Total Pageviews

Saturday, October 31, 2026

நீங்கள் கேட்டவை அர்ச்சனா !

 

சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி முயற்சி செய்து வந்தேன். ஆனால் அப்போது பல இயக்குநர்கள் என்னை நடிக்க வைக்க விரும்பாமல் புறக்கணித்தனர். அந்தச் சூழலில், நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் என்னுடன் இணைந்து நடித்த ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் க்ரீவ்ஸ் என்பவர் எனது நடிப்புத் திறமையைப் பாராட்டினார். மேலும், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

என்னைப் பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பாலு மகேந்திரா, ஒரு வாரம் கழித்து என்னை அழைத்துப் பேசினார். அப்போது, தனது படத்தில் நான் நடிக்கப் போவதாகக் கூறினார். எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது, கதாநாயகியே நீதான் என்று சொல்லி மகிழ்ச்சியளித்தார். அப்படித்தான் ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் ஒருவர் பாலு மகேந்திராவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். பல இயக்குநர்கள் என்னைப் புறக்கணித்த நிலையில், என்னுடைய நடிப்பை எந்த அடிப்படையில் நம்பி அவர் படத்தில் நடிக்க வைத்தார் என்பதுதான் அந்தக் கேள்வி. அப்போது நானும் அருகில்தான் இருந்தேன்.

அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாத பாலு மகேந்திரா, ஒரு தாளை எடுத்து அதில் சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் அதை அந்தப் பத்திரிகையாளரிடம் காண்பித்து விட்டு, மீண்டும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். ஆனால், அவர் என்ன எழுதியிருந்தார் என்பதை என்னிடம் காட்டவில்லை.

பின்னர், தனது தாயார் சொந்த ஊரில் சொந்தமாக வீடு கட்டுவதற்காகப் பட்ட சிரமங்களை மையமாக வைத்து ‘வீடு’ திரைப்படத்தை உருவாக்கினார். அந்தப் படத்திலும் எனக்குத்தான் கதாநாயகி வாய்ப்பு கொடுத்தார். அந்தத் திரைப்படம் எனக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

இந்த விருதைப் பெற்ற பிறகு, பாலு மகேந்திரா என்னிடம் வந்தார். அப்போது, முன்பு அந்தப் பத்திரிகையாளரிடம் காண்பித்த தாளை மீண்டும் எடுத்துக் கொடுத்து, “அன்று நான் எழுதியது இதுதான். இப்போது இதைப் படித்துப் பார்” என்றார்.

அந்தத் தாளில், ‘இந்தப் பெண் எதிர்காலத்தில் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக மாறுவார். தேசிய விருதும் பெறுவார்’ என்று அவர் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் எனக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. என்னைப் பற்றி அப்போதே இவ்வளவு நம்பிக்கையுடன் கணித்திருந்தாரே என்று நினைத்து வியந்து போனேன்.

பாலு மகேந்திரா எனக்கு ஒரு குரு மட்டுமல்ல; நல்ல நண்பரும், என் மீது அக்கறை கொண்ட நலன் விரும்பியும்கூட. ஆனால், எங்கள் இருவரையும் இணைத்து ஊடகங்களில் பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகின. இதனால், இருவரும் கலந்துபேசி, இனி இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டோம். அதன் பிறகு மற்ற இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன்.

பின்னர், சுமார் 14 ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகியிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியுள்ளேன். தற்போது சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன். இன்றும் என்னால் நடிப்புத் துறையில் தொடர்ந்து பயணிக்க முடிவதற்குக் காரணமாக இருப்பவர் இயக்குநர் பாலு மகேந்திராதான். 

#Archana #ActressArchana

No comments:

Post a Comment