Total Pageviews

Friday, December 5, 2025

சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படம் ரங்கோன் ராதா !

 கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற வரையறையை உடைச்செறிஞ்சவர் சிவாஜி (செந்தில்வேல் சிவராஜ் பதிவு)

பராசக்தி வெளியாகியாச்சு. சிவாஜியும் தமிழ்நாட்டுலே நெம்பர் 1 நடிகரா ஆயிட்டாரு. அதுக்கு அடுத்ததா மூணு படம் பண்ணி 5 வது படத்துக்காக சிவாஜிகிட்ட கதை சொல்ல வராங்க. நீங்க தான் ஹீரோன்னு சொல்லி கதை சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா, சிவாஜியோட ரோலை கேட்டா டென்ஷன் ஆயிடும். படத்துலே ஹீரோ ஒரு பெண் பித்தன், நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா அந்த வேஷம் இருக்கு. கதையை கேட்ட சிவாஜி என்ன சொல்லியிருப்பாரு? நமக்கு அதிர்ச்சிதான். ஆனா சிவாஜி சொன்ன பதில் 'நடிக்க ரொம்ப சம்மதம்'னு சொல்லிட்டாரு.

முதல் படம் வந்து சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை எங்கேயோ போய் வெச்சிருக்கு. வளர வேண்டிய நேரத்துலே இந்த மாதிரி படத்துலே யாராவது நடிக்க ஒப்புக்குவாங்களா? இங்க தான், ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற விதிய உடைச்செறிஞ்சார் சிவாஜி. திரும்பிப்பார்னு படத்துலே நடிச்சு சினிமா பீல்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு. அங்க ஆரம்பிச்சுச்சு சிவாஜியோட ஆட்டம். ஆன்ட்டிஹீரோ அப்படிங்கற வார்த்தையே அதில இருந்துதான் பிரபலமாச்சு.

கரெக்டா 8 மாசம் கழிச்சு ஒரு கதை வருது சிவாஜிகிட்டே. இந்த படத்துலே நீங்க நாட்டையே காட்டிக் கொடுக்கிற கதாநாயகனா நடிக்க வேண்டிய ரோல்னு சொல்றாங்க. நிஜத்துலே சிவாஜி மாதிரி தேசபக்தி நெறஞ்ச நடிகன் யாருமில்லே. இந்த குணம் இருக்கற சிவாஜி செஞ்ச அந்த படந்தான் அந்தநாள். இந்த படத்துலேயும் நிறைய புதுமைகளை செஞ்சிருப்பார் டைரக்டர். படத்துல ஹீரோவோட முதல் சீனே துப்பாக்கி குண்டு பாஞ்சு செத்துப் போற மாதிரி காட்சி. அதுவும் மனைவியே சுட்டு சாகடிக்கற மாதிரி காட்சி. படம் வெளியான பின்னாடி படம் பாத்தவங்க அரண்டு போனாங்க. பாட்டுக டான்சுன்னு வேற எதுவும் இல்லை படத்துலே.

சிவாஜியோட 12 வது படம் அந்தநாள். சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா நடிச்ச இந்த படத்தை இன்னைக்கு வரைக்கும் பிரமிப்பா பாத்துட்டுத்தான் இருக்காங்க. சிவாஜியோட 16வது படம் துளி விஷம், சிவாஜியோட சேர்ந்து கே.ஆர் ராமசாமி நடிச்ச படம். கே ஆர் ராமசாமிக்கு கதாநாயகன் வேசத்தை கொடுத்துட்டு சிவாஜி ஆன்ட்டிஹீரோவா நடிச்ச படம். இந்த படத்துக்கு முன்னாலே மனோகரான்னு பெரிய ஹிட் படத்துலே நடிச்சு அந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு 3 மொழியிலேயும் நடிச்சு டாப் ஆக்டரா தமிழ் சினிமாலே இருந்துட்டு வந்த நேரத்துலே சிவாஜி துணிஞ்சு வில்லனா நடிச்ச படம் இது.

இதுக்கு அடுத்தாகவும் ஆன்ட்டி ஹீரோவாத்தான் சிவாஜி நடிச்சாரு. ராமண்ணா ஒரு ரெண்டு ஹீரோ கதையை சொல்லி , நீங்க எந்த வேஷம் பண்றீங்கன்னு கேட்டார். ரெண்டு ஹீரோவுலே ஒரு ஹீரோ கேரக்டர் இதுதான். நண்பனோட மனைவியையே அடையத் துடிக்கிற, குடிப் பழக்கம் இருக்கற கேரக்டர் அது. இந்த கேரக்டர்லே இந்த படத்துலே நடிச்ச இன்னொரு நடிகர் (எம்ஜிஆர்) அந்த வேஷத்துலே நடிக்க ஒத்துக்கல . ஆனா சிவாஜியோ எந்த மறுப்பும் சொல்லாமே ஒப்புக்கிட்டார். அந்த படம்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் நடிச்ச கூண்டுக்கிளி.

சிவாஜியோட 19வது படம் எதிர்பாராதது . இதுவும் கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச கதைதான். பொதுவா நல்ல நிலைமையில் இருக்கிற ஹீரோக்கள் இந்த மாதிரி வேஷத்தை செய்ய ஒப்புக்கு மாட்டாங்க . சிவாஜியோட காதலி பத்மினி. சந்தர்ப்ப சூழ்நிலை பத்மினியோட ஏழ்மை நிலையாலே பத்மினி சிவாஜியோட அப்பா நாகையாவை கல்யாணம் பண்ணிக்குவார். சிவாஜி

வெளிநாட்டுக்கு போன பிறகு நடக்கிற சம்பவங்கள் இது. சிவாஜி பத்மினியோட காதல மறக்க முடியாமல் தவிக்கிறார். பத்மினி இப்போ சிவாஜிக்கு சித்தி முறை. ஒரு கட்டத்துல உணர்ச்சி வேகத்துல பத்மினிய கட்டித் தழுவ முயற்சிக்கிறார். அதைய பொறுத்துக்க முடியாத பத்மினி சிவாஜிய அடிச்சு தள்ளறார். இப்படி ஒரு கதையை பெரிய கதாநாயகன் கிட்ட சொன்னா நடிக்க

ஒப்புக்குவாங்களா ? வில்லங்கம் புடிச்ச இந்த கதையிலேயும் துணிஞ்சு நடிச்சவர் சிவாஜி.

சிவாஜி ஜெமினி நடித்த முதல் படம் பெண்ணின் பெருமை. சிவாஜியும் ஜெமினியும் அண்ணன் தம்பியா நடிச்ச படம் இது. இந்தப் படத்துல சிவாஜி ஜெமினிய ரொம்ப கொடுமைப் படுத்துற மாதிரி கேரக்டர். ஜெமினிகணேசன சவுக்காலே விளாசித் தள்ளுவார். அடிச்சு விரட்டுவார்.தொழிலாளர்களை மிரட்டுவார். இப்படி ஏக அட்டகாசம் பண்ணி இருப்பார் சிவாஜி இந்த படத்துல 

அதுமாதிரி சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படங்கள்லே ரொம்ப முக்கியமான படம் ரங்கோன் ராதா. கட்டுன மனைவியையே ரொம்ப கொடுமைப்படுத்துற கேரக்டர்ல சிவாஜி நடிச்சு மிரட்டி எடுத்து இருப்பார். இந்த படத்துல ரொம்ப கொடுமையான ஒரு காட்சி, கட்டுன மனைவியான பானுமதியையே நரபலி கொடுக்க துணிஞ்சுருவார் . இந்தப் படத்தோட கதை அண்ணா எழுதினது. வசனம் கருணாநிதி எழுதினது.

சிவாஜி திருடனா நடிச்ச படம் பாக்யவதி. பொய் பேசறது , ஏமாத்தறதுன்னு இந்த ஆன்ட்டி ஹீரோ வேஷத்துலே சிவாஜி நடிப்புலே பிரமாதப் படுத்தி இருப்பார். மனோகரான்னு படத்தை எடுத்த L.V.பிரசாத் மூணு வருஷம் கழிச்சு சிவாஜியை வெச்சு இந்த படத்தை எடுத்திருக்கார்னு நெனச்சா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு. அடுத்து உத்தமபுத்திரன் படம், விக்ரமன், பார்த்திபன்னு ரெண்டு வேஷம். இளவரசனா நடிச்ச விக்ரமன் வேஷத்தைதான் அதிகம் ரசிக்கும் படி செஞ்சிருப்பார் சிவாஜி. அம்மாவா வர்ற கண்ணாம்பா சிவாஜிக்கு அறிவுரை சொல்ற மாதிரி ஒரு காட்சி . அவங்க சொல்றத காதுலேயே வாங்கிக்காத படி , ஜாலியா ஊஞ்சலாடுவார் பாருங்க. அநாயசமா , அலட்டிக்காம பண்ணியிருப்பார்.

தமிழ் சினிமாவுல ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது. இப்படித்தான் ஒரு வரையறை செஞ்சு வச்சிருக்காங்க மக்கள். இந்த மாதிரி வரையறைக்குள் தன் படங்களை அடக்கிக் கொள்ளாதவர் சிவாஜி. புனர்ஜென்மம் படத்துல குடிச்சுட்டு நிதானம் எல்லாம் தவறி, ரோட்டுல எல்லாம் படுத்து கிடக்கும் அசல் குடிகாரன் போலவே சிவாஜி நடிச்சிருப்பார்.

பார் மகளே பார் படத்துல வறட்டு கௌரவம் பிடித்த , கர்வம் பிடித்த ஒரு மனிதராக சிவாஜி நடிச்சிருப்பார். புதிய பறவை படத்தில மனைவியை கொலை செய்த கணவன் பாத்திரத்துலே நடிச்சிருப்பார் . வசந்த மாளிகை படத்துல கூட அவருடைய கேரக்டர் என்னான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படி நடிப்புக்கும் , நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிவாஜி தன் படங்களை செஞ்சிருப்பார். ஒரு மனுஷன் எப்படி வாழணும்னு நல்ல ஹீரோ படங்கள் வந்ததோ, அதே மாதிரி ஒரு மனுஷன் எந்த மாதிரி வாழக் கூடாதுன்னு சொல்லறதுக்கும் இந்த மாதிரி படங்களில் நடிச்சார் சிவாஜி.

டி.ஆர்.ராஜகுமாரி !

 

புதுக்கோட்டை மன்னரே தேடி வந்து பெண் கேட்ட தமிழ் சினிமா காந்தக் கண்ணழகி: ஏழை டிரைவரை காதலித்த கதை தெரியுமா?

1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவரின் அழகில் மயங்கி புதுக்கோட்டை மன்னர் அவரை காதலித்துள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி அவரை விட்டுவிட்டு, தனது வீட்டின் டிரைவரை காதலித்தது பலரும் அறியாத ஒரு தகவல்.

1935-ம் ஆண்டு கர்வான் இ ஹையத் என்ற இந்தி படத்தில் ராணியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டி.ஆா.ராஜகுமாரி. 1936-ம் ஆண்டு குமார குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து கச்ச தேவயானி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து, எம்.கே.தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற பெருமை ஹரிதாஸ் படத்திற்கு உண்டு. சிவாஜியுடன் அன்பு, மனோகரா, தங்கமலை ரகசியம், தங்க பதுமை, எம்.ஜி.ஆருடன், பணக்காரி, குலேபகாவலி, புதுமை பித்தன், பாசம், பெரிய இடத்து பெண் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

கவர்க்கி கன்னி, காந்த கண்ணழகி என பல அடைமொழியுடன் வலம் வந்த டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை. இவரின் அழகில் மயங்கி அப்போது புதுக்கோட்டை மன்னாராக இருந்தவர் இவரை திருமணம் செய்துகொள்ள தூது விட்டுள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி மன்னராக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ராமண்ணாவும் தனது அக்காவிடம் யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்க, அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

இதன் காரணமாக அக்கா டி.ஆர்.ராஜகுமாரியை கண்காணிக்க ஒரு ஆளை தயார் செய்துள்ளார். அந்த நேரத்தில், ராஜகுமாரி வீட்டில் டிரைவர் ராகவன் என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவருக்கும் தகவல் கொடுக்க, அந்த டிரைவரை சராமாரியாக அடித்து வெளியில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த டி.ஆர்.ராஜகுமாரி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு அழுதுள்ளார். அதன்பிறகு டிரைவர் ராகவன், அந்த ஊரில் இருந்து கிளம்பி, நெல்லை அருகில் கேரளா எல்லையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு டி.ஆர்.ராஜகுமாரி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசிவரை தனியாக வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு தனது 77 வயதில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி தான் உச்சத்தில் இருந்தாலும், ஒரு டிரைவரின் எளிமையான மனதிற்கு மதிப்பு கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மன்னர் காதலித்தது, டி.ஆர்.ராஜகுமாரி டிரைவர் ராகவனை காதலித்த தகவலை இயக்குனர், தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.

Ajay Manjunath.

Saturday, November 29, 2025

காசிக்கு போறதுக்கு மட்டும் முடியுதா??!!!! கண்ணு முன்னாடி கண்ட கனவெல்லாம் கானல் நீரா போறதை எந்த தாயாலும் தாங்கவே முடியாது...??!!

 

காசிக்கு போணும்.... ரொம்ப நாளா ஆசை..?? எப்படி போறதுன்னு தெரியலை.??!! எனக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணி தர முடியுமான்னு கேட்டார்..

சரிம்மா.. உங்க பெண்ணிடம் கேட்டு எந்த தேதி சௌரியமா இருக்குன்னு சொல்லுங்க.. 

சென்னையில் இருந்து கிளம்பும் ஏதாவது குரூப் உடன் சேர்த்து விடுகிறேன்.... சொன்னேன்.

இந்த அம்மா கணவர் இறந்தபின் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மகள் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இரண்டு பெண்கள்.. இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒரு பெண் வேறு மாநிலத்தில்.. அருகில் இருக்கும் மகள் வீட்டில் இருக்கிறார்.

சரி,என்று சந்தோசமாக கிளம்பி போனவர் இன்று அதிகாலையிலேயே போன் பண்ணி விட்டார்... வீட்டில் போய் கேட்டு இருக்கிறார்... அவர் பெண் சண்டை பிடித்திருக்கிறாள்... "காசிக்கு போவது என்றால் குறைந்தது பத்து நாட்களாகும்" வீட்டை யார் பார்த்துக் கொள்வது .???பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது?!! என்று

உங்கள் மாமியாரை வரச்சொல்... பத்து நாட்கள் தானே... போய்விட்டு உன் அப்பாவுக்கு திதி கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்......என்று இவர் சொல்லி இருக்கிறார்...

ம்ஹும்,, அவர்களுக்கு நான்ல வடிச்ச கொட்டனும்.?? சண்டை பெரிதாகி இருக்கிறது......வீட்ல இருந்தா கை வலிக்குது... கால் வலிக்குது என்கிற.....இப்ப காசிக்கு போறதுக்கு மட்டும் முடியுதா??!!!!

 பென்ஷன் வாங்கற திமிரு..!!???அதான் ஊர் சுத்த கிளம்பிட்டியா......??!!

மகள் வார்த்தைகளால் வறுத்தெடுக்க கண்ணீர் மல்க நீங்கள் ஏற்பாடு பண்ண வேண்டாம் என்று எனக்கு போன் செய்தார்.(அம்மா ஸகஷ்ரா)

புருஷனோ, மற்றவர்களோ பேசினா வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு போற பெண்கள் பெத்த புள்ள பேசும் பொழுது நொறுங்கிப் போவாங்க... நிலைகுலைந்து போய்டுவாங்க.....??!! 

கண்ணு முன்னாடி கண்ட கனவெல்லாம் கானல் நீரா போறதை எந்த தாயாலும் தாங்கவே முடியாது...??!!

நிறைய வீடுகளில் இப்பொழுது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.. கணவரை இழந்த நிறைய பெண்கள் மகன் வீட்டை விட மகள் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்...தனியாக இருக்க பயப்படும் பெண்களின் பயமே அவர்களின் பலவீனம் ஆகிவிடுகிறது.

ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக எல்லாம் இழுத்து போட்டு சமையல் வேலை குழந்தைகள் கவனித்து கொள்வது என்று தன்னுடைய வயதுக்கு மேல் வேலை செய்து காண்பித்து பழக்கி விடுகிறார்கள்.....நாள் ஆக ஆக அதுவே ரொட்டீன் ஆகி விடுகிறது... சம்பளம் இல்லாத வேலைக்காரியாக மாறிப் போய் விடுகிறார்கள்.எந்த கவலையும் இன்றி மகள்கள் ஹாயாக வலம் வருகிறார்கள்..

இந்த அம்மாவுக்கு தன்னுடைய இன்னொரு மகள் வீட்டுக்கு போவதற்கு கூட இந்த மகள் பர்மிஷன் தர வேண்டும்.இவளுடைய குழந்தைகளுக்கு லீவு விட வேண்டும்.. கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறைக்கம்பிகளுக்கு நடுவே இருக்கிறார்கள்..

படித்த வேலைக்கு போவதை...பணம் நிறைய சம்பாதிப்பதை... சொகுசு வாழ்க்கை,அதிகாரம் மிக்க பதவி ஆகியவற்றை எல்லாம் கனவு ஆக்கிய பெற்றோர்கள் "தாய் தகப்பனை காப்பது தான் தலையாயக் கடமை "என்ற கனவை பிள்ளைகள் மனதில் பதிய வைக்க மறந்து விட்டார்கள்.... கல்லால் அடிப்பதை விட கொடுமை சொல்லால் அடிப்பது என்பதை புரிய வைக்க மறந்து விட்டார்கள்..

இது கால ஓட்டத்தின் பிழை என்பதை விட அறத்தை மறந்து விட்டோம்…!!

Sunday, November 23, 2025

இசையமைப்பாளர் -M. S. விஸ்வநாதன் & சந்திரபாபு அவர்கள் !

 இசையமைப்பாளர் -M. S. விஸ்வநாதன் அவர்கள் !

என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.!

நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, 'எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்’னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு.

டேய் விசு... நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே’னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.

இந்தியா - பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ ஜனாதிபதியா இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர்.

அப்போ அவர் முன்னால 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இந்தப் படுவா ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, 'நீ பெரிய ஞானஸ்தன்’னு சொல்லிட்டான். நாங்க பதறிப்போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்.

இசையமைப்பாளர் -M. S. விஸ்வநாதன் அவர்கள் 🥀

Tuesday, November 18, 2025

கமலுக்கு பாலசந்தர் கொடுத்த பேரதிர்ச்சி... கோபம் கொப்பளிக்க வந்த நேரத்தில் நாயகன் எடுத்த முடிவு !

 

எல்லாருக்குமே இக்கட்டான சூழல் என்று ஒன்று வரும். அது வரும்போது என்ன செய்யணும்னு ஒரு நிமிஷம் திகைச்சி நிற்போம். அதுல நிறைய தப்பும் நடக்கும். சுதாரிக்கிறவங்க பெரிய ஆளாகிடறாங்க. அப்படி ஒருவர் தான் கமல். என்ன நடந்ததுன்னு பாருங்க.

உதவி இயக்குனராகத் தன்னை சேர்த்துக் கொள்ளத் தான் பாலசந்தர் கூப்பிடுறாருன்னு நினைச்சி அவசரம் அவசரமாக கமல் ஓடி வந்தாராம். ஆனால் அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவின் தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்படி இருந்தும் கமல் நான் உதவி இயக்குனராகத் தான் வந்தேன் என்றாராம்.

ஆனால் அவரோ இந்தப் படத்தில் உன்னை நடிக்கத் தான் கூப்பிட்டேன் கறாராக சொன்னாராம் பாலசந்தர். அப்போது கமலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தற்செயலாக வெளியே எட்டிப் பார்த்துள்ளார். அங்கு ஏகப்பட்ட இளைஞர்கள் பாலசந்தரோட தரிசனம் கிடைக்காதா என வாய்ப்புக்காகக் காத்திருந்தார்களாம்.

அப்போது கமலின் மனசாட்சி ஒன்றை சொன்னதாம். இப்போ இந்த சான்ஸை விட்டா உனக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காது. பாலசந்தரை இனிமே சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்காது என்று.

உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம் கமல். அரங்கேற்றம் படத்தின் படப்பிடிப்பின் போது கமல் காட்டிய முகபாவங்கள் பாலசந்தரை ஆச்சரியப்பட வைத்தன. அவர் சொல்லாத பாவனைகளைக் கூட காட்டி அசத்தினாராம். கமலின் அந்த செய்கைகள் பாலசந்தரைப் பெரிதும் கவர்ந்தது.

அதனால் அரங்கேற்றம் படத்தின் கிளைமாக்ஸ்ல கமலுக்காகவே ஒரு காட்சியை வைத்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது உதவியாளரும் நண்பருமான அனந்துவிடம் இந்தப் பையன்கிட்ட பெரிய ஸ்பார்க் இருக்கு. நிச்சயமா இவன் பெரிய ஆளா வருவான்னு சொன்னாராம்.

அரங்கேற்றம் படம் வெளியான சில நாள்களிலேயே கமல் அவரை சந்திக்க வந்தார். அப்போது வெறும் 500 தான் எனக்கு சம்பளமா என அவரிடம் கோபத்தில் கேட்டாராம். இது சோதனை முயற்சி தான். இனி வரும் படங்கள்ல நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கும். நீ அற்புதமா நடிச்சிருக்கன்னு எல்லாரும் சொல்றாங்கன்னாரு. அதைக் கேட்டதும் கமல் அமைதியாகத் திரும்பினார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1973ல் பாலசந்தர் இயக்கிய படம் அரங்கேற்றம். சிவகுமார், பிரமிளா, சசிகுமார், எம்என்.ராஜம், ஜெயசித்ரா, எஸ்.வி.சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். வி.குமார் இசை அமைத்துள்ளார். கமல் வாலிபன் ஆனதும் வெளியான முதல் படம் இதுதான். இதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி வந்தார்.

Thursday, November 13, 2025

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

 

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

உயர்ந்த மனிதன் நடிகர் திலகம் சிவாஜியின் 125வது படம். ஏவிஎம் தயாரித்த அந்தப் படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு. அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சௌகார் ஜானகி. அந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பொருத்தவரைக்கும் முதலில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குப் பின்னால் ஏவிஎம்மில் தொழிலாளர்கள் பிரச்சனை ஏற்பட்டதால் இடையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காலம் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்குவதற்காக சௌகார் ஜானகி செட்டில் நுழைந்தார். அவரைப் பார்த்த உடனே சிவாஜிக்கு அதிர்ச்சி. ‘முதலில் படமாக்கிய காட்சிகளில் புடவையின் கலர் கருப்பு. இப்போது அந்தக் கலர் வேற மாதிரி இருக்கு. அதைக் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க’ன்னு அங்கு இருந்த உதவி இயக்குனர்களிடம் சிவாஜி சொன்னார்.

அதை அந்த உதவி இயக்குனர் சௌகார் ஜானகியிடம் சொன்னபோது ‘இல்ல இல்ல. நான் போட்டுருந்த புடவை இதுதான்’னு சாதித்தார். சிவாஜி அந்தளவுக்கு உறுதியா சொன்னதனால எடுத்தளவு அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்னு போட்டுப் பார்த்தார்கள். அப்படிப் போட்டுப் பார்த்த போது சிவாஜி போகல. சௌகார் ஜானகி மட்டும்தான் போனார். பார்த்தபோது தான் தெரிந்தது. அன்றைக்கு கட்டியிருந்தது கருப்புப் புடவைதான் என்று.

அங்கிருந்து படப்பிடிப்பு தளததிற்கு ஓடோடி வந்த சௌகார் ஜானகி சிவாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். என்னை மன்னிச்சிடுங்க. நான் தெரியாம சொல்லிட்டேன். அன்னைக்கு நான் கட்டி இருந்தது கருப்பு புடவை தான் என்றார். அந்தளவுக்கு மன்னிப்பு கேட்டார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் என்னன்னா அதற்கு முன்னாலே சிவாஜிக்கும் சௌகார் ஜானகிக்கும் இடையில் ஒரு மனத்தாங்கல்தான்.

அன்றைக்கு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிவாஜியோட ஞாபகசக்தி தான். உயர்ந்த மனிதன் படத்துக்குப் பின்னாலே எத்தனை படங்களில் சிவாஜி நடித்திருப்பார். அத்தனைப் படங்களில் நடித்த பின்னாலும் அந்தக் குறிப்பிட்ட காட்சியிலே நான் என்ன கலர் புடவை அணிந்திருந்தேன் என்பதை மிகச்சரியாக கூற முடிந்தது என்றால் அவருக்கு எப்பேர்ப்பட்ட ஞாபகசக்தி இருந்து இருக்கும் என்று சௌகார் ஜானகி பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலைத் தொகுத்து வழங்கியவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

விபத்தால் சிதைந்து போன ஜனகராஜ்... நீ தான் ராதாவுக்கு ஜோடி என்ற பாரதிராஜா!

 

80களில் நகைச்சுவை நடிகர்களில் ஜனகராஜ் நடிக்காத படங்களே இல்லை எனலாம். அப்போது அவருக்கு சினிமாவில் அந்தளவுக்கு மார்க்கெட் இருந்தது. பாரதிராஜா, பாக்கியராஜ, மணிரத்னம் இவரது நண்பர்கள். ஆரம்பத்தில் ஜெமினிகலர் லேப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் பழக்கமாம். அந்த வகையில் சினிமாவைத் தேடி இவர் போகவில்லை. இவரைத் தேடித்தான் சினிமாவே வந்ததாம்.சத்தமாகப் பேசுவதும், இவரது மெட்ராஸ் பாஷையும் தான் இவரை ரசிகர்கள் கொண்டாட காரணமாயின.

80 முதல் 90 வரை இவர் நடித்த படங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதன்பிறகு இவருடைய படங்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. பாரதிராஜா, டெல்லி கணேஷ், மணிரத்னம் இவரது ஆரம்ப கால நண்பர்கள். அதனால் அவர்களது படங்களில் இவர் பெரும்பாலும் நடித்து விடுவார். இவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் முகம் காயமானது.

அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் இவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள். ஒரு கண்; சிறியதாகவும், ஒரு கண் பெரியதாகவும் இருப்பதற்கும் இதுதான் காரணமாம். இனி சினிமாவில் எல்லாம் நடிக்கவே முடியாது என்று நினைத்தாராம்.

முகத்தில் அறுவை சிகிச்சை நடந்தபோது பாரதிராஜா பார்க்க வந்தாராம். என் அடுத்த படத்தில் ‘நீ தான் ஹீரோ. ராதாவுக்கு ஜோடி’ என சொல்ல இவரால் நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு வந்த படம் தான் காதல் ஓவியம். விபத்தில் சிதைந்த முகமே இவருக்கு அதன்பிறகு சினிமாவில் மார்க்கெட் வர காரணமாயின.

செவப்பு வில்லு என்ற படத்தில் தான் இவர் முதலில் நடித்தார். அதன் பிறகு கன்னிராசி படத்தில் நடித்து பிரபலமானார். கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம், பாலைவனச்சோலை படங்கள் இவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா என அவர் பேசும்போது தியேட்டரே சிரிப்பலையால் குலுங்கியது. நாயகன் படத்தில் கமலுடன் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார். அதே நேரத்தில் குணச்சித்திர கேரக்டரையும் செய்வார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரது காமெடி தூள் கிளப்பும். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன்பிறகு இவருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களே வந்தன. அதற்குள் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோர் வர ஆரம்பித்தனர். அப்போது ஜனகராஜின் படங்கள் குறைய ஆரம்பித்தன. ரஜினியின் அருணாச்சலம், மணிரத்னத்தின் ஆயுத எழுத்து போன்ற ஒரு சில படங்கள் தான் இவருக்குக் கிடைத்தன.

10 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியின் 96 என்ற படத்தில் நடித்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. அதன்பிறகு நீண்டகாலமாக அவர் கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார். கடைசியாக தாத்தா என்று ஒரு குறும் படத்தில் நடித்தார். இது தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான படம். நரேஷ் இயக்கியுள்ளார்.