்சமாக மாறியது.

மன்னன், அண்ணாமலை, முத்து, படையப்பா என அவர் நடித்த பல படங்களில் ரஜினியின் காமெடிக்கே தனி வரவேற்பு கிடைத்தது.

ஆனால் அதற்கான மிக முக்கியமான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்று ‘தில்லு முல்லு’.

காமெடி செய்யவே தயங்கிய ரஜினி...

மீசையை எடுக்கவும் முதலில் தயங்கிய ரஜினி...

இந்த இரண்டு தயக்கங்களையும் உடைத்தவர் கே.பாலச்சந்தர்.

அந்த முயற்சிதான் இன்று வரை தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘தில்லு முல்லு’ திரைப்படத்தை உருவாக்கியது.

Wednesday, September 2, 2026

நடிகை "நல்லெண்ணெய்" சித்ரா !

 மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர்கள் பலர் தமிழ் திரையுலகில் இருக்கின்றனர்.

  • அந்த வரிசையில் 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 56 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை "நல்லெண்ணெய்" சித்ராவை பற்றிய பதிவிது.

"நல்லெண்ணெய்" சித்ரா

  • கேரளாவில் உள்ள கொச்சியை சேர்ந்தவர் சித்ரா.இவர் சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார்.
  • இதனை அடுத்து அவர் தனது 10வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
  • அதன் பிறகு அவர் பல மலையாள திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தார்.
  • தவறான நபர்களின் வழிகாட்டுதலால் இவரின் இளம் வயதில் 18+ திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
  • இந்த நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் அறிமுகமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினியின் கடிதத்தை ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கும் சிறுமியாக நடித்திருந்தார்.
  • அதன்பின் "ரசிகன் ஒரு ரசிகை" என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
  • அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.
  • ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்த காட்சிகளில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
  • இந்த நிலையில் தான் அவர் "நல்லெண்ணெய்" விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு "நல்லெண்ணெய்" சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது.
  • இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
  • குறிப்பாக "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் உடன் சித்ரா நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த நகைச்சுவை நடிகரான மனோபாலா இயக்கியிருந்தார்.
  • அதே போல் பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’, ராம்கி நடித்த ’வெள்ளைய தேவன்’ ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் ‘சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்.

கூடுதல் தகவல்:

  • நடிகை சித்ரா கடந்த 1990-ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
  • திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
  • எதிர்பாராதவிதமாக கடந்த 2021-ஆம் ஆண்டு சித்ரா மாரடைப்பால் காலமானார்.

நன்றி:கூகிள்(படங்கள்)