ரஜினிகாந்த், இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த இடத்திற்கு அவர் வர பல காரணங்கள். அவரது ஸ்டைல், கதைத்தேர்வு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, அந்த இடத்தை நோக்கி நடத்திய பயணத்தில் முக்கிய மைல் கற்களாக பல படங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு படங்கள் அண்ணாமலை, பாட்ஷா.
அதுவரை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு, முதல் இடத்தில் இருந்த ரஜினியை அதற்கு அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்த மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம் 'அண்ணாமலை'. தமிழ் சினிமாவின் மாஸ் கமர்சியல், பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தில் ஒரு அப்டேட்டாக அமைந்தது 'அண்ணாமலை'.
ரஜினியின் பல படங்களில், டைட்டிலில் சூப்பர்ஸ்டார் என்று ஒரு மாஸான இசையுடன் வரும். அது உருவாக்கப்பட்டது அண்ணாமலை படத்தில்தான். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
முதலில் இந்தப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது. எதிர்பாராத விதமாக இயக்குனர் வசந்த் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் தயாரிப்பாளர் பாலச்சந்தர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்கு ஒத்துக் கொண்ட சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை மூன்றே மாதங்களில் முடித்தார். அதே ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளிவந்த அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.
ஒரு ஹீரோயிஸப் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ படங்கள் உதாரணமாய் இருக்கின்றன. அப்படி ஹீரோயிஸத்துடன் வந்த படங்கள்தான், மாஸ் படங்கள் என்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கலெக்ஷனிலும் மக்களின் மனங்களுடனான கனெக்ஷனிலும் இன்றைக்கும் கொடிகட்டிப்பறக்கும் படங்களாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவின் அப்படியான அதிரிபுதிரி மாஸ் ஹீரொ படமாக இன்றைக்கும் ‘அண்ணாமலை’ படத்தை அண்ணாந்து பார்த்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
பால்கார அண்ணாமலைக்கும் பணக்கார அசோக்கிற்குமான நட்பில் ஆரம்பித்து பின்னர் துரோகத்தில் வெடித்து, தொழிலிலும் ஸ்டேட்டஸிலும் உயர்வுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுகிற டெம்ப்ளேட் ஹீரோயிஸக் கதைதான் ‘அண்ணாமலை’. ஆனால் இப்படி டெம்ப்ளேட் சதுரவட்டங்களுக்குள் நிறுத்திவிடாமல் மலையளவு உயர்ந்து நின்றதுதான் ரஜினியின் மேஜிக்.
படத்தின் முதல் பலமாக சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் இடம் பிடித்தது. ஒருபக்கம் ரஜினியின் குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்புப் பாசம், குஷ்புவைப் பார்ப்பதிலும் பாம்பு பார்ப்பதிலுமாக உள்ள காமெடி கலாட்டா, ராதாரவியின் சைலண்டான வில்லத்தனம், ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்துக்குள் என்னென்ன அடங்கவேண்டுமோ அவை அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதை காட்சியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்ததுதான் சுரேஷ்கிருஷ்ணாவின் சாமர்த்தியம்; திறமை.
பால்காரர், தோளில் துண்டு, சைக்கிள் எனும் விஷயங்கள் சி செண்டர் ஆடியன்ஸை படத்துடன் கனெக்ட் செய்வதற்கு பெரிதும் உதவின. ஆனால் பால்காரராக, தோளில் துண்டுடன் சைக்கிளில் சுற்றுவது ரஜினியாக இருந்ததால்தான் இவையெல்லாம் எடுபட்டது.
‘கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்’ என்கிற ராதாரவியின் அசால்ட் வசனம், மிகப்பிரபலம். வில்லனுக்கு மேனரிஸம், வில்லனுக்கு பஞ்ச் டயலாக் என வந்ததும் ‘அண்ணாமலை’யைப் போலவே பின்னர் விஸ்வரூபமெடுத்தது.
ஒரு மாஸ் படத்தில் என்ன இருக்கவேண்டுமோ அவையெல்லாம் ‘அண்ணாமலை’யில் உண்டு. ஒரு ஹீரோயிஸ படத்துக்கு என்ன தேவையோ அவையெல்லாம் இதில் இருந்தன. உயரத்தில் இருக்கும் ரஜினியை, மலையளவுக்கு ‘அண்ணாமலை’ உயர்த்தியது என்பதும் உண்மை.
ரஜினி - தேவா - வைரமுத்து கூட்டணி ஒன்று உருவானதும் இங்கேதான். சுரேஷ்கிருஷ்ணாவை கமர்ஷியல் இயக்குநர் விசிட்டிங்கார்டு கொடுத்து, அடுத்த உயரத்துக்கு அவரை அழைத்துச் சென்றதும் ‘அண்ணாமலை’தான்!
1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி வெளியானது ‘அண்ணாமலை’. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாள், இருநூறு நாளைக் கடந்து ஹவுஸ்புல் கலெக்ஷனைக் கொடுத்தது.
இன்னும் பல வருடங்கள் கழித்து, ‘அண்ணாமலை’ படத்தை எந்த ஹீரோவாவது ரீமேக் செய்ய ஆசைப்படலாம். 30 வருடங்கள் கழித்தும் இப்போதும் மனதில் மலையென அமர்ந்திருக்கிற ‘அண்ணாமலை’யின் வெற்றி, அப்படி ரீமேக் செய்யத் தூண்டலாம். ஆனால், ‘மல... அண்ணாமலை’ என்று அது ஹிட்டடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்குறிதான் ரஜினி எனும் மேஜிக் எனும் ஆச்சரியக்குறி!!
Credits to Writter ✍️ #Rajinism #Annamalai #51YearsOfRajinism