Total Pageviews

Saturday, December 28, 2024

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன் !

 

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த டாப் 10 படங்களில் ஒன்று 'நெற்றிக் கண்'. இந்த படத்தின் கதையை விசு எழுதியிருந்தார். இந்த கதையில் சிறப்பு என்னவென்றால், அதற்கு முன் வந்த படங்கள் அனைத்திலும் அப்பா நல்லவராக இருப்பார், மகன் தீயவனாக இருப்பான். அப்பா, மகனை திருத்துவது மாதிரி இருக்கும். ஆனால் இந்த கதையில் அப்பா பெண் பித்தராக இருப்பார். மகன் அவரை திருத்துவதாக மாற்றி எழுதப்பட்ட கதை.

இந்த கதை விசு நாடகத்திற்காக எழுதியது. பாலச்சந்தரிடம் படித்து பார்க்க கொடுத்தார். கதையை படித்த கே.பாலச்சந்தர் இதை படமாகவே தயாரிக்கலாம் என்று கூறி உடனே எஸ்.பி.முத்துராமனை வரச் செய்து இந்த கதையை நீங்களே இயக்குங்கள், ரஜினி நடிக்கட்டும் என்றார். கதையை படித்து பார்த்த எஸ்.பி.முத்துராமன் “இந்த படத்தை நான் இயக்க மாட்டேன். வேறு யாரையாவது இயக்க சொல்லுங்கள், அல்லது ரஜினிக்கு பதிலாக வேறு யாராவது நடித்தால் நான் இயக்குகிறேன். ரஜினியை ஒரு போதும் பெண்பித்தராக என்னால் காட்ட முடியாது. நான் தடுமாறி விடுவேன்” என்று கூறிவிட்டார்.

உடனே ரஜினியை அழைத்த பாலச்சந்தர் அவருக்கு கதை சொன்னார். “ரஜினியும் சூப்பரா இருக்கே. எனக்கு நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிப்பது நான் ரெடி” என்று கூறிவிட்டார். ஒரு வழியாக எஸ்.பி.முத்துராமனை சம்மதிக்க வைத்து படத்தை உருவாக்கினார்கள்.

இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடம் என்பதால் ஒளிப்பதிவாளர் பாபு அப்போது அறிமுகமாகி இருந்த 'மாஸ்க் ஷாட்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் படத்தை எடுத்தார். 90 மாஸ்க் ஷாட்கள் படத்தில் இடம் பெற்றது. இரட்டை வேட தொழில்நுட்பத்தில் அது ஒரு மைல் கல்லாக இருந்தது. படத்தின் மகன் சந்தோஷ் கேரக்டரை விட தந்தை சக்ரவர்த்தி கேரக்டர்தான் பேசப்பட்டது.

தேன் மொழி

No comments:

Post a Comment