கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனுக்கு சொந்தமான பட நிறுவனம்தான் அசோகா பிலிம்ஸ். இது கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் அமைந்தது. அசோகா பிலிம்ஸின் வருமான வரி கணக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்எஸ்.கிருஷ்ணனின் நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அனுமந்தராவ் என்பவர்தான் அதிகாரியாக இருந்தார்.
அவர் அந்தக் கணக்குகளை எல்லாம் பார்த்து விட்டு ‘என்னய்யா எப்பப் பார்த்தாலும் தருமம் தருமம் தருமம்னு எழுதி இருக்கீங்க... எவ்வளவு தருமம் பண்ணுனீங்க? நீங்க அளவுக்கு மீறி தர்மம் பண்ணியிருந்தா எப்படி நான் வரி போடாம இருக்க முடியும்?’ என்று அந்த நிர்வாகியைப் பார்த்துக் கேட்டார்.
‘ஐயா, உங்களுக்கு என்எஸ்.கிருஷ்ணனைப் பற்றித் தெரியாதுன்னு நினைக்கிறேன். அவரைப் பொருத்தவரைக்கும் வாரி வழங்குற வள்ளல. இப்ப சென்ட்ரல் ஸ்டூடியோவுல இருக்குற அசோகா பிலிம்ஸ் ஆபீஸ்லதான் அவரு இருக்காரு. நீங்க நேரா அங்கே போங்க. என் பொண்ணுக்குக் கல்யாணம். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுதுன்னு அவருக்கிட்ட சொல்லுங்க.
அங்கே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு அப்புறமா இந்தக் கணக்கைப் பார்த்தால் போதும்’ என்று அனுமந்தராவிடம் அந்த நிர்வாகி சொன்னார். இவர் சும்மா பேச்சுக்குச் சொன்னாலும் அனுமந்தராவ் சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு உடனடியாகக் கிளம்பி விட்டார். நேரா என்எஸ்.கிருஷ்ணனைப் போய் பார்த்தார். இவர் போய் பார்த்த உடனே தன்னுடைய வெற்றிலைப்பெட்டியை இவர் பக்கம் தள்ளிய என்எஸ்.கிருஷ்ணன், ‘என்ன வேணும் சொல்லுங்க’ன்னு கேட்டார்.
அதற்கு அவர், ‘என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுமோ என பயமா இருக்கு’ என்றார் அனுமந்தராவ். அதற்கு என்எஸ்.கிருஷ்ணன், ‘ஒரு ஆயிர ரூபாயால ஒரு கல்யாணம் தடைபடலாமா? என்னுடைய நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குப் போயிருக்காரு. அவரு வரட்டும். வந்ததும் தரச் சொல்றேன். அவரையே கார்ல உங்களை அழைத்துப் போகச் சொல்றேன்’னு சொன்னார். அசந்து போனார் அந்த அதிகாரி.
அவர், ‘உங்களுக்கு கிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பு. கர்ணன்னு பேர் வச்சிருக்கணும். உங்கள் நிர்வாகி என்னோட வருமான வரி அலுவலகத்துக்கு வந்து உங்க குணத்தைப் பற்றிச் சொன்னாரு. அதை நம்பாமத் தான் வந்தேன். இங்கே வந்து பார்த்ததும்தான் தெரியுது. நீங்க எவ்வளவு பெரிய வள்ளல்னு. மற்றவங்களுக்கு உதவுறதுக்குக் காசு கொடுக்குறதுல தப்பில்ல. ஆனா அதுக்கு முறையான ரசீதை மட்டும் வாங்கி வச்சிக்கோங்க’ன்னு அவருக்கு ஒரு அறிவுரையைக் கூறி விட்டுச் சென்றார் அந்த அனுமந்தராவ்.
No comments:
Post a Comment