Total Pageviews

Monday, December 30, 2024

விஜய்காந்த் !

விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.

"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.

கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'

ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.

தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......

தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.

தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.

இவ்வளவு ஏன்?.... விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக் காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்

'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'

150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக் கையும் விஜய்காந்துக்கு இருந்தது. அவர் ஐநூறு, ஆயிரம் படங்களாவது நடித்திருந்தால்......💗💗

No comments:

Post a Comment