Total Pageviews

Friday, March 28, 2025

ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்!

 

நிறைய பேர் கேட்கிறார்கள்...

கமல் ஏன் இவருக்கு உதவவில்லை?...ரஜினி ஏன் அவருக்கு உதவ வில்லை?

உதவி செய்பவர்கள் ஒரு ரகம். உதவி ஏற்பவர்கள் ஒரு ரகம்.

'துடிக்கும் கரங்கள்' என்றொரு ரஜினி படம். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம். 1982 டிசம்பர் 12ல் அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது.

தயாரிப்பாளரான இயக்குனர் ஸ்ரீதருக்கு ரஜினியின் பிறந்த நாள் வருவது தெரிந்ததும் தடபுடல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டார். ரஜினி "வேண்டாம் சார். சிம்பிளா உங்க வாழ்த்து மட்டும் போதும்" எனச்சொல்லியும் ஸ்ரீதர் கேட்கவில்லை. பிறந்தநாள் ஆனதால் மனைவி லதாவும் குழந்தைகளோடு வந்துவிட்டார் ஊட்டிக்கு. ஸ்ரீதர் யூனிட்டில் உள்ள ஒரு ஆள் விடாமல் அழைத்து ரஜினி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். ரஜினியே ஸ்ரீதரின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து விட்டார். லதாரஜினிக்கும் சர்ப்ரைஸ்..

பல வருடங்களுக்குப்பிறகு ரஜினி சில நலிந்து போன தயாரிப்பாளர்களுக்காக 'அருணாச்சலம்' எடுக்கிறார். அதில் இயக்குனர் ஸ்ரீதரையும் சேர்க்க அவர் வீட்டிற்கே செல்கிறார் ரஜினி.

விஷயத்தை சொன்னதும் ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். "சார்...இந்தப்படத்தில் எட்டு பேரை சேர்த்திருக்கிறேன். அதில் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ள ஆசை..."

ரஜினி இப்படிச்சொல்லக் காரணம் அப்போது ஸ்ரீதர் லெதர் தொழிற்சாலை தொழில் நடத்தி பெரும் நஷ்டத்தில் இருப்பது ரஜினிக்கு தெரிந்ததால்.

"வேண்டாம் ரஜினி. நான் அந்தளவுக்கு கஷ்டப்படவில்லை. இதை வேறு யாருக்காவது கொடுங்க...நன்றி..." என ஸ்ரீதர் ரஜினியிடம் மறுத்து விடுகிறார். அமைதியாக இருந்த ரஜினி "ஓகே சார்...கிளம்புகிறேன்..." எனக்கிளம்ப...

"ரஜினி...ஒரு நிமிஷம்....எனக்கு உதவி செய்யணும்னு நீங்க நினைச்சா இந்தப்படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக்கொடுங்க...அதுக்கு சம்பளம் கொடுங்க...வாங்கிக்கொள்கிறேன்..இனாமா வேண்டாம்..."

கேட்ட ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்.

உண்மையில் ஸ்ரீதர் கஷ்டத்தில் இல்லையென்றால் வசனம் எழுதும் வாய்ப்பையும் சம்பளத்தையும் கேட்டிருக்க மாட்டார். அவருக்கு தேவை இருந்தும் மறுத்து விட்டார். Great man...

இப்படித்தான் உதவுவோர் ஒரு ரகமென்றால் உதவியை ஏற்பவர் ஒரு ரகம். எல்லோரும் எல்லோரிடமும் கையேந்தி விடுவதில்லை. அதனால் கையேந்துபவர் கேவலமானவர்கள் என்பதுமில்லை. நமக்கு தெரியாமல் நாம் கமல், ரஜினி ஏன் உதவவில்லை என பழிக்க வேண்டும்?.

நாம் பார்க்கும் வானத்துக்கு அப்புறமும் நாம் பார்க்காத ஒரு வானம் இருக்கத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment