தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான பல படங்களைத் தந்தவர் கதாசிரியர் கலைஞானம். ஆனால் அவருக்கு அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்து சேரவில்லை. சினிமாவுக்குப் பாட்டு எழுதணும்கற ஆசையோடு சென்னை வந்ததும் கலைஞானம் ரத்தசக்தி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அது மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதைத் தொடர்ந்து என்ன பண்றதுன்னே புரியல. 1950 முதல் 1962 வரையில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஆளானார்.
இடைப்பட்ட காலங்களில் சில நாடகங்களில் நடித்தார். அவற்றில் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். அதற்கு அவரது வருமானமே 5 முதல் 10 ரூபாய் வரைதான். அதையும் ஒருசிலர் கொடுக்கவே மாட்டார்களாம். இலவசமாகக்கூட பல நாடகக் கம்பெனிகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுன்னா 1965ல் அவர் எழுதிய அரங்கேற்றிய வெள்ளிக்கிழமை என்ற நாடகம்தான்.
அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் வெற்றி அதுதான். ஆனாலும் அந்த நாடகத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்னும் ஒரு மாதம் இங்கே இருந்து பார்க்கிறேன். அதுக்குள்ள எனக்கு சினிமா வாய்ப்பு வரலன்னா நானும் மதுரை வந்து சேர்ந்து விடுவேன் என்று அவரது மனைவியிடம் சொன்னார். அப்போது அவரது மனைவி லேசாக சிரித்தார்.
‘12 வருஷமா சினிமாவுல சேரணும்னு நீங்க போராடிக்கிட்டு இருக்கீங்க. இந்த 12 வருஷம் பெற்றுத் தராததையா இந்த ஒரு மாசம் பெற்றுத் தரப்போகுதா’ என்பதுதான் அவரது சிரிப்புக்குப் பின்னால் இருந்த கேள்வி. மனைவியை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த கலைஞானம் முருகன் படத்தைப் பார்த்தார். அவர்கிட்ட முருகா, உனக்கே இது நல்லாருக்கா? என்னை இப்படி பாடாப் படுத்துறீயே? என கடுமையாக முருகனிடம் சண்டை போட்டார்.
அன்றைக்கு அவர் சொன்னது முருகன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுத்தாளர் ஏஎஸ்.முத்து அவரை சந்திக்க வந்தார். 'கலைஞானம் கிளம்புங்க. ஜோசப் தளியத்துக்கு கதை வேணுமாம். வாங்க சொல்லிட்டு வரலாம்' என்று அழைத்தார். அங்கு போனதும் கலைஞானம் ஜோசப் தளியத்துக்கு 2 கதை சொன்னார். அதில் ஒரு கதை அவருக்குப் பிடித்துப் போனது.
அதுதான் காதல் படுத்தும் பாடு. ஜெய்சங்கரும், வாணிஸ்ரீயும் நடித்து பின்னாளில் படமானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞானத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் வந்தன? அவர் எவ்வளவு பெரிய கதாசிரியர் ஆனார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment