"சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா" முதல் "பாட்டி சொல்லை தட்டாதே" வரை.. 80களில் கலக்கிய சந்திரபோஸ்
தமிழ்
சினிமாவில் 1980களில் இளையராஜா கொடி கட்டிப்பறந்த காலகட்டத்தில் மற்றும்
சிலரும் தமிழ் சினிமாவில் நல்ல இசையைக் கொடுக்கத்தான் செய்துள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர், இசையமைப்பாளர் சந்திரபோஸ்.
Live Tamil News - தமிழ் செய்திகள்
சந்திரபோஸின் ஆரம்பம்: ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். இசையமைப்பாளர் சந்திரபோஸின் இசை என்பது சாமானிய இசைக்கலைஞர்களும் இசைக்கும் வகையில் எளிமையாக இருக்கும். இதனால் அன்றைய காலத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் பல பாட்டுக் கச்சேரிகளில் ஒலித்துள்ளன.
தஞ்சை மாவட்டம், சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரபோஸ், இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சென்னை வந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை செய்துவந்தார். இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார், சந்திரபோஸ்.
1977ஆம் ஆண்டு ஸ்ரீவித்யா, விஜயகுமார், ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் இவர் மதுர கீதம் என்னும் படத்திற்காக முதன்முதலாக இசையமைக்கிறார். இப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இடம்பெற்ற ‘கண்ணன் எங்கே.. ராதை மனம் ஏங்குதம்மா’ என்னும் பாடல் நல்லதொடக்கத்தைக் கொடுத்தது.
இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு: 1982ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான பார்வையின் மறுபக்கம் படத்தில் ‘தேவதை புரியும் தவங்கள்’ என்னும் பாடல் சந்திரபோஸின் இசையில் கவனம்பெற்றது. அடுத்து நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேஷன், விஷ்ணு வர்தன் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படத்தில், 'நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப்பாருங்க.. அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க’,’தங்கமணி ரங்கமணி வாம்மா நீ.. வெள்ளிமணி வைரமணி பூமேனி’ஆகிய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், சந்திரபோஸ்.
அதேபோல், 1987ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘சங்கர் குரு’ படத்தில் ‘காக்கி சட்டை போட்ட மச்சான்.. களவு செய்ய கன்னம் வைச்சான்’ என்னும் பாடலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ படத்தில், ‘காளை காளை... முரட்டுக்காளை நீதானே.. போக்கிரி ராஜா நீதானே’ எனப் பல பாடல்கள் சந்திரபோஸின் இசையில் ஹிட்டடித்தன. இதனைத்தொடர்ந்து, சத்யராஜ் நடித்த ‘அண்ணாநகர் முதல் தெரு’ படத்தில் இடம்பெற்ற, 'மெதுவா.. மெதுவா ஒரு காதல் பாட்டு' இவரது இசையில் எவர்கிரீன் ரகம்.
அதேபோல், அர்ஜூன் நடித்த ‘தாய் மேல்’ ஆணை திரைப்படத்தில், 'மல்லிகைப்பூ பூத்திருச்சு' என்னும் பாடலும் ‘சின்ன கண்ணா செல்லக் கண்ணா’ ஆகியப் பாடல்களும் ஹிட்டடித்தன. 1989ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடித்த ‘ராஜா சின்ன ரோஜா’ படத்திற்கு இசையமைத்த சந்திரபோஸ், ‘சூப்பர் ஸ்டாருன்னு யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும், ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம், ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை, ஒங்கப்பனுக்கும் பே பே’ ஆகியப் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டாகின.
சந்திரபோஸின் அற்புத இசை: ஏவிஎம்மின் 150வது தயாரிப்பு படமான ‘மாநகர காவல்’ படத்தில் சிலிர்ப்பூட்டும் தீம் மியூசிக்கையும், அற்புதமான பாடல்களையும் வழங்கியிருந்தார், சந்திரபோஸ். அதில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் என்றால் ’வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை’ எனலாம். மேலும், பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் ‘டெல்லிக்கே ராஜானாலும் பாட்டி சொல்லைத்தட்டாதே’ பாடல், இன்னும் பல கிராமங்களின் திருவிழாக்களில் ஒலிக்கத் தவறுவதில்லை.
சீரியலிலும் இசையமைத்த சந்திரபோஸ்: இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்த சந்திரபோஸ், டிவி சீரியலிலும் கவனம் செலுத்தினார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிம்மதி உங்கள் சாய்ஸ், கலாட்டா குடும்பம், சொந்தம், மங்கை, பொறந்த வீடா.. புகுந்த வீடா என்னும் சீரியல்களுக்கும் இசையமைத்தார், சந்திரபோஸ்.
இப்படி பாட்டுக்கச்சேரி, சினிமா, சீரியல் அனைத்திலும் இசையை மட்டுமே நம்பி பணித்த நாம் பெரும்பாலும் அறிந்திடாத அற்புதமான இசைக்கலைஞன், சந்திரபோஸ்.
30.9.2010-ல் இதே தேதியில் இயற்கை எய்திய அவரை, அவரது இசை வாயிலாக நினைவுகூர்வோம். மிஸ் யூ சந்திரபோஸ்!
No comments:
Post a Comment