அந்த நடிகருக்கு இப்படியும் கூட ஒரு முகம் உண்டு என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் !
அந்த நடிகர் தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம்.
முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை ?
அதுதான் இல்லை !
ஒவ்வொரு விருந்துக்கும் யாராவது ஒரு பிரபலத்தை அழைத்து வந்து அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து அதைப் பார்த்து மகிழ்வாராம் அந்த நடிகர்.
அந்த நடிகர் - ஜெய்சங்கர் !
சரி, ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர் ?
புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம்.
“ஏங்க ஜெய், விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க. அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ?”
ஜெய்சங்கர் புன்னகைத்தாராம்.
நண்பர் விடவில்லை : “சிரிக்காதீங்க ஜெய், ஒண்ணு நீங்க பரிமாறுங்க. அல்லது உங்க மனைவி குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க. யாரோ ஒரு மூணாவது மனிதர்...”
நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி :
“கொஞ்சம் பொறுங்க. நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா ? அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க. அதுக்கான நேரம் இல்லாதவங்க. அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம் .
அதனால இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி அவங்களை நான் கூப்பிடறேன். இந்த மாதிரியும் இடம் இருக்கு. இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான் ! இப்படி வர்ற பத்து பேர்ல ஒரே ஒருத்தர் மனசில இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ! எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா ? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன்!"
ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்.
(2000 ஜூன் 3 ): நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம் .
No comments:
Post a Comment