Total Pageviews

Friday, December 5, 2025

சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படம் ரங்கோன் ராதா !

 கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற வரையறையை உடைச்செறிஞ்சவர் சிவாஜி (செந்தில்வேல் சிவராஜ் பதிவு)

பராசக்தி வெளியாகியாச்சு. சிவாஜியும் தமிழ்நாட்டுலே நெம்பர் 1 நடிகரா ஆயிட்டாரு. அதுக்கு அடுத்ததா மூணு படம் பண்ணி 5 வது படத்துக்காக சிவாஜிகிட்ட கதை சொல்ல வராங்க. நீங்க தான் ஹீரோன்னு சொல்லி கதை சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா, சிவாஜியோட ரோலை கேட்டா டென்ஷன் ஆயிடும். படத்துலே ஹீரோ ஒரு பெண் பித்தன், நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா அந்த வேஷம் இருக்கு. கதையை கேட்ட சிவாஜி என்ன சொல்லியிருப்பாரு? நமக்கு அதிர்ச்சிதான். ஆனா சிவாஜி சொன்ன பதில் 'நடிக்க ரொம்ப சம்மதம்'னு சொல்லிட்டாரு.

முதல் படம் வந்து சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை எங்கேயோ போய் வெச்சிருக்கு. வளர வேண்டிய நேரத்துலே இந்த மாதிரி படத்துலே யாராவது நடிக்க ஒப்புக்குவாங்களா? இங்க தான், ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற விதிய உடைச்செறிஞ்சார் சிவாஜி. திரும்பிப்பார்னு படத்துலே நடிச்சு சினிமா பீல்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு. அங்க ஆரம்பிச்சுச்சு சிவாஜியோட ஆட்டம். ஆன்ட்டிஹீரோ அப்படிங்கற வார்த்தையே அதில இருந்துதான் பிரபலமாச்சு.

கரெக்டா 8 மாசம் கழிச்சு ஒரு கதை வருது சிவாஜிகிட்டே. இந்த படத்துலே நீங்க நாட்டையே காட்டிக் கொடுக்கிற கதாநாயகனா நடிக்க வேண்டிய ரோல்னு சொல்றாங்க. நிஜத்துலே சிவாஜி மாதிரி தேசபக்தி நெறஞ்ச நடிகன் யாருமில்லே. இந்த குணம் இருக்கற சிவாஜி செஞ்ச அந்த படந்தான் அந்தநாள். இந்த படத்துலேயும் நிறைய புதுமைகளை செஞ்சிருப்பார் டைரக்டர். படத்துல ஹீரோவோட முதல் சீனே துப்பாக்கி குண்டு பாஞ்சு செத்துப் போற மாதிரி காட்சி. அதுவும் மனைவியே சுட்டு சாகடிக்கற மாதிரி காட்சி. படம் வெளியான பின்னாடி படம் பாத்தவங்க அரண்டு போனாங்க. பாட்டுக டான்சுன்னு வேற எதுவும் இல்லை படத்துலே.

சிவாஜியோட 12 வது படம் அந்தநாள். சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா நடிச்ச இந்த படத்தை இன்னைக்கு வரைக்கும் பிரமிப்பா பாத்துட்டுத்தான் இருக்காங்க. சிவாஜியோட 16வது படம் துளி விஷம், சிவாஜியோட சேர்ந்து கே.ஆர் ராமசாமி நடிச்ச படம். கே ஆர் ராமசாமிக்கு கதாநாயகன் வேசத்தை கொடுத்துட்டு சிவாஜி ஆன்ட்டிஹீரோவா நடிச்ச படம். இந்த படத்துக்கு முன்னாலே மனோகரான்னு பெரிய ஹிட் படத்துலே நடிச்சு அந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு 3 மொழியிலேயும் நடிச்சு டாப் ஆக்டரா தமிழ் சினிமாலே இருந்துட்டு வந்த நேரத்துலே சிவாஜி துணிஞ்சு வில்லனா நடிச்ச படம் இது.

இதுக்கு அடுத்தாகவும் ஆன்ட்டி ஹீரோவாத்தான் சிவாஜி நடிச்சாரு. ராமண்ணா ஒரு ரெண்டு ஹீரோ கதையை சொல்லி , நீங்க எந்த வேஷம் பண்றீங்கன்னு கேட்டார். ரெண்டு ஹீரோவுலே ஒரு ஹீரோ கேரக்டர் இதுதான். நண்பனோட மனைவியையே அடையத் துடிக்கிற, குடிப் பழக்கம் இருக்கற கேரக்டர் அது. இந்த கேரக்டர்லே இந்த படத்துலே நடிச்ச இன்னொரு நடிகர் (எம்ஜிஆர்) அந்த வேஷத்துலே நடிக்க ஒத்துக்கல . ஆனா சிவாஜியோ எந்த மறுப்பும் சொல்லாமே ஒப்புக்கிட்டார். அந்த படம்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் நடிச்ச கூண்டுக்கிளி.

சிவாஜியோட 19வது படம் எதிர்பாராதது . இதுவும் கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச கதைதான். பொதுவா நல்ல நிலைமையில் இருக்கிற ஹீரோக்கள் இந்த மாதிரி வேஷத்தை செய்ய ஒப்புக்கு மாட்டாங்க . சிவாஜியோட காதலி பத்மினி. சந்தர்ப்ப சூழ்நிலை பத்மினியோட ஏழ்மை நிலையாலே பத்மினி சிவாஜியோட அப்பா நாகையாவை கல்யாணம் பண்ணிக்குவார். சிவாஜி

வெளிநாட்டுக்கு போன பிறகு நடக்கிற சம்பவங்கள் இது. சிவாஜி பத்மினியோட காதல மறக்க முடியாமல் தவிக்கிறார். பத்மினி இப்போ சிவாஜிக்கு சித்தி முறை. ஒரு கட்டத்துல உணர்ச்சி வேகத்துல பத்மினிய கட்டித் தழுவ முயற்சிக்கிறார். அதைய பொறுத்துக்க முடியாத பத்மினி சிவாஜிய அடிச்சு தள்ளறார். இப்படி ஒரு கதையை பெரிய கதாநாயகன் கிட்ட சொன்னா நடிக்க

ஒப்புக்குவாங்களா ? வில்லங்கம் புடிச்ச இந்த கதையிலேயும் துணிஞ்சு நடிச்சவர் சிவாஜி.

சிவாஜி ஜெமினி நடித்த முதல் படம் பெண்ணின் பெருமை. சிவாஜியும் ஜெமினியும் அண்ணன் தம்பியா நடிச்ச படம் இது. இந்தப் படத்துல சிவாஜி ஜெமினிய ரொம்ப கொடுமைப் படுத்துற மாதிரி கேரக்டர். ஜெமினிகணேசன சவுக்காலே விளாசித் தள்ளுவார். அடிச்சு விரட்டுவார்.தொழிலாளர்களை மிரட்டுவார். இப்படி ஏக அட்டகாசம் பண்ணி இருப்பார் சிவாஜி இந்த படத்துல 

அதுமாதிரி சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படங்கள்லே ரொம்ப முக்கியமான படம் ரங்கோன் ராதா. கட்டுன மனைவியையே ரொம்ப கொடுமைப்படுத்துற கேரக்டர்ல சிவாஜி நடிச்சு மிரட்டி எடுத்து இருப்பார். இந்த படத்துல ரொம்ப கொடுமையான ஒரு காட்சி, கட்டுன மனைவியான பானுமதியையே நரபலி கொடுக்க துணிஞ்சுருவார் . இந்தப் படத்தோட கதை அண்ணா எழுதினது. வசனம் கருணாநிதி எழுதினது.

சிவாஜி திருடனா நடிச்ச படம் பாக்யவதி. பொய் பேசறது , ஏமாத்தறதுன்னு இந்த ஆன்ட்டி ஹீரோ வேஷத்துலே சிவாஜி நடிப்புலே பிரமாதப் படுத்தி இருப்பார். மனோகரான்னு படத்தை எடுத்த L.V.பிரசாத் மூணு வருஷம் கழிச்சு சிவாஜியை வெச்சு இந்த படத்தை எடுத்திருக்கார்னு நெனச்சா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு. அடுத்து உத்தமபுத்திரன் படம், விக்ரமன், பார்த்திபன்னு ரெண்டு வேஷம். இளவரசனா நடிச்ச விக்ரமன் வேஷத்தைதான் அதிகம் ரசிக்கும் படி செஞ்சிருப்பார் சிவாஜி. அம்மாவா வர்ற கண்ணாம்பா சிவாஜிக்கு அறிவுரை சொல்ற மாதிரி ஒரு காட்சி . அவங்க சொல்றத காதுலேயே வாங்கிக்காத படி , ஜாலியா ஊஞ்சலாடுவார் பாருங்க. அநாயசமா , அலட்டிக்காம பண்ணியிருப்பார்.

தமிழ் சினிமாவுல ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது. இப்படித்தான் ஒரு வரையறை செஞ்சு வச்சிருக்காங்க மக்கள். இந்த மாதிரி வரையறைக்குள் தன் படங்களை அடக்கிக் கொள்ளாதவர் சிவாஜி. புனர்ஜென்மம் படத்துல குடிச்சுட்டு நிதானம் எல்லாம் தவறி, ரோட்டுல எல்லாம் படுத்து கிடக்கும் அசல் குடிகாரன் போலவே சிவாஜி நடிச்சிருப்பார்.

பார் மகளே பார் படத்துல வறட்டு கௌரவம் பிடித்த , கர்வம் பிடித்த ஒரு மனிதராக சிவாஜி நடிச்சிருப்பார். புதிய பறவை படத்தில மனைவியை கொலை செய்த கணவன் பாத்திரத்துலே நடிச்சிருப்பார் . வசந்த மாளிகை படத்துல கூட அவருடைய கேரக்டர் என்னான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படி நடிப்புக்கும் , நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிவாஜி தன் படங்களை செஞ்சிருப்பார். ஒரு மனுஷன் எப்படி வாழணும்னு நல்ல ஹீரோ படங்கள் வந்ததோ, அதே மாதிரி ஒரு மனுஷன் எந்த மாதிரி வாழக் கூடாதுன்னு சொல்லறதுக்கும் இந்த மாதிரி படங்களில் நடிச்சார் சிவாஜி.

No comments:

Post a Comment