எஸ்பிபியின் நிழலில் மனோவும், யேசுதாஸின் நிழலில் ஜெயச்சந்திரனும்
மறைக்கப்பட்டிருந்தாலும், யாராலும் மறைக்க முடியாத தனித்துவமான குரல்
மலேசியா வாசுதேவனுடையது, ஆனால் அந்தந்த நேரத்தில் அவர் புகழுக்கேற்றபடி
கொண்டாடப்பட்டாரா என்றால் இல்லை.
இன்று
2கே கிட்ஸ் கொண்டாடிய அளவுக்கு 'பேர் வச்சாலும்…' பாடலை வேறு யாரும்
கொண்டாடிவிடவில்லை. ஆனாலும் அவருடைய குரலின் அத்தனை கோணங்களையும் தமிழ்
மக்கள் கண்டனர் என்றுதான் கூறவேண்டும்,
அவர்
கவனிக்கப்படாமல் போனவர் அல்ல! அவருடைய சிறப்பம்சமே அவர் குரலில் ததும்பும்
கொண்டாட்ட தொனி தான். அதற்காகவே எண்ணற்ற குத்துப்பாடல்கள், கொண்டாட்டப்
பாடல்கள், பக்திப்பாடல்களை பாடவைத்து ரசித்திருக்கிறது தமிழ் சமூகம்.
"நெஞ்சுக்குள் அச்சம் இல்லை
யாருக்கும் பயமும் இல்லை
வாராதோ வெற்றி நிச்சயம்…"
என அவர் பாட அதை கேட்கும்போதே நெஞ்சுக்குள் வீரம் பொங்கி, முரட்டுக்காளை ரஜினியாக மாறும் வல்லமை கொண்டது அவர் குரல்.
இது மட்டுமல்ல, ஆசை நூறுவகை, சிங்கமொன்று புறப்பட்டதே போன்ற
பல மாஸ் பாடல்கள் ரஜினி திரைப்படங்களில் பாடியுள்ளார். இப்படி தமிழில்
கிட்டத்தட்ட 8,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரல் ஒலிக்காத
விசேஷங்கள் இன்றும் இல்லை அன்றும் இல்லை.
ஏன்
இவர் குரல் அவ்வளவு தனித்துவம் உடையது என்றால், யேசுதாஸ், எஸ்பிபி போன்ற
வளைவான குரல் அல்ல இவருடையது. நாமோ, நம் தந்தையோ பாடினால் யதார்த்தமாக
வரும் குரல் என்பதாலேயே இதயத்துடன் அவ்வளவு நெருங்கி வருகிறார்.
இது
இளையராஜாவுக்கும் தெரியும். 'பூவே இளைய பூவே' பாடலின் இன்டர்லூடில்
இளையராஜா தனது ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பார், சரணம் வந்ததும்
எல்லாவற்றையும் முடிப்பார், வாசுதேவனின் குரல் மட்டும் மேலோங்கும்.
'குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழியிரண்டு கடலானதே
எனது மனம் படகானதே…'
என அந்த வரிகளில் அவர் குரலுக்காகவே உருகியவர்கள் பலர்.
மலேசியா
வாசுதேவன் என்றாலே, மாரியம்மா மாரியம்மா, தண்ணி கருத்துருச்சு, காதல்
வைபோகமே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற குத்துப்பாடல்கள், பக்திப் பாடல்கள்
பலருக்கு
நியாபகம் வரலாம். ஆனால் பல உள்ளம் நெகிழவைக்கும் குரலை பல மெலடி
பாடல்களுக்கும், சோகப்பாடல்களுக்கும் கொடுத்தவர்தான் வாசுதேவன்.
முதல்
மரியாதை திரைப்படத்தில், 'பூங்காற்று திரும்புமா', 'வெட்டிவேரு வாசம்',
தர்ம யுத்தம் திரைப்படத்தில் 'ஒரு தங்க ரத்தத்தில்', விடியும் வரை காத்திரு
திரைப்படத்தின், 'நீங்காத எண்ணம் ஒன்று', தூறல் நின்னு போச்சு
திரைப்படத்தின், 'தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி', நிறம் மாறாத பூக்கள்
திரைப்படத்தின், 'ஆயிரம் மலர்களே', கிழக்கே போகும் ரயிலின் 'கோவில் மணி ஓசை
தன்னை' போன்ற பல உருகவைக்கும் பாடல்களை பாடியுள்ளார். அதில் அவர் குரலே
ஓங்கி நிற்கும் என்பதுதான் தனிச்சிறப்பு.
1985இல்
சின்ன வீடு என்ற பாக்யராஜ் திரைப்படத்திற்கும், முதல் மரியாதை
திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே
சிச்சுவேஷன், ஆனால் முற்றிலும் வேறு வேறு ஸீன். பாக்யராஜ் தன் மனைவியை
விட்டு வேறு பெண் மீது மையல் கொள்வதையும், சிவாஜி பாடும் பாட்டிற்கு ராதா
எசப்பாட்டு பாடும் முதல் பாடலும்தான் அது. இரண்டிற்கும் இசை அளவில் அவரால்
முடிந்த வேறுபாட்டை இளையராஜா கொடுத்தார் ஆனால் இரண்டு பாடலுக்கும் அடிநாதம்
'என்டர் இன்டு தி நியூ லைஃப்' எனப்படும் ஒரு 200 வருட பழைய சிம்ஃபனி தான்.
இருவருமே புதிய ஒரு வாழ்க்கைக்குள் செல்வதால், 'ஏ குருவி, சிட்டுக்குருவி'
பாடலிலும், 'சிட்டுக்குருவி வெட்கப்படுது' பாடலிலும் வேண்டுமென்றே
பயன்படுத்தினார் இளையராஜா.
ஆனால்
அந்த இரு பாடல்களும் ஒன்றென தெரியாததற்கு பெரும் காரணம் வாசுதேவனின்
தனித்துவமான குரல், மற்றொன்றை எஸ்பிபி பாடினார். இந்த வேறுபாட்டை கொடுக்க
அப்போது இளையராஜாவுக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு வாசுதேவன் தான்.
அந்த
வேறுபாட்டை பெரிதும் ரசித்தவரும் கூட என்று சொல்லலாம். 'ஏ ராசாத்தி', என்ற
பாடல் அந்த காலத்தில் கிட்டத்தட்ட ஒரு 'ஆக்கப்பெல்லா' தான். அவ்வளவு
வித்யாசமாக வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. வாசுதேவன்
அவரால் முடிந்த அளவிற்கு எல்லா கோணங்களையும் அந்த பாடலில்
கொடுத்திருப்பார். அதே போல அவரது குரலின் முற்றிலும் வேறு கோணத்தை எடுத்தது
'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல்'. கிட்டத்தட்ட மிமிக்ரி செய்து பாடியது
போலவே இருக்கும், அந்த பாடலில் சப்பாணி கதாபாத்திரத்திற்கு அவ்வளவு
பொருத்தமான குரலை வேறு யாராலும் தந்திருக்க முடியாது. முக்கியமாக இரண்டு
ஹீரோக்கள் இணைந்து பாடும் பாடல்களுக்கு பெரிதும் இளையராஜா விரும்புவது
வாசுதேவனை தான்.என்னம்மா கண்ணு சவுக்யமா பாடலாகட்டும், தென்மதுரை வைகை நதி
பாடலாகட்டும். ரஜினிக்கு எஸ்பிபி வாய்ஸ் என்றால், அடுத்து இருப்பவருக்கு
மலேசியா வாசுதேவன் என்பது இளையராஜா வைத்திருந்த எழுதப்படாத விதி.
படித்ததில் பிடித்தது - - - - - - -