Total Pageviews

Sunday, December 22, 2024

ஸ்ரீதர் - எம்.எஸ்.வி. - பட்டுக்கோட்டையார் ! மாடர்ன் தியேட்டர்ஸ் !

 மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் கெடுபிடிகளுக்குப் பேர் போனவர். லண்டனில் படித்தவர். அவரது இருக்கைக்குப் பின்னால் சாட்டை தொங்கும். அவருக்கு எதிரே அமர்ந்து பேச இருக்கைகள் இருக்காது. எதிரே யாரையாவது உட்கார வைத்துப் பேசினால் நேரம் கெடும் என்பதால் யாரையும் அவர் உட்கார அனுமதிப்பதில்லை,

அப்புறம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு எழுதும் கதை வசனத்தில் ஒரு வரியை மாற்ற வேண்டும் என்றாலும்கூட வசனம் எழுதுபவரை சேலத்துக்கு ரயில்மூலம் வரவழைப்பார். கதாசிரியர் நேரில் வந்துதான் வசனத்தை மாற்ற வேண்டும். தொலைபேசியில் பேசி மாற்றுகிற கதை எல்லாம் இல்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடம் ஒரு மகத்தான நூலகம் இருந்தது. அத்தனையும் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்கள்.

ஒருநாள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்சில் இருந்து ஸ்ரீதருக்கு அழைப்பு வந்தது. ஸ்ரீதர் அப்போது இயக்குநர் இல்லை. அவர் ஒரு கதாசிரியர். கதை வசனம் எழுதுபவர். பல திரைப்படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதி இருந்தார். ஸ்ரீதர், சேலத்துக்குக் கிளம்பிப்போனார். பின்னர் சுந்தரத்தை சந்தித்தார். .

‘படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு எதிர் பார்க்கிறீங்க?’ என்றார் சுந்தரம்.

‘வழக்கமா 3000 ரூபாய் வாங்குவேன். மாடர்ன் தியேட்டர்ஸ் பெரிய நிறுவனம் என்பதால் 4 ஆயிரத்தை எதிர்பார்க்கிறேன்’ என்றார் ஸ்ரீதர்.

‘அதெல்லாம் இல்லை. 2 ஆயிரம் ரூபாய்தான் தர முடியும். விருப்பம் இருந்தால் எழுதுங்கள். இல்லாவிட்டால் கிளம்புங்கள்’ என்று சொல்லிவிட்டார் சுந்தரம்.

முகத்தில் அடித்த மாதிரியான பளார் பதில் அது. ஸ்ரீதர் யோசிக்கவில்லை. ‘சரி’ என்று அதற்கு ஒப்புக்கொண்டார். காரணம், மாடர்ன் தியேட்டர்ஸ் எடுக்கும் திரைப்படத்துக்கு வசனம் எழுத ஸ்ரீதர் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு அவர் கதை வசனம் எழுதுகிறார் என்பது வெளியில் எல்லோருக்குமே தெரிய வரும். அதை வைத்தே, மற்ற திரைப்பட நிறுவனங்களில் ஸ்ரீதர் 5 ஆயிரம் ரூபாய் கூட இனி வாங்க முடியும்’

அதேப்போல வசனத்தை மாற்ற, தன்னை சேலத்துக்குக் கூப்பிடும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் நூலகத்தில் திரைப்பட நுட்பங்கள் தொடர்பான நூல்களை வாசிக்க முடியும். இதனால்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு கதை வசனம் எழுத உடனே ஒப்புக் கொண்டார் ஸ்ரீதர். - இது ஸ்ரீதர் பாணி....

இது இப்படி இருக்க, ஒருநாள் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை, ‘சான்ஸ் வாங்கித் தர்றேன் வா’ என்று மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடம் அழைத்துப் போனார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சுந்தரத்தின் முன்னிலையில் வழக்கம் போல நாற்காலிகள் இல்லை. ‘இவர் சிறப்பான கவிஞர். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களுக்கு பாடல் எழுத இவரைப்பயன்படுத்தலாம்’ என்று எம்.எஸ்.வி. சொல்ல, ‘எதையாவது எழுதிக்காட்டுங்களேன்’ என்றார் சுந்தரம்.

நின்று கொண்டேதான் எழுத வேண்டும். ஒரு காகிதமும், பேடும் வந்து சேர்ந்தது.

பட்டுக் கோட்டையார் இரண்டு வரிகள் எழுதி சுந்தரத்திடம் நீட்டினார். அதைப்பார்த்த மறுகணமே 2 நாற்காலிகளைக் கொண்டுவரச் சொல்லி அவர்களை உட்காரவைத்தார் சுந்தரம். பிறகு, ‘வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்’ என்று அவர்களை அனுப்பிவைத்தார்.

வெளியே வந்ததும் எம்.எஸ்.வி. பட்டுக்கோட்டையாரிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். ‘சுந்தரம் நாற்காலி போடச் சொல்லுற அளவுக்கு அப்படி என்னய்யா எழுதினே?’

‘ஒரு மண்ணாங்கட்டியும் எழுதவில்லை. முதலில் உட்கார 2 நாற்காலிகளைப் போடவும்னு எழுதினேன்’ என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... இது பட்டுக்கோட்டை பாணி...

No comments:

Post a Comment