இன்று எனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தேன்.திடிரென அவசரமாக ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல். ஆபிஸ் வேலை நீண்டு கொண்டே இருந்தது , வேலை முடிந்து திரும்பி பார்க்கையில் மணி இரவு 11.15..OLA Auto போட்டால் கேன்சல் செய்துகொண்டே இருந்தார்கள்.
வேறு வழியில்லாமல் வெளியே வந்து ஆட்டோவிற்காக காத்திருந்த போது கோயம்பேட்டிற்கு ஒரு ஆட்டோகார புண்ணியவான் நுங்கம்பாக்கத்தில் இருந்து 500ரூ கேட்டார். யாரும் 400ரூபாய்க்கு குறைவாக வரவில்லை. சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டு இருந்தபோது மெதுவாக ஒரு ஆட்டோ வந்து என் அருகில் நின்றது .
ஒரு 70வயதுள்ள முதியவர் எங்கு போகணும் என்று கேட்க , நான் கோயம்பேடு என்று கூற...அவர் சரி தம்பி மீட்டர் போடறேன், இரவு நேரம்ங்கறதால 1- 1/2மீட்டர் என்று கூற..நான் ஸ்தம்பித்து நின்றேன். சென்னையில் முதல் முதலாக ஒரு ஆட்டோ ட்ரைவரே இப்படி கேட்டது எனக்கு இதுவே முதல் முறை.
அவர் யூனிபார்ம்ல இல்லாததால் என்ன தாத்தா, எங்க யூனிபார்ம்...இந்த நேரத்துல இந்த வயசுல வண்டி ஓட்டுறீங்க என்று கேட்க..
தம்பி வரும்போது ஏதோ ஞாபகமறதில வீட்ல இருந்து 10 மணிக்கு கிளம்பும்போது போட மறந்துட்டேன் என்று கூற எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
பிறகு சொன்னார். தம்பி 46 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். சென்னைல மூல முடுக்கு வரை தெரியும் தைரியமாக வாங்க என்று கூற நான் சிரித்தேன்.
பிறகு என்னத்த தாத்தா படுத்து ஓய்வு எடுத்து தூங்க வேண்டிய வயசுல இப்படி இன்னும் உழைக்கிறீங்கனு நான் கேட்க.
எனக்கு ஒரே புள்ள தம்பி.. ஆட்டோ ஓட்டி தான் படிக்க வெச்சேன். நல்லா படிச்சான். நல்ல வேலை கிடைச்சது ஒரு கல்யாணத்த பண்ணிட்டா நம்ம கடமை முடிஞ்சது, பிறகு நம்பள பாத்துப்பான்னு நினைச்சேன். கல்யாணம் ஆகி 18 வருஷம் கழிச்சு பொறந்த புள்ள அவன். இப்ப வரைக்கும் அவ்வளவு உசுரு அவன் மேல எனக்கு. அவனுக்கு கல்யாணம் ஆன பொறவு எதுவும் சரியில்ல. சரி நீ நிம்மதியா இருடான்னு தனியாக போகசொல்லிட்டேன்.. விருப்பமே இல்லாமல்தான் போனான். அப்பப்ப வந்து எங்கள பார்ப்பான்.
அதுக்குள்ள என் மனைவிக்கும் முடியல. பகல் பூரா அவங்க கூட இருந்து அவங்கள பார்த்துப்பேன். பகல்ல அவ்வளவு வெக்கயா இருக்கும். இந்த டிராபிக்ல என்னால வண்டி ஓட்ட முடியாது. கண்ணு கொஞ்சம் நல்லா இருக்கு. அதனால் ராத்திரி 9 மணில இருந்து காலைல 4 மணி வரைக்கும் ஆட்டோ ஓட்டிட்டு வீட்டுக்கு போய்டுவேன். சொந்த ஆட்டோ தம்பி இது ..என் முழு 45 வருட உழைப்பு .ஒரு நாளைக்கு 600ரூபாய் நிக்கும். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் அதுவே போதும்.இத்தன வயசுக்கு மேல எனக்கு எதுக்கு தம்பி அளவுக்கு மீறி பணம்வேணும். ஒரு நாள் 600ரூ வருதா சரி சூப்பர். இல்ல ஒரு நாள் ரூ300 தான் வருதா. ஆண்டவன் இன்னைக்கு இவ்ளோதான் படி அளந்திருக்கான். நாளைக்குபத்தி இன்னைக்கே எதுக்கு யோசிக்கணும் என பேசிக்கொண்டே சென்றார்.
ஏன் உங்க பையன் உங்களுக்கு எதுவும் ? என நான் கேட்க..
அவன் மவராசன் தம்பி..!! எப்பவுமே என் ராசா...!! இப்பவரைக்கும் அவன் கொடுத்தாலும் கொடுக்கலனாலும் தங்கமான புள்ள அவன் என்று மகனை விட்டு கொடுக்காமல் பேசினார்..!!
நான் நிஜமாகவே பிரம்மித்தேன். எப்படி தாத்தா உங்களால் இப்படி இருக்கமுடியுதுன்னு நான் கேட்க.
தவமா நான் கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெத்த புள்ள அது. அவன நான் முதன் முதலா கையில் வாங்கும் போது..ஆண்டவா ..!! இந்த கொழந்தைக்கு எந்த கஷ்டமும் வரமால் சந்தோஷமாக இருக்கணும். அவனுக்கு வர்ற கஷ்டத்தையெல்லாம் எனக்கு கொடுன்னுதான் வேண்டிகிட்டேன். நான் மட்டும் இல்ல ...எல்லா தாய் தகப்பனோட வேண்டுதலும் அதுவாக மட்டும் தான் இருக்கும்.
ஆனா இந்த பாழும் மனசு இருக்கே அவன் வளர வளர நாம செஞ்சத அவன் திருப்பி நமக்கு செய்யணும்னு எதிர்பார்க்கும்...அங்க தான் பிரச்சனையே ..எப்பவுமே அவன நான் பார்க்கும்போது முதல் முதலா அவன கையில் வாங்கியதும் அந்த வேண்டுதலும் நியாபகம் வரும். இப்ப வரைக்கும் ஒரு துளி வருத்தம் கூட எனக்கு அவன் கிட்ட இல்ல .எனக்கு எப்பவுமே என் ராசா அவன் என்று கூற விக்கித்து நின்றேன்.
வாழ்க்கையின் பெரிய பாடத்தை மீண்டும் அவரிடம் இன்று படித்தேன். பற்றற்ற தன்மை என்று பலர் சொல்லி செயல்படுத்த முடியாத மிகப்பெரிய விடயத்தை எதையும் படிக்காத ஒரு எளிய மனிதர் எனக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.
கோயம்பேடு அதற்குள் வந்துவிட மீட்டரில் 130 ரூபாய் காட்டியது. நான் இறங்கும் போது 1-1/2மீட்டர் காசாக ரூ200 கொடுக்க..தம்பி இந்தாங்க மீதி 5 ரூபாயை கொடுத்தார். நான் நெகிழ்ந்து விட்டேன்.
உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளட்டுமா என்று நான் கேட்க..தம்பி என் வாழ்க்கைல இப்படி கேட்ட முதல் ஆள் நீங்கதான. இப்ப ஆட்டோவில் வர்றவங்க எல்லாம் யாரும் வாயை திறந்து எங்ககிட்ட பேசறது கூட இல்ல. மோபைல்போன நோண்டிகிட்டே வருவாங்க. சக மனுஷனா கூட எங்கள பார்க்கமாட்டாங்க. நீங்க ரொம்ப நல்லா பேசிக்கிட்டு வந்தீங்க. ஆண்டவன் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும் என நெகிழ்ந்து கூறினார்
கடைசியாக தாத்தா உங்க பேரு என்ன என்று நான் கேட்க.. என் பேரு ராசேந்திரன் ❤️❤️என் மவன் பேரு ராசராசன் ❤️❤️என்று சொல்லும் போது அவ்வளவு பெருமிதம் , அவ்வளவு திருப்தி அவருக்கு.
ஒரு மனிதன் வாழ்வது முக்கியமல்ல..திருப்தியுடன் நிறைவாக எப்படி எதுவுமே இல்லையென்றாலும் கூட வாழ வேண்டும் என்ற வாழ்வின் பேருண்மையை அந்த எளிய மனிதர் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார்.
No comments:
Post a Comment